தேடுதல்

கிழக்கு எருசலேமில் பாலஸ்தீனியரின் வீடுகள் அழிக்கப்படுகின்றன கிழக்கு எருசலேமில் பாலஸ்தீனியரின் வீடுகள் அழிக்கப்படுகின்றன 

பாலஸ்தீனியரின் வீடுகள் இடிப்பு மனிதாபிமான சட்டத்திற்கு முரணானது

Beit Hanina புனித யாகப்பர் ஆலயத்தில் விழாக் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் மீது, கோபத்தைத் தூண்டும் விதத்தில், தக்காளிகளையும், ஏனையப் பொருள்களையும் வீசியுள்ளனர், யூத தீவிரவாதக் குழுக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேலில் கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு எதிராக, யூத தீவிரவாதக் குழுக்கள் நடத்தியுள்ள, சினத்தைத் தூண்டும் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், புனித பூமி கத்தோலிக்கத் தலைவர்கள்.

ஜூலை 19ம் தேதி, கலிலேயாவின் Jish பகுதியில், இனம் தெரியாத வன்முறையாளர்கள், கிறிஸ்தவர்களின் வாகனங்களைச் சேதப்படுத்தி, எபிரேய மொழியில், கேவலமான வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர். மேலும், இவர்கள், ஜூலை 12ம் தேதி, கிழக்கு எருசலேமின் புறநகரிலுள்ள Beit Hanina புனித யாகப்பர் ஆலயத்தில் விழாக்கொண்டாடிய கிறிஸ்தவர்கள் மீது, கோபத்தைத் தூண்டும் விதத்தில், தக்காளிகளையும், ஏனையப் பொருள்களையும் வீசியுள்ளனர்.

இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறித்து கவலை தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள, புனித பூமி கத்தோலிக்கத் தலைவர்கள், இவை குறித்து, இஸ்ரேல் அரசியல்வாதிகள் மத்தியில் விழிப்புணர்வு தூண்டப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். (Fides)

இதற்கிடையே, புனித பூமியின் மேற்கு கரையில், பாலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேல் நிர்வாகம் இடித்துவரும் நடவடிக்கை, இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ள உலகளாவிய மனிதாபிமான சட்டத்தோடு ஒத்துவரவில்லை என்று, மூன்று ஐ.நா. உயர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியைப் பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே, இந்த வீடுகள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதால் இடிக்கிறோம் என்று கூறி வருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் நாட்டு  காவல்துறையினர் 700 பேர், மற்றும்  இராணுவத்தினர் 200 பேர், இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன.  

1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்குப் போரையடுத்து, இஸ்ரேல், மேற்கு கரையை கைப்பற்றியது. பின், கிழக்கு எருசலேம் பகுதியையும் கைப்பற்றியது. உலகளாவிய சட்டம், இரண்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் இதனை மறுத்து வருகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2019, 14:09