தேடுதல்

Vatican News
வானவில்லுடன் ஒளி வீசும் புனித பேதுரு பேராலயம் வானவில்லுடன் ஒளி வீசும் புனித பேதுரு பேராலயம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி-7

திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்களுக்கு, தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வியப்பையே அளித்தது.

மேரி தெரேசா – வத்திக்கான்

1521ம் ஆண்டு சனவரி 3ம் தேதி வெளியிடப்பட்ட Decet Romanum Pontificem என்ற திருத்தந்தையின் அறிக்கை வழியாக, மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையைவிட்டு நிரந்தரமாகப் புறம்பாக்கப்பட்டார். இது நடந்து 12 மாதங்கள் சென்று, 1522ம் ஆண்டு சனவரி 9ம் தேதி, Utrecht நகரின் Adrian Florensz என்பவர், தனது 63வது வயதில், திருத்தந்தையாக, அனைவராலும் ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே, திருத்தந்தை 6ம் ஏட்ரியன் (Adrian VI அல்லது Hadrian VI) அவர்கள். 1978ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்வரை, 455 ஆண்டுகால இடைவெளியில், இத்தாலியரல்லாத திருத்தந்தையாக, இவர் ஒருவரே இருந்தார். திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், இத்தாலியரும் அல்ல, 14 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சியால் நேரிடையாக உருவாக்கப்பட்டவருமல்லர். உண்மையில், இவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில் பங்குகொள்ளவில்லை மற்றும், அதுவரை இத்தாலி நாட்டிற்குச் சென்றதும் கிடையாது.

ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், ஹாலந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். கிறிஸ்தவப் பண்புகளில் வளர்க்கப்பட்ட இவர், லுவெய்ன் புனித பேதுரு பல்கலைக்கழகத்தில், இறையியலில் முனைவர் பட்டம் பெற்று, அக்காலத்தில் சிறந்த இறையியல் பேராசிரியராகவும் விளங்கினார். 5ம் சார்லஸ் அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பவராக, 1507ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், சார்லஸ் இஸ்பெயின் அரசராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, இவரும் 1515ம் ஆண்டில் இஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். பேரரசர் சார்லஸ் அவர்களின் செல்வாக்கால், 1517ம் ஆண்டில் இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அதற்குப் பின்னர், தனது சொந்த நகரமான Utrechtக்குத் திரும்ப விரும்பினார். ஆயினும், இஸ்பெயின் அரசவையில் இவர் ஆற்றிய பணியினால், 1520ம் ஆண்டு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு, 1522ம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அதைத் தொடர்ந்தார்.    

திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்களுக்கு, தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வியப்பையே அளித்தது. ஏனெனில் அக்காலத்தில் உருவான சீர்திருத்த சபையினால் கத்தோலிக்கத்தில் நிலவிய குழப்பம், அரசர்களுக்கு இடையே நிலவிய அரசியல் பதட்டநிலை ஆகியவையே. எனினும் இவர் உரோம் நகரில் தங்கியிராததால், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மாதம் வரை அந்தச் செய்தி இவரை எட்டவே இல்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதிதான் உரோம் வந்தார். ஆகஸ்ட் 31ம் தேதி இவர் திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததால், இத்தாலியர் மற்றும் உரோம் திருஅவை தலைமை அதிகாரிகள் இவரை, நாகரீகமில்லாதவர் மற்றும், அந்நியராகவே நோக்கினர். இவர் பக்தியையும், நேர்மையையும், குறைகாண முடியாத அறநெறிப் பண்புகளையும் கொண்டிருந்தார். தனக்கு முந்தைய திருத்தந்தை பத்தாம் லியோ அவர்கள், பாப்பிறை மாளிகையை நிறைத்திருந்த வீண் ஆடம்பரத்தையும், கேளிக்கைகளையும் வெறுத்தார்.

இவர், பாப்பிறையாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அடுத்த நாளில் ஆற்றிய உரையில், தனது தலைமைப் பணியில் இரு திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். ஒன்று, வளர்ந்துவரும் பிரிந்த சபையின் சீர்திருத்தத்தோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தம் கொணர்வது. இரண்டாவதாக, ஒட்டமான் துருக்கியர்களை எதிர்ப்பதற்கு, கிறிஸ்தவ உலகை ஒன்றிணைப்பது. பிரான்ஸ் நாட்டு முதலாம் பிரான்சிஸ்க்கும், பேரரசர் ஐந்தாம் சார்லஸ்க்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த விரும்பினார். கிறிஸ்தவ அரசர்களுக்கு இடையே ஒற்றுமை நிலவினால்தான், துருக்கியர்களை முறியடிக்க முடியும் என்றார் இவர். ஐரோப்பாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் இவர் தோல்வி கண்டாலும், திருஅவையை சீரமைத்த பணியில் ஓரளவு வெற்றி கண்டார். திருஅவையில் இடம்பெற்ற தவறுகளை வெளிப்படையாகப் பேசினார், திருத்தந்தை 6ம் ஏட்ரியன்.      

திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், மார்ட்டின் லூத்தர் மற்றும் அவரின் சீர்திருத்தத்தை எதிர்த்தபோதிலும், அச்சீர்திருத்தத்திற்கு, சீர்திருத்தப்படாத உரோமைத் தலைமையகத்தைக் குறை கூறினார். 1522ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, கர்தினால்கள் அவையைக் கூட்டினார், திருத்தந்தை 6ம் ஏட்ரியன். அதில், உரோம் நகரின் நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை என்று சொன்னார். கர்தினால்களின் வருவாய்கள் குறைக்கப்பட வேண்டும், அவர்களின் பணம் சேமித்து வைக்கப்படாமல், பொதுநலத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இவர்கள், தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தகுதியான முறையில் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், தாடிகளை வெட்ட வேண்டும், என்றார். அவர்கள் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் எனவும் இவர் வரையறுத்தார். 1523ம் ஆண்டு பிப்ரவரியில், உரோமைத் தலைமையகத்தில் இடம்பெறும் தவறுகளை நீக்கி, அதனைச் சீர்படுத்த, கர்தினால்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார்.

திருஅவைத் தலைமையகத் தலைவர்கள் எளிமையாக வாழ வேண்டுமென விரும்பிய திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்களே எளிமையாக வாழ்ந்தார். இவரின் பழக்கவழக்கங்களைப் பார்த்து, உரோமையர் வியந்தனர். அவர் தங்கியிருந்த இல்லம் மிக எளிமையாக இருந்தது. சமையலுக்கென, பெல்ஜிய நாட்டு வயதான பெண் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்தியிருந்தார். பாப்பிறை மாளிகை, தேவையற்ற அதிகாரிகளின் கூட்டங்களால் நிறைவதை நிறுத்தினார். 1522ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி திருத்தந்தையாக உரோம் வந்த திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், 1523ம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாளன்று இறைவனடி சேர்ந்தார். குறுகிய கால பாப்பிறை தலைமைப் பணியில் சிறந்த சீர்திருத்தங்களைச் செய்தார், திருத்தந்தை 6ம் ஏட்ரியன்.

19 June 2019, 16:02