தேடுதல்

Vatican News
சந்தேகத்துக்குரியவர்களை சீனாவுக்கு அனுப்பி வைக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு சந்தேகத்துக்குரியவர்களை சீனாவுக்கு அனுப்பி வைக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு 

ஹாங்காங் அரசின் புதிய சட்டவரைவு கைவிடப்பட வலியுறுத்தல்

ஹாங்காங் அரசு, குடிமக்களின் நலன்கருதி, இந்த சட்டத்தைக் கைவிட வேண்டுமென்று செபிக்குமாறு, ஹாங்காங் மறைமாவட்டம், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரு நாட்டிலிருந்து கடத்தப்பட்டு வேறொரு நாட்டிற்கு வந்தடைந்த குற்றவாளியை, அவரது தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைத்தல் குறித்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஹாங்காங் அரசு எடுத்துவரும் முயற்சிகள் கைவிடப்படுமாறு, ஹாங்காங் மறைமாவட்டம் வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாகிய ஹாங்காங் அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், மாபெரும் பேரணியை நடத்தியதைத் தொடர்ந்து, ஹாங்காங் மறைமாவட்டம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஹாங்காங் சமுதாயத்தின் நலன்கருதி, அரசு, இந்த சட்டத்தைக் கைவிட வேண்டுமென்று செபிக்குமாறு, ஹாங்காங் மறைமாவட்டம், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தன் கருத்தியல்களிலிருந்து வேறுபட்டுச் செயல்படும், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களைத் தடைசெய்து, அவர்களைச் கைதுசெய்வதற்கு, சீன அரசு, ஹாங்காங் அரசின் இந்த சட்டத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று, ஹாங்காங் மக்கள் அஞ்சுகின்றனர் என ஆசியச் செய்தி கூறுகின்றது.

சந்தேகத்துக்குரியவர்களை சீனாவுக்கு அனுப்புதல் என்பது, அவர்கள் நியாயமாக விசாரிக்கப்படுவதற்கும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லையென்று, உலகில் சட்டத்துறையினர் கூறியுள்ளனர். 

இதற்கிடையே, இந்த சட்டத்தை கூடுமானவரை, விரைவில் அங்கீகரிக்க விரும்புவதாக, ஹாங்காங் அரசு, ஜூன் 9, இஞ்ஞாயிறு பகல் 11 மணிக்கு அறிவித்தது. பெருமளவான பொது மக்களும் உடனடியாக, அதனை எதிர்த்து அமைதி பேரணி நடத்தினர். இச்சட்டத்தை அங்கீகரிப்பது குறித்து, ஜூன் 13, வருகிற வியாழனன்று மீண்டும் விவாதிக்கவுள்ளது ஹாங்காங் அரசு. (AsiaNews)

11 June 2019, 15:15