திருத்தந்தையை ஈராக்கிற்கு அழைக்கும் அழைப்பிதழைக் கொடுக்கிறார் அரசுத்தலைவர் Salih திருத்தந்தையை ஈராக்கிற்கு அழைக்கும் அழைப்பிதழைக் கொடுக்கிறார் அரசுத்தலைவர் Salih 

திருத்தந்தை ஈராக் வருவது மிகுந்த மகிழ்வையளிக்கும்

ஈராக்கில், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அமைதி, மாண்பு போன்ற விழுமியங்களின் அடிப்படையில் நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் அனைத்து மக்களும் திருத்தந்தையை வரவேற்பார்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஐஎஸ் இஸ்லாமிய அரசின் கீழ் நான்கு ஆண்டுகளாகத் துன்புற்று, அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் ஈராக் மக்கள் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் மிகுந்த மகிழ்வைக் கொணரும் என்று, ஈராக் அரசுத்தலைவர், Barham Salih அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அதிகாரப்பூர்வமாக அழைக்கும் அழைப்பிதழை ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களிடம், ஜூன் 20, இவ்வியாழனன்று, அமைதி அரண்மனையில் வழங்கிய, ஈராக் அரசுத்தலைவர் Salih அவர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுப்பான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளால் துன்புற்றுள்ள ஈராக் மக்களுக்கு, திருத்தந்தையின் ஈராக் வருகை மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்று கூறினார்.

கலாச்சாரத்தின் தொட்டில் மற்றும், விசுவாசிகளின் தந்தையும், மதங்களின் தூதருமாகிய ஆபிரகாம் பிறந்த இடமான, ஈராக் நாட்டிற்கு திருத்தந்தையை அழைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன் என்று, அந்த அழைப்பிதழில் கூறியுள்ளார், ஈராக் அரசுத்தலைவர் Salih.

ஐ.எஸ் இஸ்லாம் அமைப்பின் வன்முறைகளுக்குப்பின் இடம்பெற்றுவரும் குணப்படுத்தும் நடைமுறையில், திருத்தந்தையின் பிரசன்னம், ஒரு மைல்கல்லாக அமையும் என்றும், திருத்தந்தையின் வார்த்தைகள், ஊக்கமும், ஆறுதலும் தருபவைகளாக இருக்கும் என்றும், ஈராக் அரசுத்தலைவரின் அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஐக்கிய நாடு, ஈராக்கை ஆக்ரமித்த 2003ம் ஆண்டிற்கு முன்னும், ஐ.எஸ் அமைப்பின் எழுச்சிக்கு முன்னும், ஆயிரம் ஆண்டுகளாக மதங்களும், விசுவாசிகளும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்த ஈராக், மீண்டும் அமைதியான நிலமாக மாறுவதற்கு, திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார், ஈராக் அரசுத்தலைவர் Salih. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2019, 15:50