தேடுதல்

Vatican News
பாஸ்ராவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள மரியா திருத்தலம் பாஸ்ராவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள மரியா திருத்தலம் 

பாஸ்ராவில் புது ஆலயத் திறப்பு நம்பிக்கையின் அடையாளம்

பாஸ்ரா அன்னை மரியா திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள், இத்தாலிய கட்டட கலைஞர்களால் , 1907ம் ஆண்டில் துவங்கப்பட்டாலும், 1930ம் ஆண்டில்தான், அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் பாஸ்ராவில், பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு, மூடப்பட்டு கிடந்த அன்னை மரியா திருத்தலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்று, பாஸ்ரா கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Alnaufali Habib Jajou அவர்கள் கூறியுள்ளார்.

இத்திருத்தலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, பேராயர் Habib Jajou அவர்கள், விசுவாசிகள் அன்னை மரியாவிடம் செபிப்பதற்கென அமையும் ஒரே திருத்தலமாக, இது உள்ளது என்று தெரிவித்தார்.

இத்திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள், இத்தாலிய கட்டட கலைஞர்களால் கோதிக் கலைவண்ணத்தில், 1907ம் ஆண்டில் துவங்கப்பட்டாலும், 1930ம் ஆண்டில்தான், அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. எனினும், 1980களில், ஈராக்கிற்கும், ஈரானுக்கும் இடையே  இடம்பெற்ற போரில், இந்த ஆலயம், ஏழைக் குடும்பங்கள், தங்கும் முகாமாக மாறியது. இவ்வாலயத்தில், 3,877 குழந்தைகள் திருமுழுக்குப் பெற்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு, மூடப்பட்டு இருந்த இந்த அன்னை மரியா திருத்தலம், தற்போது எல்லா மக்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும், இது பாஸ்ரா நகருக்கு முக்கியமான வழிபாட்டுத்தலம் என்றும் பேராயர் Habib Jajou அவர்கள் கூறினார்.

இத்திருத்தலம், 1954ம் ஆண்டு முதல், 1971ம் ஆண்டு வரை ஆயரின் தலைமை இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது. (AsiaNews)

20 July 2019, 14:21