தேடுதல்

Vatican News
ஹாங்காங்கில் போராட்டம் ஹாங்காங்கில் போராட்டம் 

ஹாங்காங்கில் அமைதி நிலவ செபியுங்கள்

ஹாங்காங் அரசுக்கும், போராட்டதாரர்களுக்கும் இடையே ஒருவரை ஒருவர் மதிக்கும் முறையில் உரையாடல் இடம்பெறுமாறு, ஹாங்காங் கர்தினால் John Tong அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஹாங்காங்கில் இடம்பெறும் போராட்டங்கள், இவ்வாரத்தில் வன்முறையாக மாறி, பதட்டநிலைகள் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும்வேளை, ஹாங்காங் அரசுக்கும், போராட்டதாரர்களுக்கும் இடையே ஒருவரை ஒருவர் மதிக்கும் விதத்தில் உரையாடல் இடம்பெறுமாறு, ஹாங்காங் அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் John Tong அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹாங்காங்கின் நிலவரம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் Tong அவர்கள், அந்நகரில் அமைதி நிலவ செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார், அதேநேரம் அங்கு இடம்பெறும் வன்முறைகள் குறித்த தனது கண்டனத்தையும் வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதா குறித்த பேச்சுவார்த்தையைத் தடைசெய்யும் விதமாக, போராட்டதாரர்கள், அரசுக் கட்டடங்களைச் சேதப்படுத்த முயற்சித்தவேளை, காவல்துறை கண்ணீர்புகை குண்டுகளை வீசியதில், 21 காவல்துறையினர் உட்பட, 72 பேர் காயமடைந்துள்ளனர்.

குடிமக்கள் வன்முறையைப் பயன்படுத்தினால், அது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள கர்தினால், ஒருவரையொருவர் மதிக்கும் சூழலில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.  

ஒரு நாட்டிலிருந்து கடத்தப்பட்டு வேறொரு நாட்டிற்கு வந்தடைந்த குற்றவாளியை, அவரது தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைத்தல் குறித்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஹாங்காங் அரசு முயற்சிகள் எடுத்ததை முன்னிட்டு போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. தன் கருத்தியல்களிலிருந்து வேறுபட்டுச் செயல்படும், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களைத் தடைசெய்து, அவர்களைச் கைதுசெய்வதற்கு, சீன அரசு, ஹாங்காங் அரசின் இந்த சட்டத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று, ஹாங்காங் மக்கள் அஞ்சுகின்றனர் என ஆசியச் செய்தி கூறுகின்றது

இதற்கிடையே, இந்த எதிர்ப்புப் போராட்டங்களையொட்டி, ஹாங்காங் அரசு தற்போது அம்முயற்சியை நிறுத்தி வைத்துள்ளது எனச் சொல்லப்படுகின்றது.

15 June 2019, 14:45