தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையில் ஜப்பான் பயணிகள் புதன் மறைக்கல்வியுரையில் ஜப்பான் பயணிகள் 

அமைதியை மீண்டும் வலியுறுத்தும் ஒரு திருத்தூதுப் பயணம்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் ஹிரோஷிமா அமைதி விண்ணப்பத்தை உருவாக்கியபின், 38 ஆண்டுகள் 9 மாதங்கள் கழித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டிற்கு வருகை தருவது, அமைதியை மீண்டும் வலியுறுத்தும் ஒரு திருத்தூதுப் பயணமாக அமையும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் ஹிரோஷிமா அமைதி விண்ணப்பத்தை உருவாக்கியபின், 38 ஆண்டுகள் 9 மாதங்கள் கழித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டிற்கு வருகை தருவது, அமைதியை மீண்டும் வலியுறுத்தும் ஒரு திருத்தூதுப் பயணமாக அமையும் என்று, ஜப்பான் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Mitsuaki Takami அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைதியை நிலைநாட்டவும், அணு ஆயுதங்களை இவ்வுலகிலிருந்து முற்றிலும் அழிக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்து வரும் செய்திகள் தகுந்த தாக்கங்களை உருவாக்கி வருகின்றன என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, இந்த தாக்கங்களின் விளைவாக, 2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தம் ஐ.நா. அவையில் உருவானதை சுட்டிக்காட்டியுள்ளது.

அணு ஆயுதங்களை ஒழிப்பது மட்டும் இவ்வுலகில் அமைதியைக் கொணராது, மாறாக, அனைவருக்கும் நீதி மற்றும் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமே இவ்வுலகில் அமைதியைக் கொணரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு செய்திகளில் கூறிவருவதை, ஜப்பான் ஆயர்களின் அறிக்கை நினைவுறுத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும், ஜப்பானில், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி முடிய அமைதிக்காக வேண்டும் பத்து நாள்கள் கடைபிடிக்கப்படுவதைப்போல் இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் என்று இவ்வறிக்கையில் கூறும் ஆயர்கள், திருத்தந்தையின் வருகையால், இந்த அமைதி வேண்டுதல்கள் கூடுதல் பொருள் பெறுகின்றன என்று கூறியுள்ளனர்.

1981ம் ஆண்டு புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் சென்றதையடுத்து, ஏறத்தாழ 40 ஆண்டுகள் சென்று, இவ்வாண்டு, நவம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2019, 15:04