பிரேசில் நாட்டில், அருள்பணியாளர் பயிற்சியில் இருப்போரின் மாநாடு பிரேசில் நாட்டில், அருள்பணியாளர் பயிற்சியில் இருப்போரின் மாநாடு 

அருள்பணி பயிற்சியில், அனுப்பப்படுதல் முக்கிய அம்சம்

இறைவன் விடுக்கும் அழைப்பை, அவர் வழங்கும் பணியிலிருந்து பிரித்துக் காண இயலாது என்பதால், குருத்துவ பயிற்சி இல்லங்களில், பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது முக்கியம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டில், அருள்பணியாளர் பயிற்சியில் இருப்போர் மேற்கொண்ட மாநாடு, மறைபரப்புப் பணியின் உண்மை புரிதலையும், இவ்வுலகில் பிரேசில் தலத்திருஅவையின் பங்கையும் உணர்த்தியது என, இளம் குருத்துவ மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

பிரேசில் நாட்டின் 104 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 235 குருத்துவ மாணவர்கள் பிரேசில் நாட்டின் Santo Antônio da Patrulha நகரில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

"நீங்கள்... உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (தி.ப. 1:8) என்ற விருதுவாக்கை மையப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் இளையோர் விடுத்த இந்த இணை அறிக்கையில், அருள்பணியாளர் பயிற்சியில், அனுப்பப்படுதல் ஒரு முக்கிய அம்சம் என்பதை தாங்கள் உணர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இறைவன் விடுக்கும் அழைப்பை, அவர் வழங்கும் பணியிலிருந்து பிரித்துக் காண இயலாது என்பதை தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள இளம் குரு மாணவர்கள், பயிற்சி இல்லங்களில், பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, பேசும் மொழி, உரையாடல் திறமைகள், கூட்டுறவு முயற்சிகள் ஆகிய அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க தங்கள் மாநாடு தங்களுக்கு சவால்விடுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

வானகத் தந்தையின் இரக்கம் நிறைந்த முகத்தை இவ்வுலகினருக்கு வெளிப்படுத்துவதே, தங்கள் மறைபரப்புப் பணியின் மிக முக்கியக் கூறு என்பதையும் இளம் குரு மாணவர்களின் அறிக்கை அறிக்கையிடுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2019, 15:13