கெரசேனர் பகுதியில் இயேசுவைச் சந்திக்க வந்த பேய் பிடித்த மனிதர் கெரசேனர் பகுதியில் இயேசுவைச் சந்திக்க வந்த பேய் பிடித்த மனிதர் 

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 1

அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். - மாற்கு 5:1

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 1

உரோமை நகரில், ஆண்டு முழுவதும், சுற்றுலாப் பயணிகள், மற்றும், திருத்தலங்களைப் பார்க்கவரும் திருப்பயணிகள் என்று, கூட்டம் அலைமோதும். இப்படி வந்த பயணிகளில் ஒருவர் அணிந்திருந்த T shirtல், PROTECT ME FROM WHAT I WANT. "நான் விரும்புவனவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." என்ற புதிரான சொற்கள் பதிந்திருந்தன. அவர் யாருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறார்? தன் குடும்பத்திற்கா? நண்பர்களுக்கா? அல்லது கடவுளுக்கா? சரியாகத் தெரியவில்லை.

"நான் விரும்புவனவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற இவ்விண்ணப்பம், பல கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. நாமே விரும்பி, தேடிச்செல்லும் விடயங்களிலிருந்து ஏன் இன்னொருவர் வந்து நம்மைக் காப்பாற்றவேண்டும்? நாம் விரும்புவது, தேடுவது எல்லாமே நல்லவைகளாக இருந்தால், இத்தகைய வேண்டுகோள் எழாது. ஆனால் வாழ்வில் நாம் இதுவரை அனுபவித்துள்ள, அல்லது, அனுபவித்து வரும் உண்மை என்ன? நம் விருப்பமோ, ஒப்புதலோ இல்லாத பல விடயங்களில் நாம் அவ்வப்போது சிக்கிவிடுகிறோம் என்பதே, அவ்வுண்மை.

யாராவது ஒருவர், நான் விரும்பாத இடத்திற்கு, என்னைப் பலவந்தமாக இழுத்துச் சென்றாலோ, அல்லது விரும்பாத ஒன்றை செய்யக் கட்டாயப்படுத்தினாலோ, மற்றவர்களை உதவிக்கு வரச்சொல்லி, கூவி அழைக்கலாம். ஆனால், நானே விரும்பி ஓர் இடத்திற்குப் போகும்போது, அல்லது, ஒன்றைச் செய்யும்போது, "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் ஒரு கையை, மற்றொரு கையால், நானே பலவந்தமாக முறுக்கிக்கொண்டு, அல்லது, என் கண்ணை நானே குத்திக்கொண்டு, "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா?

ஒரு கரத்தால் மற்றொரு கரத்தை முறுக்குதல், தன் விரல் கொண்டு தன் கண்ணையே குத்திக்கொள்ளுதல் போன்ற உருவகங்களுக்கு இணையாக, மனதளவில் நம்மை நாமே வதைத்துக்கொண்ட நேரங்கள் உண்டு. அந்நேரங்களில், மற்றவர்கள் உதவியைத் தேடி, நம் வாய் கத்தியதில்லை. ஆனால், நம் உள்மனம் கத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் அழகாக, நல்லதுபோல் தோன்றியப் பலவிடயங்கள், போகப்போக, பயத்தை உண்டாக்கின. பகலிலும், இரவிலும், இந்த பயம் துரத்தியது... கத்தி யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்கும் பயம்.

எரிகின்ற நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகினால் ஈர்க்கப்பட்டு, நெருப்பை அணுகி, உயிரை மாய்த்துக்கொள்ளும் விட்டில் பூச்சிகளைப்பற்றி அடிக்கடி பேசுகிறோம். பூச்சிகள் பாவம், அவை இறப்பதை தடுக்க, நம்மால், ஒன்றும் செய்யமுடியாமல் போகலாம். அதே நெருப்பைத்தேடி, நம் வீட்டில், ஒரு குழந்தைப் போகும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? ஓடிச்சென்று காப்பாற்றுவோம். ஆனால், அதே நெருப்பை, வயதுக்கு வந்த, அல்லது, வயது முதிர்ந்த ஒருவர் தேடிச் செல்லும்போது, நம்மால் முடிந்தவரை தடுக்கப் பார்ப்போம். அந்நேரத்தில், நம்மை தள்ளிவிட்டு, அவர் அந்த நெருப்புக்குள் புகுந்தால், இந்த ஆளுக்கென்ன, பேய் பிடித்துவிட்டதா என்று சிந்திக்க மாட்டோமா?

சிந்திக்கும் திறன்கொண்ட மனிதர்கள், அவர்களை மீறிய ஏதோ ஒரு சக்தியின் கட்டுப்பாட்டில் செயல்படுவதுபோல் தோன்றினால், அவர்களை 'பேய் பிடித்துள்ளதாக' அல்லது, அவர்கள், 'ஆவியால் ஆட்டிப்படைக்கப்படுவதாக' சொல்கிறோம். நமக்குப் புரியாத, அல்லது, நம்மை அச்சுறுத்தும் சூழல்களில் இச்சொற்களை, அடிக்கடி பயன்படுத்துகிறோம். பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். இவர்கள், பொதுவாக, சுயநினைவு இல்லாமல், தங்கள் கட்டுப்பாட்டில் தாங்கள் இல்லாமல், வேறு ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதுபோல பேசுவார்கள், செயல்படுவார்கள்.

இந்தியாவில், ஏறத்தாழ எல்லா மதங்களிலும், குறிப்பிட்ட சில கோவில்களில், தீய ஆவி பிடித்தவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு கொண்டு செல்லப்படும் இந்நோயாளிகள், பெரும்பாலும், அக்கோவில்களில், சங்கிலியால் கட்டப்படுகின்றனர். தமிழ்நாட்டில், பேய்களை விரட்டுவதில் புகழ்பெற்றிருந்த வழிபாட்டுத்தலம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த 28 பேர், சில ஆண்டுகளுக்கு முன், (2001ம் ஆண்டு) தீவிபத்தில் உடல் கருகி இறந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்.

இயேசு வாழ்ந்த காலத்திலும், தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மக்கள், பொதுவாக, வழிபாட்டுத் தலங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். குருக்கள் அவர்களை குணமாக்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாற்கு நற்செய்தியில் இயேசு ஆற்றிய முதல் புதுமையாகக் கூறப்பட்டிருப்பது, (மாற். 1:21-28) அவர், தீய ஆவி பிடித்த ஒருவரை, தொழுகைக்கூடத்தில், ஒய்வு நாளன்று குணமாக்கியப் புதுமை.

இயேசுவைத் தேடிவந்த பலரும், தீய ஆவியால் வதையுண்டவர்களை கொண்டுவந்தனர், அல்லது, அவர்கள் சார்பில் மற்றொருவர் இயேசுவிடம் விண்ணப்பங்களைக் கொணர்ந்தனர் (மத். 15:21-28; மாற். 7:24-30). இந்நிகழ்விலோ, பேய்பிடித்த மனிதர் தானாகவே இயேசுவைத் தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. பேய்பிடித்த ஒருவரை... இல்லை, இல்லை... பல நூறு பேய்கள் பிடித்த ஒருவரை, இயேசு குணமாக்கும் புதுமையை இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம்.

ஒத்தமை நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவானப் புதுமைகளில், 7வது புதுமையாகக் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. காற்றையும், கடலையும் இயேசு அடக்கிய 6வது புதுமை முடிந்த உடனேயே, இப்புதுமை, மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது.

இரவெல்லாம் புயலோடும், அலைகளோடும் போராடிக்கொண்டிருந்த சீடர்கள், புயலையும், கடலையும் இயேசு அடக்கியதைக் கண்டனர். அந்நிகழ்வின் இறுதியில், சீடர்களிடம் அச்சமும் வியப்பும் எழுந்தன என்றும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று பேசிக்கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அச்சம், வியப்பு ஆகிய உணர்வுகளோடும், இரவெல்லாம் உறங்காமல் இருந்ததால், களைப்போடும் அவர்கள் கரையை அடைந்ததும், அங்கு மற்றொரு வடிவில் புயல் ஒன்று தங்களைச் சந்திக்க வந்துள்ளது என்பதை சீடர்கள் உணர்ந்தனர். நற்செய்தியாளர் மாற்கு இந்நிகழ்வை அறிமுகம் செய்யும் வரிகளுக்குச் செவிமடுப்போம்:

மாற்கு நற்செய்தி 5 1-20

அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பலமுறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

நற்செய்தியாளர்கள் மாற்கு, மற்றும் லூக்கா இருவரும், கெரசேனர் பகுதி என்று குறிப்பிட்டுள்ளதை, நற்செய்தியாளர் மத்தேயு, கதரேனர் பகுதி என்று குறிப்பிட்டுள்ளார். கெரசேனர், மற்றும், கதரேனர் என்ற பெயர்களுடன், கலிலேயாவுக்கு எதிர் கரையில் அமைந்திருந்த இப்பகுதி, புறவினத்தார் வாழ்ந்த பகுதி. எனவே, அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு இயேசு அறிமுகமானவர் அல்ல. ஆனால், அப்பகுதியில் வாழ்ந்த தீய ஆவி, இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, அவரைச் சந்திக்க வந்தது.

கெரசேனர் பகுதியில் இயேசு காலடி வைத்ததும், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர், அவரைச் சந்திக்க வந்தார் என்று மாற்கும், லூக்காவும் கூறும் வேளை, நற்செய்தியாளர் மத்தேயு, 'பேய் பிடித்த இருவர்' இயேசுவுக்கு எதிரே வந்தனர் என்று, இருவரைப் பற்றி குறிப்பிடுகிறார். 'பேய் பிடித்த அவர், நெடுநாளாய் ஆடை அணிவதில்லை' (லூக்கா 8:27) என்று நற்செய்தியாளர் லூக்கா கூடுதலான ஒரு விவரத்தைச் சேர்க்கிறார். ஒருவர், அல்லது, இருவர், ஆடையற்றவர் என்ற வேறுபாடுகள், இந்த மூன்று நற்செய்திகளிலும் காணப்பட்டாலும், கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் என்ற கருத்தை மூன்று நற்செய்தியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் என்று நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ள சொற்கள், நமக்குள் பல வேதனையான நினைவுகளை உருவாக்குகின்றன. அத்துடன், அம்மனிதர் கல்லறைகளில் தன்னைத் தானே வதைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்வும், நமக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. அம்மனிதரைக் குறித்து கூறப்பட்டுள்ள விவரங்களும், இயேசு அவருக்கு வழங்கிய விடுதலையும், நாம் வாழும் இன்றையச் சூழலுக்கு சொல்லித்தரும் பாடங்களை, நாம் அடுத்த தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 15:42