தேடுதல்

Vatican News
கடந்த 8 ஆண்டுகளாய் சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரினால் அழிந்துள்ள அலெப்போ நகரம் கடந்த 8 ஆண்டுகளாய் சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரினால் அழிந்துள்ள அலெப்போ நகரம்  (AFP or licensors)

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 2

மனித சமுதாயத்தில் வாழ்வோரை, குறிப்பாக வறியோரை, போர் வெறி என்ற தீய ஆவி, கல்லறைகளில் வாழும்படி துரத்தியுள்ளதை செய்திகளில் காண்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 2

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், பிரான்ஸ் நாட்டை வென்றதும், நாட்டைவிட்டு யாரும் வெளியேறாதவண்ணம், நாட்டின் எல்லைகளை,  இராணுவத்தைக் கொண்டு கண்காணித்தார். ஆனால், எல்லைப்பகுதியில் இருந்த ஒரு சிறு கிராமத்தில், மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. ஜெர்மன் வீரர்கள் காரணம் புரியாமல் குழம்பினர். பிரான்சின் எல்லையில் இருந்த அந்த கிராமத்திற்கும், ஜெர்மன் ஆதிக்கத்தில் இல்லாத அடுத்த நாட்டுக்கும் இடையே, ஒரு கல்லறை இருந்தது. ஜெர்மன் ஆக்ரமிப்பிற்குப்பின், அக்கல்லறைக்கு, கிராமத்திலிருந்து, அடிக்கடி இறுதி ஊர்வலங்கள் நடைபெற்றன. அந்த இறுதி ஊர்வலங்களில், கலந்துகொண்டவர்களும், சவப்பெட்டிகளில் சுமந்து செல்லப்பட்டவர்களும், கல்லறை சுவரில் இருந்த கதவைத் திறந்து, அடுத்த நாட்டிற்குள் நுழைந்தனர். கிராமத்திலிருந்து, கல்லறைக்குச் சென்ற யாரும் மீண்டும் ஊருக்குத் திரும்பவில்லை.

வழக்கமாக, கல்லறைக்கு நாம் சுமந்து செல்லும் மனிதரை மட்டும் அங்கு அடக்கம் செய்துவிட்டு, மற்றவர்கள் வீட்டுக்குத் திரும்புவோம். ஆனால், இக்கிராமத்திலோ, கல்லறைக்குச் சென்ற யாருமே வீடு திரும்பவில்லை. அவர்கள் அனைவரும், கல்லறையிலேயே குடியேறிவிட்டனரோ என்ற எண்ணத்தை ஜெர்மானியப் படைவீரர்களிடம் உருவாக்கிவிட்டு, அவர்கள் மறைந்தனர்.

கல்லறையிலும் ஒருவரால் குடியேற முடியுமா என்று சிந்திக்கத் தூண்டும் இந்நிகழ்வு, நம்மை இயேசுவின் புதுமைக்கு அழைத்துச் செல்கிறது. கெரசேனர் பகுதியில், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதர், கல்லறையில் குடியிருந்ததாக, நற்செய்தியாளர் மாற்கு அறிமுகம் செய்கிறார்:

மாற்கு நற்செய்தி 5:1-3அ

அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, தீய ஆவி பிடித்த ஒருவர், கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் என்ற சொற்கள், நமக்குள் சங்கடமான உணர்வுகளை உருவாக்குகின்றன. பொதுவாக, கல்லறைகளில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில், போர், வறுமை போன்ற கொடுமைகளால், கல்லறையில் குடியிருப்பது மேல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோரைப்பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன், பி.பி.சி. ஊடகத்தில் வெளியான ஒரு காணொளிச் செய்தி, நம் தேடல்முயற்சிகளுக்கு உதவியாக உள்ளது. "கல்லறைத் தோட்டத்தில் வாழும் அலெப்போ குடும்பம்" (The Aleppo Family living in the cemetery) என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது.

தீய ஆவிகளால் வதைக்கப்பட்டதால், கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவரை, இயேசு குணப்படுத்தி, மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்தார் என்பதை இப்புதுமையில் காண்கிறோம். ஆனால், சிரியாவில் நிகழ்வதோ, தலைகீழான கொடுமையாக உள்ளது. மனித சமுதாயத்தில் வாழ்வோரை, போர் வெறி என்ற தீய ஆவி, கல்லறைகளில் வாழும்படி துரத்தியுள்ளதை, இக்காணொளிச் செய்தியில் காண்கிறோம்.

40 வயதுள்ள ஒரு குடும்பத் தலைவியும், அவரது 10 வயது மகனும் கல்லறையில் அமர்ந்திருப்பதை இக்காணொளி நமக்குக் காட்டுகிறது. ஆயிஷா அலி என்ற அக்குடும்பத்தலைவி, கல்லறைமேல் அமர்ந்தபடி, தங்கள் நிலையை இவ்விதம் கூறியுள்ளார்:

"வேறு எந்த இடத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர்காலம் நெருங்கிவருவதால், வேறு எங்கு செல்வதென்று தெரியாமல், இங்கு வந்துள்ளோம். பார்க்கப்போனால், இதை ஓர் ஆசீர்வாதம் என்றே கருதுகிறோம். இந்த இடத்தை யாரும் தங்கள் சொந்தமென்று உரிமை கொண்டாடப் போவதில்லை" என்று ஆயிஷா அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மகனை, ‘வீடியோ காமரா’, நெருக்கமாகக் காட்டுகிறது. அகமது முகம்மது என்ற அந்த 10 வயது சிறுவன், மாற்றுக்கண் பார்வை கொண்டவர் என்பதைக் காண்கிறோம். தன் மகனைப்பற்றி ஆயிஷா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

"எங்கள் வீட்டில் குண்டு விழுந்து, வெடித்தபோது, அகமதுவின் தலையில் பலமாக அடிபட்டது. மூளையில் இரத்தம் உறைந்து, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்கள் சொல்வதை அவனால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. தலையில் அடிபட்டதால், அவனுக்கு மாற்றுக்கண் பார்வையும் வந்துவிட்டது" என்று ஆயிஷா அவர்கள் தன் மகனின் நிலைக்கு காரணங்களை விளக்குகிறார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிரியாவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உலக அமைப்புக்கள் அங்குள்ள மக்களுக்கு உதவிகளை கொண்டு சென்றன என்பதை செய்திகளில் வாசித்தோம். இது குறித்து, ஆயிஷா அவர்கள் பேசும்போது, "இப்போது சிரியாவில் மக்களுக்கு உதவிகள் வருகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால், கல்லறையில் இருக்கும் எங்களைத் தேடி யாரும் வருவார்களா என்று தெரியவில்லை" என்று சொல்கிறார்.

அந்தத் தாய் கூறிய சொற்கள், நம் உள்ளங்களை இரணமாக்குகின்றன. ஆனால், இவற்றைச் சொல்லும்போது, அந்தத் தாயின் கண்களில் கண்ணீரோ, அவரது குரலில் அழுகையின் தொனியோ இல்லாதது, நம்மை இன்னும் வேதனைப்படுத்தி, ஓர் ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, கடந்த 8 ஆண்டுகளாய் அந்நாட்டில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரின் அழிவுகளை ஒவ்வொரு நாளும் கண்டவர்கள், இப்போது, அழிவையும், மரணத்தையும் கண்டு, கண்ணீர் வடிப்பதை நிறுத்திவிட்டனர் என்பதே, அந்த வேதனையான உண்மை.

அந்த அன்னை பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சில காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. அவர், தனக்கும் தன் மகனுக்கும் ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, தலையில் நீர் சுமந்து வருவது போன்ற இக்காட்சிகளுடன், அவரது மகன் ஒரு கல்லறை மீது அமர்ந்து, பூனைக்குட்டியுடன் விளையாடுவதையும் நாம் காண்கிறோம். கல்லறை, அவர்கள் இருவருக்கும், மிகச் சாதாரணமான உறைவிடமாக மாறிவிட்டது என்பதை, இக்காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன.

சிரியாவின்  பல நகரங்கள் இன்று பெயரளவில் மட்டும் நகரங்களாக உள்ளனவே தவிர, அவை அனைத்தும் உண்மையில் 'நரகங்களாக' மாறிவிட்டன. இந்நகரங்களில் மிக அதிக அளவு அழிவைச் சந்தித்துள்ள நகரம், அலெப்போ. நரகமாக மாறிவிட்ட அலெப்போவில், வாழமுடியாத எளிய குடும்பங்களில் ஒன்று, இப்போது கல்லறையில் தஞ்சம் புகுந்துள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போர், அந்நாட்டின் பாதிப் பகுதியை சிதைத்து, தரைமட்டமாக்கிவிட்டதால், அந்நாடு முழுவதும், பரந்து விரிந்த ஒரு கல்லறையாக மாறிவிட்டது என்று சொன்னாலும் பொருந்தும்.

அதேபோல், மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள சில நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும், பல ஆண்டுகளாக, போர்கள் நீடித்துவருவதால், அந்நாடுகளை விட்டு, கடல் வழியே தப்பித்துச் செல்ல முயலும் பல ஏழைகளுக்கு, அந்தக் மத்தியத்தரைக் கடலே கல்லறையாகிவிடுவதை நாம் அறிவோம். குடும்பத்தலைவி ஆயிஷா அலி அவர்கள் கூறுவதுபோல், கல்லறைகளைச் சொந்தம் கொண்டாட யாரும் படையெடுத்து செல்லமாட்டார்கள் என்பது, வேதனையான உண்மை.

2018ம் ஆண்டு மார்ச் மாதம், 'த கார்டியன்' (The Guardian) செய்தித் தாளில் வெளியான மற்றொரு வேதனைச் செய்தி இது: "கல்லறை வாழ்க்கை: மணிலாவின் கல்லறைத்தோட்ட சேரிகளுக்கு உள்ளே" (Graveyard living: inside the 'cemetery slums' of Manila) என்ற தலைப்பில் வெளியான அச்செய்தி, வறுமையைக் குறித்தும், கல்லறைக்கு வெளியே நிகழும் விபரீதங்களைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.

மணிலாவின் வட பகுதியில், 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பெரிய கல்லறைத்தோட்டத்தில், 6000த்திற்கும் அதிகமான வறியோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருவதாக 'த கார்டியன்' நாளிதழ் கூறுகிறது.

2016ம் ஆண்டு, ரொத்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவரான பிறகு, 'போதைப்பொருள் போர்' என்ற பெயரில் நடைபெற்ற கண்மூடித்தனமான 'களையெடுப்பு' முயற்சியில், 12,000த்திற்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளையோர். எனவே, ஒவ்வொரு நாளும் 80 முதல், 100 அடக்கச் சடங்குகள், மணிலா கல்லறையில் நடைபெற்றது என்றும், அதனால், கல்லறையில் குடியிருக்கும் வறியோருக்கு நல்ல வருமானம் கிடைத்தது என்றும் இச்செய்தியில் வாசிக்கும்போது, உள்ளம் வேதனை அடைகிறது.

'போதைப்பொருள் போரில்' கொல்லப்பட்ட எரிக்கார்தோ (Ericardo) என்ற இளையவரின் தந்தை, 70 வயதான ரிக்கார்தோ மெதினா (Ricardo Medina) அவர்கள், குற்றமற்ற தன் மகன் அநியாயமாகக் கொல்லப்பட்டார் என்றும், அவரது வழக்கை எடுத்து நடத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் இச்செய்தியில் கூறியுள்ளார். அத்துடன், தன் மகன், மனைவி ஆகியோர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்கருகிலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ரிக்கார்தோ மெதினா அவர்கள், கூறியதாக, 'த கார்டியன்' நாளிதழ் பதிவு செய்துள்ள சில கருத்துக்கள், கல்லறையைப் பற்றி நம் சிந்தனைகளை ஆழப்படுத்துகின்றன:

"இக்கல்லறைத் தோட்டத்தில் அனைவரும் சமம். இங்கு புதைக்கப்படும் அனைவரும் - வெள்ளை, கறுப்பு, உயரம், குள்ளம், செல்வந்தர், ஏழை - எல்லாருமே, ஒரே நிறம் கொண்ட மண்ணாகிப் போகின்றனர். கல்லறையில் ஆவிகள் நடமாடுவதாகச் சொல்கின்றனர். என்னைப் பொருத்தவரை, கல்லறைக்கு வெளியில்தான் தீய ஆவிகள் அதிகமாக நடமாடுகின்றன"

சிரியாவின் உள்நாட்டுப் போர், பிலிப்பீன்ஸ் நாட்டின் 'போதைப்பொருள் போர்' ஆகிய போர்களைப்போல், உலகின் பல நாடுகளில் மோதல்களையும், போர்களையும் உருவாக்கும் தீய சக்திகள், கல்லறைகளுக்கு வெளியே, வெறிகொண்டு அலைகின்றன. கல்லறையிலிருந்து வெளியேறிய மனிதரை இயேசு விடுவித்ததுபோல, வறியோர் ஒவ்வொருநாளும் பல்வேறு வடிவங்களில் சந்திக்கும் கல்லறைகளிலிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற மன்றாட்டுடன், இப்புதுமையில், நம் தேடலை அடுத்த வாரம் தொடர்வோம். 

25 June 2019, 15:49