தேடுதல்

Vatican News
சிரியாவில் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் உதவிகள் சிரியாவில் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் உதவிகள்  (Copyright: Aid to the Church in Need)

சிரியாவில் இரண்டு புதிய உதவித் திட்டங்கள்

சிரியாவில் போரிடும் அனைத்து தரப்பினரும், உலகளாவிய மனிதாபிமான சட்டத்தின் விதிமுறைகளை மதித்து, அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் உள்கட்டமைப்புக்கும் உறுதியளிக்க வேண்டும் – ஐ.நா. நிறுவனம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கு உதவுவதற்கென, இரண்டு புதிய திட்டங்களைத் துவங்கியுள்ளது, Aid to the Church in Need எனப்படும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

சிரியாவில் போர் முடிவடையவில்லை, பயங்கரவாதம் இன்னும் முறியடிக்கப்படவில்லை, நம் சகோதரர், சகோதரிகளுக்கு, எப்போதும் இருந்ததைவிட இப்போது உதவி அதிகம் தேவைப்படுகின்றது என்று, அந்த பிறரன்பு அமைப்பின் இத்தாலிய பிரிவித் தலைவர் Alessandro Monteduro அவர்கள் தெரிவித்தார்.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் காயமடைந்தவர்களுக்கென, அலெப்போவில் ஒரு திட்டத்தையும், கடுமையான நோயால் தாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கென தமாஸ்கில் ஒரு திட்டத்தையும் துவங்கியுள்ளது, Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு.   

இதற்கிடையே, சிரியாவில் கடந்த சில நாள்களில் இடம்பெற்ற வான்வழி தாக்குதல்கள் உட்பட குண்டுவெடிப்புகளால் அப்பாவி மக்களின் பாதுகாப்பும், நாட்டின் உள்கட்டமைப்பும் வெகுவாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என்று, ஐ.நா. பொதுச்செயலர் கவலை தெரிவித்துள்ளார்.

ஜூலை 12ம் தேதியிலிருந்து மட்டும், முப்பதுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று, ஐ.நா. கூறியுள்ளது. (ACN)

19 July 2019, 15:10