மெக்சிகோ ஆயர்களின் கூட்டம் மெக்சிகோ ஆயர்களின் கூட்டம் 

அமைதிக்காக விண்ணப்பிக்கும் மெக்சிகோ ஆயர்கள்

தண்டனைகள் இல்லாததால் குற்றங்கள் பெருகும்போது, பணத்தின் மீது ஆசை வளரும்போது, மனிதரின் உயிருக்கு விலை நிர்ணயிக்கப்படும்போது, பணம் மட்டுமே அதிகாரம் செலுத்துகிறது – மெக்சிகோ ஆயர் Jaime Calderón

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டில் பரவலாகக் காணப்படும் வன்முறைகளுக்கு, அனைவரும் பலி ஆடுகளாக மாறிவருவதைக் காணமுடிகிறது என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர், கவலை வெளியிட்டுள்ளார்.

ஜூன் 15, கடந்த சனிக்கிழமையன்று, மெக்சிகோவின் Acacoyagua பகுதியில், கோவில் ஒன்றில், மறைக்கல்வி வகுப்புகள் முடிந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், மறைக்கல்வி ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து தன் கவலையை தெரிவித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள Tapachula மறைமாவட்ட ஆயர் Jaime Calderón அவர்கள், கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவது, சமுதாய நன்னெறி மதிப்பீடுகள் குறைந்து வருவதை காண்பிக்கிறது என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு வேலையில்லாதபோது, அநீதிகள் பெருகியிருக்கும்போது, தண்டனைகள் இல்லாததால், குற்றங்கள் பெருகும்போது, பணத்தின் மீது ஆசை வளரும்போது, மனிதரின் உயிருக்கு விலை நிர்ணயிக்கப்படும்போது, பணம் மட்டுமே அதிகாரம் செலுத்துகிறது என்று, ஆயர் Calderón அவர்கள், தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, மெக்சிகோ ஆயர்கள், ஜூன் 17, இத்திங்களன்று, அரசுத் தலைவரைச் சந்தித்த வேளையில், நீதியும், அமைதியும், ஒருவருக்கொருவர் ஆதரவும் காட்டும் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களில், அரசுடன் இணைந்து செயலாற்ற தலத்திருஅவை தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 16:02