தேடுதல்

Vatican News
கர்தினால் Bechara Boutros, மாரனைட் ஆயர்களுடன் கர்தினால் Bechara Boutros, மாரனைட் ஆயர்களுடன்  (BKE-mich)

"பாலஸ்தீனியர்களின் முகத்தில் விடப்பட்டுள்ள அறை"

பாலஸ்தீனியர்களை, வெவ்வேறு நாடுகளில் குடியமர்த்த, அமெரிக்க ஐக்கிய நாடு நிதி உதவி செய்ய முன்வந்திருப்பது, "இம்மக்களின் முகத்தில், விடப்பட்டுள்ள அறை" - கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராஹி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீன நாட்டிலிருந்து வெளியேறி, வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை, அந்தந்த நாடுகளில் குடியமர்த்த அமெரிக்க ஐக்கிய நாடு நிதி உதவி செய்ய முன்வந்திருப்பது, "இம்மக்களின் முகத்தில், இந்த நூற்றாண்டு விடப்பட்டுள்ள அறை" என்று, மாரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராஹி அவர்கள் கூறியுள்ளார்.

லெபனான் நாட்டின் Gherfine எனுமிடத்தில் புனித ஸ்தேவான் ஆலயத்தை அண்மையில் அர்ச்சித்த கர்தினால் புத்ரோஸ் ராஹி அவர்கள், பாலஸ்தீனிய மக்களை அவர்களது சொந்த நாட்டில் மீண்டும் குடியேற்றுவது ஒன்றே, அவர்களுக்கு ஆற்றப்படும் மிகச் சிறந்த சேவையே தவிர, அவர்களை புலம் பெயர்ந்தோராய் வாழவைப்பது அல்ல என்று கூறினார்.

இஸ்ரேல் பாலஸ்தீனாவுக்கு இடையே அமைதியை உருவாக்குவதாகக் கூறி, பாலஸ்தீனியர்களை வெவ்வேறு நாடுகளில் குடியமர்த்த அமெரிக்க ஐக்கிய நாடு நிதி உதவி செய்ய முன்வரும் ஒரு திட்டத்தை "இந்நூற்றாண்டின் மிகச் சிறந்த திட்டம்" என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் அவர்கள் கூறியதற்குப் பதில் மொழியாக, கர்தினால் புத்ரோஸ் ராஹி அவர்கள், இத்திட்டம் பாலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்படும் அறை என்று கூறினார்.

இஸ்ரேல் அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, லெபனான், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் குடியேறியுள்ள பாலஸ்தீனிய மக்களை, அந்தந்த நாடுகளில் குடியமர்த்த அமெரிக்க ஐக்கிய நாடு 50 பில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்யத் தயாராக உள்ளது என குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.(AsiaNews)

03 July 2019, 15:05