இயேசு சீடர்களுடன் இறுதி இரவுணவு அருந்தும் காட்சி இயேசு சீடர்களுடன் இறுதி இரவுணவு அருந்தும் காட்சி 

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா – ஞாயிறு சிந்தனை

காயப்பட்ட மனுக்குலம், காயப்பட்டக் கடவுளைக் கொண்டாடும் ஒரு திருவிழா, இன்று நாம் சிறப்பிக்கும் கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா – ஞாயிறு சிந்தனை

ஒவ்வொரு நாளும், ஊடகங்கள் வழியே, பல செய்திகள் நம்மை வந்தடைகின்றன. ஒரு சில, நம் விழிகளைத் தொட்டதும், விலகிவிடுகின்றன. வேறு சில, உள்ளத்தைத் துளைத்து, நம்மை, வேதனையிலும், விரக்தியிலும் ஆழ்த்துகின்றன. இத்தகைய எதிர்மறை செய்திகள் நடுவே, அவ்வப்போது நம்பிக்கை தரும் நல்ல செய்திகளும் நம்மை வந்தடைகின்றன. அச்செய்திகள், உருவகங்களாக, உவமைகளாக மாறி, உள்ளத்தை உயர்த்துகின்றன. அத்தகையைச் செய்திகளில் ஒன்று இது...

ஜூன் 17, கடந்த திங்களன்று, போலந்து நாட்டில், ஓர் இளம் அருள்பணியாளர் புற்றுநோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். மிஹாவ் வோஸ் (Michał Łos) என்ற அந்த இளையவர், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு 23 நாள்களில், இறைவனடி சேர்ந்தார். இவ்வாண்டு, உயிர்ப்புப் பெருவிழாவுக்குச் சில நாள்கள் முன்னதாக, மிஹாவ் அவர்களுக்கு இறுதி நிலை புற்றுநோய் இருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.

புனித லூயிஜி ஓரியோனே (Luigi Orione) அவர்களால் உருவாக்கப்பட்ட துறவு சபையில், அருள்பணியாளர் பயிற்சியில் இருந்த இளையவர் மிஹாவ் அவர்கள், மே 23ம் தேதி, அச்சபையில், தன் இறுதி அர்ப்பண வார்த்தைப்பாட்டினை, மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம் வழங்கினார். அதற்கு அடுத்த நாள், மே 24ம் தேதி, Warsaw-Praga மறைமாவட்டத்தின் ஆயர், Marek Solarczyk அவர்கள், இளையவர் மிஹாவ் அவர்களை, தியாக்கோனாகவும், அருள்பணியாளராகவும் திருப்பொழிவு செய்தார். இளந்துறவிக்கு, தியாக்கோன் மற்றும் அருள்பணியாளர் என்ற இரு நிலைகளையும், ஒரே வேளையில் வழங்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான அனுமதி வழங்கியதையடுத்து, மிஹாவ் அவர்களுக்கு திருப்பொழிவு நிகழ்ந்தது.

மே 25ம் தேதி, அருள்பணி மிஹாவ் வோஸ் அவர்கள், தன் குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவினருக்கும், முதல் நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார். மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம், மிஹாவ் அவர்கள் ஆற்றிய அத்திருப்பலியின் இறுதியில், தனக்காகச் செபிக்கும் அனைவருக்கும் நன்றி கூறியபின், ஒரு புதிய அருள்பணியாளராக, அனைவருக்கும் ஆசீர் வழங்கிய காணொளி, சமூக வலைத்தளங்கள் வழியே, பல்லாயிரம் மக்களைச் சென்றடைந்தது. மரணப் படுக்கையில் இருந்தவண்ணம், இளம் அருள்பணியாளர் மிஹாவ் வோஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றிய காட்சி, பலரின் உள்ளத்தில், திருப்பலியின் உன்னதத்தைப் பறைசாற்றியிருக்கும் என்பதை நம்பலாம்.

திருப்பலியின் ஆழமானப் பொருளை, காயமடைந்த மக்கள் நடுவே தான் ஆற்றிய திருப்பலியின்போது உணர்ந்ததாக, இயேசு சபையின் முன்னாள் உலகத்தலைவரான, இறையடியார் பேத்ரோ அருப்பே அவர்கள் கூறியுள்ளார். அருள்பணி அருப்பே அவர்கள், இயேசு சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணிபுரிந்தார். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த காலக்கட்டத்தில், அங்கு அவர், நவதுறவிகளின் பொறுப்பாளராக இருந்தார். 80,000க்கும் அதிகமான உயிர்கள் பலியான அந்தக் கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அவ்வில்லமும், அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது.

அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அக்கோவிலில், திருப்பலி நிறைவேற்றிய அருள்பணி அருப்பே அவர்கள், தான் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்: "நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த மனிதர்களை, அவர்களை அந்நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் வெறி நிறைந்த சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கரங்கள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று, அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

அருள்பணி அருப்பே அவர்கள், மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று, தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாக்கமுறா சான் (Nakamura San) என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில், அப்பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட அருள்பணி அருப்பே அவர்கள், தன் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள்படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அப்பெண், அருள்பணி அருப்பேயிடம், "சாமி, எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ‘ஆம்’ என்று தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அப்பெண்ணுக்குத் தந்தார், அருப்பே. மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாக்கமுறா சான் அவர்கள், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

மரணப் படுக்கையில் இருந்தபோதும், இறைமகன் இயேசுவைக் கரங்களில் தாங்கி நிறைவடைந்த இளம் அருள்பணியாளர் மிஹாவ் வோஸ் அவர்கள், காயப்பட்டுக் கிடந்த மக்கள் நடுவே, திருப்பலியாற்றிய இறையடியார் அருப்பே, மரணத்தின் வாயிலில் நின்றபடி, இயேசுவின் திருஉடலைப் பெற்ற நிறைவோடு, இவ்வுலகிலிருந்து விடைபெற்ற இளம்பெண் நாக்கமுறா சான் ஆகிய இம்மூவரும், திருப்பலி, திருநற்கருணை என்ற ஒப்பற்ற கொடைகளின் ஆழத்தை, நாம் ஓரளவாகிலும் புரிந்துகொள்ள உதவுகின்றனர். காயப்பட்ட மனுக்குலம், காயப்பட்டக் கடவுளைக் கொண்டாடும் ஒரு திருவிழா, இன்று நாம் சிறப்பிக்கும் கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா.

இவ்விழாவுக்கென நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்தும் பொருள் செறிந்தவை. அவற்றில், புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (1கொரி. 11:23-26), நம்முடைய கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. கடுமையான துன்பங்களை அனுபவித்து வந்த முதல் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கை வழங்கியது, இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் கொண்டாட்டம். அந்த இறுதி இரவுணவைப் பற்றி, புனித பவுல் கூறும் இச்சொற்கள், புனித வியாழன் திருவழிபாட்டிலும் வாசிக்கப்படுகின்றன. அந்த இறுதி இரவை குறிப்பிட்டுக் காட்ட புனித பவுல் பயன்படுத்தியுள்ள சொற்கள், இன்றைய விழாவைக் குறித்த ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன.

அந்த இறுதி இரவை, புனித வியாழன் இரவை, பல்வேறு உன்னத எண்ணங்களால் நம்மால் விவரிக்கமுடியும். இயேசு, சீடர்களின் காலடிகளைக் கழுவி, பணிவைச் சொல்லித்தந்த இரவு, நற்கருணையை நிறுவிய இரவு, சீடர்களை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்த இரவு என்று, பல்வேறு மேன்மையான வழிகளில் அந்த இரவை குறிப்பிட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் குறிப்பிடாமல், புனித பவுல், அந்த இரவைக் குறிப்பிட, "ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்" (1 கொரி. 11:23). என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். காட்டிக்கொடுக்கப்படும் நிகழ்வுக்கு புனித பவுல் தரும் முக்கியத்துவம், நமக்குள் சங்கடங்களை உருவாக்குகிறது. ஆனால், புனித பவுல் மட்டும் அல்ல, இதே முக்கியத்துவம், நான்கு நற்செய்திகளிலும் தரப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம்.

இந்த இரவைப்பற்றி, நான்கு நற்செய்தியாளர்களின் பதிவுகளை நாம் வாசிக்கும்போது, இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவும் நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டும் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம். இயேசு, அப்பத்தையும் இரசத்தையும் பகிரும் நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் உள்ளன; யோவான் நற்செய்தியில் கூறப்படவில்லை. ஆனால், தான் காட்டிக்கொடுக்கப்படுவதை இயேசு கூறும் நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த இரவு, மற்ற அனைத்தையும்விட, 'காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக' சீடர்களாலும், முதல் கிறிஸ்தவர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.

இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நாமும், திருப்பலியில், அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் அந்தப் புனித நிகழ்வின்போது, "அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்" என்று கூறுகிறோம். அந்த இரவில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளிலும், 'காட்டிக்கொடுத்தல்' மிகக் கொடுமையானதாக, வேதனை நிறைந்ததாக இருந்திருக்கவேண்டும். எனவேதான், முதல் கிறிஸ்தவக் குழுக்களின் காலம் துவங்கி, இன்று வரை, அந்த இரவை, "காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக" நினைவுகூர்ந்து வருகிறோம்.

வரலாற்றிலும், காவியங்களிலும் காட்டிக்கொடுத்த பல நிகழ்வுகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ப்ரூட்டஸ், சீசரைக் கொலை செய்தது, கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்கொடுத்தது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை, அவரது இருமெய்க்காப்பாளர்கள் சுட்டுக்கொன்றது... என்று, பல நிகழ்வுகள் உண்டு. இவை அனைத்திலும், நெருங்கிய ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படுவது, வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துள்ளது. இங்கோ, இயேசு, தான் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவை, அன்பால், புனிதத்தால் நிறைத்தார். அந்த இரவில், அவர், தன் உடலையும், இரத்தத்தையும் பகிர்ந்தளித்தார். நெருங்கிய நண்பர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படும் வேதனையிலும், தன்னையே முழுவதுமாக வழங்குவது ஒன்றே, மீட்பைக் கொணரும் என்பதை, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

'இம்மானுவேல்' அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற பெயருடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயேசு, இறுதியில், நமக்கும், தன்னை வதைத்தவர்களுக்கும், தன்னையே வழங்கியதன் வழியே, என்றும் நம்மோடு வாழும் இறைவனாக மாறினார். நம்முடன் இறைமகன் என்றும் வாழ்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை, அவருக்காக, அவரைப்போல், தன் பகைவருக்கும் அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தைப் பற்றிய எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் அடைந்த சித்ரவதைகள் காரணமாக, அவர் தன் கை விரல்கள் சிலவற்றை இழந்திருந்தார். இந்நிலையில், அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு, திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட திருஅவை விதிமுறையின்படி, அருள்பணியாளர், தன் கட்டைவிரல், மற்றும், ஆள்காட்டி விரல்களால் மட்டுமே அப்பத்தைத் தொடவேண்டும். அருள்பணி ஐசக் அவர்களுக்கு அவ்விரு விரல்களும் இல்லாததால், அவர் வேறு விரல்களைக் கொண்டு அப்பத்தைத் தொடுவதற்கு, திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பான் அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். முக்கியமான விரல்கள் இல்லாத நிலையிலும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் விரல்களற்ற தன் கரங்களில் புனித ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு, இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா நமக்கு உதவுவதாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2019, 14:06