Vatican News
அன்னை மரியா மற்றும் திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வரும் காட்சி அன்னை மரியா மற்றும் திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வரும் காட்சி 

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா – ஞாயிறு சிந்தனை

வாழ்வெனும் ஓட்டத்தில், பிரச்சனைகளால் நாம் வீழும்போது, நம்மைத் தூக்கி நிறுத்தி, நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தூய ஆவியார் உதவுகிறார்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா – ஞாயிறு சிந்தனை

பியானோ வாசிப்பதில் அற்புதத் திறமை கொண்ட Ignacy Jan Paderewski அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு, ஒரு தாய், தன் ஐந்து வயது மகனை அழைத்துச்சென்றார். மேடைக்கு அருகிலேயே தாய்க்கும், மகனுக்கும் இடம் கிடைத்தது. தன்னருகே அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் அந்தத் தாய் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுவன் அங்கிருந்து நழுவி, மேடைக்குப் பின்புறமாகச் சென்றான். சற்று நேரத்தில், அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போதுதான், அந்தத் தாய், தன் மகன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தார்.

அந்நேரம், திரை விலக, அங்கு, மேடையில், பியானோவுக்கு முன் தன் மகன் அமர்ந்திருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். அச்சிறுவனோ, "Twinkle, twinkle little star" என்ற மழலையர் பாடலை, பியானோவில் வாசிக்கத் துவங்கினான். அவனை, அங்கிருந்து கீழே அழைத்துவர தாய் எழுந்தபோது, பியானோ மேதை Paderewski அவர்கள் மேடையில் தோன்றினார். அவர், அச்சிறுவனிடம் சென்று, "நீ நிறுத்தாமல், தொடர்ந்து வாசி" என்று கூறினார். சிறுவன், தொடர்ந்து "Twinkle, twinkle" பாடலை வாசித்தபோது, Paderewski அவர்கள், சிறுவனோடு அமர்ந்து, அச்சிறுவனுக்கு இருபுறமும் தன் கரங்களை நீட்டி, அச்சிறுவன் வாசித்த பாடலுக்கு இன்னும் அழகூட்டும் வண்ணம், அவர் பின்னணி இசையை இணைத்தார். அச்சிறுவனும், Paderewski அவர்களும் இணைந்து, அடுத்த சில நிமிடங்கள், அரங்கத்தில் இருந்தவர்களுக்கு "Twinkle, twinkle little star" பாடலை, அழகியதோர் இசை விருந்தாகப் படைத்தனர்.

இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு, இந்நிகழ்வு, அழகியதோர் உவமையாக உதவுகின்றது. 5 வயது சிறுவன், தட்டுத் தடுமாறி, வாசித்த மழலையர் பாடலை, தொடர்ந்து வாசிக்கும்படி தூண்டயதோடு, அவனுடன் சேர்ந்து, அப்பாடலை, அழகியதோர் இசை விருந்தாக, Paderewski அவர்கள் மாற்றினார். உலகைச் சந்திக்கப் பயந்து, தங்களையே ஒரு வீட்டில் அடைத்துக்கொண்ட சீடர்கள் நடுவே இறங்கிவந்த தூய ஆவியார், "தொடர்ந்து வாசியுங்கள்" என்று சீடர்களைத் தூண்டினார். அத்துடன், அவர்கள், அவ்வீட்டைவிட்டு துணிவுடன் வெளியேறவும், நற்செய்தியைப் பறைசாற்றவும் உதவினார். நற்செய்தியின் முதல் அரங்கேற்றம், எருசலேமில் நடைபெற்ற அந்நிகழ்வை, நாம் 'பெந்தக்கோஸ்து' என்ற திருநாளாக, இன்று கொண்டாடுகிறோம்.

‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில், தொடர்ந்து பல விழாக்களை நாம் கொண்டாடியுள்ளோம். உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று, நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவன் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, என்று விழாக்களும், கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ மறையின் அடித்தள உண்மைகள். இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா கொண்டாடுவது எப்படி என்று, இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.

உலக விழாக்களில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே விழாக்களின் முக்கியத்துவம் பறைசாற்றப்படும். பகட்டும், பிரம்மாண்டமும் இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் விளங்கும்.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தருகின்றனர், இயேசுவும், அவரது சீடர்களும். பிறரது கவனத்தை ஈர்க்குமளவு கொண்டாட்டங்கள் அமையவேண்டும் என்பதற்குப் பதிலாக, நாம் கொண்டாடும் விழாவின் உள்பொருள் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள், ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும். உலகின் கவனத்தை ஈர்க்காமல், சீடர்களின் உள்ளங்களில், அவர்கள் வழியே, நம் உள்ளங்களில், நிறைவையும், மகிழ்வையும் கொணரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

நம்முள் இருக்கும் கருவூலங்களை உணர்வது அவசியம் என்பதை உணர்த்த சொல்லப்படும் ஒரு சிறுகதை இது. “Value What You Have” - அதாவது, “உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக” என்ற தலைப்புடன் சொல்லப்பட்டுள்ள கதை...

Olavo Bilac என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஅவர்களிடம் கேட்டுக்கொண்டார். Bilac அவர்கள், பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:

"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு, தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.

ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்துகொண்டேன். அதை நான் விற்கப்போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் ஊற்றெடுக்கும் கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்திச்செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம். நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழிநடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். குழந்தை ஒன்று நம் குடும்பத்தில் பிறந்ததும், அக்குழந்தை யாருடைய சாயலில் உள்ளது என்பதையும், குழந்தையின் தனிப்பட்ட குணங்களையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும். திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவை, இன்றைய உலகிற்குத் தேவையானப் பாடங்களை, நமக்குச் சொல்லித் தருகின்றன.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியாரின் வருகை என்ற பேருண்மை, தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போது, ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பது, திருஅவை என்ற குழந்தை நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

திருஅவை என்ற குழந்தை, பிறந்த நாளன்றே பேசத்துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத்துவங்கியது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். (திருத்தூதர் பணிகள் 2: 4) மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற பாடம் இங்கு உணர்த்தப்படுகிறது.

பேசியவர்கள் கலிலேயர்கள்; ஆனால், அவர்கள் சொன்னதை செவி மடுத்தவர்கள் பார்த்தர், மேதியர், எலாமியர் (தி.ப. 2:9-10) என்று பல குலத்தவர். இது எவ்விதம் சாத்தியமானது என்ற கேள்விக்கு, திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் இறுதி வரிகள் விடை பகர்கின்றன: "யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!" என்றனர். (தி.ப. 2:11) நாம் இணைந்து வரும் வேளையில், கடவுளின் மாபெரும் செயல்களைப் பேசினால், அங்கு மொழியே தேவையில்லை என்பதை, தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

மனிதர்கள் உருவாக்கிவைத்துள்ள, மொழி, இனம் என்ற பிரிவுகளை இணைக்கும் வகையில், தூய ஆவியாரின் வருகை அன்று அமைந்தது. இன்றோ, அதே தூய ஆவியாரின் பெயரைச் சொல்லி, பிரிவுகளை உருவாக்கும் போக்கும் கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே இருப்பது, வேதனையான உண்மை.

மழலையரின் பாடலான 'Twinkle twinkle' பாடல், அழகியதோர் இசை விருந்தாக உருவான கதையை, தூய ஆவியார் நமக்கு வழங்கும் உந்துசக்திக்கு ஓர் உவமையாக, நம் சிந்தனைகளின் துவக்கத்தில் கூறினோம். வாழ்வில் நாம் சக்தியிழந்து தடுமாறும் வேளையில், தூய ஆவியாரின் துணை நமக்கு உண்டு என்பதை உணர்த்த, இச்சிந்தனைகளின் இறுதியில், மற்றுமொரு நிகழ்வை, ஓர் உவமையாகச் சிந்திப்போம்.

1992ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில், 400 மீட்டர் ஓட்டம் துவங்கியது. உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர், டெரெக் ரெட்மண்ட் (Derek Redmond) அவர்கள், பதக்கம் வெல்லும் கனவுடன், தன் ஓட்டத்தைத் துவக்கினார். 150 மீட்டர் தூரம் ஓடியபோது, அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சனையால், அவர் தடக்களத்தில் விழுந்தார். ஒரு சில நொடிகளில், மீண்டும் எழுந்து, வலது காலை நொண்டியபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, டெரெக்கின் தந்தை, ஜிம் ரெட்மண்ட் அவர்கள், பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். "டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை" என்று தந்தை கூறினார். மகனோ, கண்களில் கண்ணீர் மல்க, "நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்" என்று சொன்னதும், "சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்" என்று கூறி, மகனை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார். இறுதி ஒரு சில மீட்டர் தூரத்தை இளையவர் டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தை அனுப்பி வைத்தார்.

தந்தையும் மகனும் இணைந்து ஓடிய அக்காட்சி, உலக ஊடகங்களின் கவனத்தை பல நாள்கள் தொடர்ந்து கவர்ந்தது. 20 ஆண்டுகள் சென்று, 2012ம் ஆண்டு, இலண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கியபோது, அந்த ஒலிம்பிக் விளக்கை ஏந்தி ஓடியவர்களில், ஜிம் ரெட்மண்ட் அவர்களும் ஒருவர்.

வாழ்வெனும் ஓட்டத்தில், பிரச்சனைகளால் நாம் வீழும்போது, நம்மைத் தூக்கி நிறுத்தி, நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தூய ஆவியார் உதவுகிறார் என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், குறிப்பாக, பிரச்சனைகளால் நாம் வீழும் வேளைகளில் உணரும் அருளை, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, தூய ஆவியாரிடம் இறைஞ்சுவோம். 

08 June 2019, 15:29