ஹங்கேரி அரசு, இலங்கை அரசு பிரதிநிதிகள் சந்திப்பு ஹங்கேரி அரசு, இலங்கை அரசு பிரதிநிதிகள் சந்திப்பு 

ஹங்கேரியின் மனிதாபிமான உதவிக்கு இலங்கை அரசு நன்றி

இலங்கையில், மதங்களுக்கு இடையே நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மதங்களுக்கு இடையே ஒப்புரவை உருவாக்கும் அவை ஒன்றை ஏற்படுத்த அரசு தீர்மானித்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் கொழும்பு நகரில், உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்ப்படவர்கள் மற்றும் அவற்றில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, ஹங்கேரி அரசும், கத்தோலிக்கத் திருஅவையும் ஆற்றிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார், இலங்கை வெளியுறவு அமைச்சர், திலக் மரப்பானா.

ஜூன் 12, இப்புதனன்று ஹங்கேரி நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, இலங்கை வெளியுறவு அமைச்சர், திலக் மரப்பானா அவர்கள், புடாபெஸ்ட் நகரில், ஜூன் 14, இவ்வெள்ளியன்று, ஹங்கேரி ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் András Veres அவர்களைச் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் András Veres அவர்கள், ஹங்கேரி அரசு, அந்நாட்டுப் பணத்தில், 2 கோடி அளவிலான மனிதாபிமான உதவியை இலங்கைக்கு ஆற்றியுள்ளது என்றும், இந்த உதவி, ஹங்கேரி ஆயர் பேரவை வழியாக, இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னும், இலங்கையில், மதங்களுக்கு இடையே நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மதங்களுக்கு இடையே ஒப்புரவை உருவாக்கும் அவை ஒன்றை ஏற்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இத்தீர்மானம், அந்நாட்டின் அனைத்து மதங்களின் பிரதிநிதிகளின் பரிந்துரையின்பேரில் எடுக்கப்பட்டுள்ளது என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.  

ஏறத்தாழ 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்கின்ற இலங்கையில், கிறிஸ்தவர்கள் 7.4 விழுக்காடு. முஸ்லிம்கள் 10 விழுக்காடு. பெரும்பகுதியினர் புத்த மதத்தினர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2019, 14:38