Cerca

Vatican News
Luca Rossetti என்ற இத்தாலிய ஓவியர் உருவாக்கிய மூவொரு இறைவனின் ஓவியம் Luca Rossetti என்ற இத்தாலிய ஓவியர் உருவாக்கிய மூவொரு இறைவனின் ஓவியம் 

மூவொரு இறைவன் பெருவிழா – ஞாயிறு சிந்தனை

மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்ற ஆழமான பாடம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

மூவொரு இறைவன் பெருவிழா – ஞாயிறு சிந்தனை

வாழ்வின் மிக, மிக ஆழமான உண்மைகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் என்பதை உள்ளத்தால் உணர்ந்து, வியந்து, நன்றியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்குப் பதிலாக, அந்த உண்மைகளைக் கூறுபோட்டு, பெயரிட்டு, நம் அறிவுக்குள் அடைக்க முற்படுகிறோம். குழந்தைகளாய் இருக்கும்போது, நமக்குள் இந்த ஆழ்மன வியப்பு அதிகம் இருந்தது. அதன் விளைவாக, மகிழ்வும் இருந்தது. ஆனால், வயதில் வளர, வளர, சரியான, துல்லியமான வழிகளில் சிந்திக்க நமக்குச் சொல்லித் தரப்படுகிறது. எனவே, கனவு காணுதல், கற்பனை செய்தல், வியந்து மகிழ்தல் என்ற பண்புகள் நமக்குள் குறைந்துவிடுகின்றன. நம்மைவிட, குழந்தைகள் கற்பனை செய்வதில் உயர்ந்தவர்கள் என்பதைக் கூறும் ஒரு கதை இது:

கல்லூரி ஒன்றில் வகுப்பு ஆரம்பமானது. ஆசிரியர் கரும்பலகையில் ஒரு புள்ளியை வரைந்தார். பின்னர் மாணவர்களிடம், "இது என்ன?" என்று கேட்டார். மாணவர்கள் கொஞ்சம் கேலியாகச் சிரித்தனர். ஒருவர் எழுந்து, "அது ஒரு புள்ளி" என்றார். ஆசிரியர், "அவ்வளவுதானா?" என்று கேட்டதும், மாணவர் கொஞ்சம் சிந்தித்தார். பின்னர், "ஓகே, அது, கரும்பலகையில், ‘சாக்பீஸ்’கொண்டு வரையப்பட்ட ஒரு புள்ளி" என்று கூறினார். சரியான பதிலைச் சொல்லிவிட்ட பெருமையுடன் மாணவர் புன்னகை செய்தார்.

ஆசிரியர் மாணவர்களிடம், "இது மிகவும் சரியான, தெளிவான, பொருத்தமான பதில். ஆனால், நேற்று, இதே புள்ளியை கரும்பலகையில் வைத்துவிட்டு, இதே கேள்வியை குழந்தைகள் வகுப்பில் கேட்டேன். உடனே அங்கிருந்த குழந்தைகள், 'இது ஒரு சிட்டுக் குருவியின் கண், மழைத்துளி, விண்மீன், தூரத்தில் வரும் இரயிலின் முன் விளக்கு' என்று பல்வேறு பதில்களைச் சொன்னார்கள்" என்றார். ஆசிரியர் இவ்வாறு சொன்னதும், கல்லூரி மாணவர்களிடையே அமைதி நிலவியது. ஆசிரியர் வைத்த புள்ளிக்கு மிகச் சரியான, பொருத்தமான பதிலை மட்டுமே தங்களால் தரமுடிந்தது. ஆனால், குழந்தைகளோ, கண்முன் தெரிந்த அந்தப் புள்ளியைத் தாண்டி, பல உண்மைகளைக் கண்டனர் என்பதை, அந்த மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

சரியான, தெளிவான, பொருத்தமான பதில்கள், நம் அறிவுத்திறனால் உருவாகின்றன. ஆனால், அவற்றையும் தாண்டி, பொருளுள்ள பல உண்மைகள், நம் ஞானத்திலிருந்து உருவாகின்றன. அத்தகைய ஞானத்தைப் பெறுவதற்கு, நமக்கு, குழந்தை உள்ளம் தேவை. இந்த ஞாயிறு நாம் நினைவுகூரும் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட, குழந்தை உள்ளமும், ஞானமும் தேவை.

அறிவுத்திறன் கொண்டு அறிந்துகொள்வதற்கும், ஆழ்மன ஞானம் கொண்டு புரிந்துகொள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அறிவுத்திறனைவிட, ஞானம் இன்னும் ஆழமானது என்பதை, இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள முதல்வாசகம் தெளிவாக்குகிறது. துவக்கத்திலிருந்தே, இறைவனுடன் உறைந்திருக்கும் ஞானத்தின் அழகு, முதல்வாசகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது:

நீதிமொழிகள் 8: 22-23,29-31

ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்...

பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

படைப்பின் துவக்கத்தில், மனித வரலாற்றின் ஆரம்பத்தில், இவ்வுலகை மகிழ்வில் நிறைத்த ஞானம், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மௌனமாக்கப்பட்டது. குறிப்பாக, மதம் சார்ந்த உண்மைகளை, ஆழ்மன ஞானம் கொண்டு ஏற்றுக்கொள்வதற்குப் பதில், அவற்றை அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவ்வுண்மைகளையும், உணர்வுகளையும் கேலிக்கு உள்ளாக்கும் போக்கு இன்று வளர்ந்துள்ளது.

இதே நிலை, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் பிரதிபலிக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் குழந்தைப்பருவத்தில் கொண்டிருந்த ஞானம், வயதில் வளர, வளர நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளதை உணர்கிறோம். மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட, நாம், மீண்டும், குழந்தை உள்ளம் கொண்டவர்களாய், இன்றைய வழிபாட்டில் கலந்துகொள்வோம்.

மூவொரு இறைவனையும், குழந்தையையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். இறைவன், மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, புனித அகுஸ்தின், தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து, விடைதேடியபடி கடற்கரையில் நடந்துக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில், ஒரு சிறுவன், ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தார். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், அச்சிறுவனை நிறுத்தி, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த புனித அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனார்.

புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அன்று, அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று, புனித அகுஸ்தின், பின்னொரு காலத்தில் சொன்னார்.

குழந்தைகளுக்குரிய பணிவான மனதை வளர்த்துக் கொள்வதால், வாழ்வின் ஆழமான உண்மைகளை உய்த்துணரலாம். இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Franklin Roosevelt அவர்களைப் பற்றி சொல்லப்படும் ஒரு கதை உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும், ஒருநாள், வெள்ளை மாளிகையில் சந்தித்து, நாள் முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு, அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்களின் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்" என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருந்ததால், இவ்வுலகம் முழுவதையும், தானே சுமப்பதுபோல், Roosevelt அவர்கள் உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த சிறு பழக்கத்தின் வழியே, தன்னைப்பற்றிய உண்மையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள் செய்தது, குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரியலாம். ஆனால், பரந்து விரிந்த வானத்தை ஓர் ஆழ்நிலை தியானமாய்ப் பார்த்தது, Roosevelt அவர்களுக்கு அவரது உண்மை நிலையைத் தெளிவாக உணர்த்தியிருக்க வேண்டும். அத்தகைய மனநிலையோடு Roosevelt அவர்கள் உறங்கச்சென்றது, அவர் தனக்குத்தானே சொல்லித்தந்த ஓர் அழகியப் பாடம்.

கடவுளுக்கு முன், அவரது அளவற்ற படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற மமதைக் கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

புனித அகுஸ்தின், தன் ஆழ்மன ஞானத்துடன் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை, தன் அறிவுத்திறன் கொண்டு, அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். மூன்று ஆட்கள், எப்படி, ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.

புனித அகுஸ்தின் ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் பயின்றிருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும்; ஆனால், நம் ஆன்மாவுக்கு உணவளிக்காமல், பட்டினி போடும்.

எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி, ஒரு சில அழகான உண்மைகளை, அதேவேளை, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர, இறைவன், மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. அதுவரை, இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுளாக இருந்தார்.

தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்ற ஆழமான பாடம். நம் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். நாம் வாழும் இன்றைய உலகில், நம் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது, பெற்றோர்மீது, அதுவும், வயதான பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று இரு காரணங்கள் உள்ளன. உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் இன்று என்பது முதல் காரணம். இன்று, தந்தை தினம் என்பது இரண்டாவது காரணம்.

மேமாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினம் என்று கொண்டாடினோம். ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினம் என்று உலகின் பல நாடுகளில் நாம் கொண்டாடுகிறோம். அன்னை தினம் மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன ஒரு வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதைப்போல், தந்தை தினமும் வியாபாரத் திருநாளாக மாறிவிட்டது. வயது முதிர்ந்த காலத்தில், பெற்றோரை, முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்நாளில் மட்டும் அவர்களைச் சந்தித்து மலர்களைத் தருவதால் நமது கடமைகள் முடிந்து போகின்றனவா?

இன்று மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உறவுகளின் ஊற்றான மூவொரு இறைவன், நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சொல்லித்தர வேண்டும். அதிலும் சிறப்பாக, தங்களால் வளர்த்துவிடப்பட்ட உறவுகள், தங்களை மறந்துவிட்டதால், உறவுகள் மீதே சலிப்பையும், சந்தேகத்தையும் வளர்த்து வாடும் வயதுமுதிர்ந்த பெற்றோரின் முக்கியத்துவத்தைப்பற்றி, மூவொரு இறைவன், நமக்குச் சொல்லித்தர வேண்டும்.

15 June 2019, 13:41