Vatican News
Erfurt அகுஸ்தீன் துறவு இல்லம் Erfurt அகுஸ்தீன் துறவு இல்லம்  (@fotoeins fotoeins.com, 2014)

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 6

கடந்த காலத்தை, அன்போடும், நேர்மையோடும் நாம் பார்த்து, அங்கு நாம் செய்த தவறுகளை ஏற்று, மன்னிப்பு கேட்கவேண்டும். இறைவனே நமது நடுவராக இருக்கிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான்

உலகில் 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட பெரும் பிரிவினையில், கிழக்கில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம், மேற்கில் உரோமன் கத்தோலிக்கம் என, இரண்டாகப் பிரிந்தது. அதற்குப் பின்னர், 1517ம் ஆண்டில், ஜெர்மனியின் அகுஸ்தீன் சபை துறவியான இறையியல் பேராசிரியர் மார்ட்டின் லூத்தர் அவர்கள், அவர் காலத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில், இறையியல் கோட்பாடுகளுக்கு முரணாக இடம்பெற்ற பல்வேறு போதனைகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்தார். அவ்வாண்டு அக்டோபர் 31ம் தேதி, அனைத்துப் புனிதர்கள் விழா திருவிழிப்பு நாளில், விட்டன்பர்க் அரண்மனை ஆலயக் கதவில், ‘95 கொள்கைகள்’ என்ற அறிக்கையை வெளியிட்டார். பாவங்களுக்கு வழங்கப்பட்ட மன்னிப்புகள் உட்பட பல்வேறு நடைமுறைகள் குறித்து, அறிவாளர்கள் மத்தியில் விவாதங்கள் இடம்பெற வேண்டுமென்றார் லூத்தர். இந்த அறிக்கையைக் கைவிடுமாறு, 1520ம் ஆண்டில், திருத்தந்தை பத்தாம் லியோ அவர்களும், 1521ம் ஆண்டில், Diet of Worms என்ற இடத்தில், புனித உரோமைப் பேரரசர் 5ம் சார்லஸ் அவர்களும், லூத்தரை வலியுறுத்தினர். லூத்தர் அதற்கு இணங்காததால், அவரை கத்தோலிக்கத் திருஅவைக்குப் புறம்பாக்கினார், திருத்தந்தை. லூத்தரும், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்து, சீர்திருத்த சபையை உருவாக்கினார்.

Erfurt அகுஸ்தீன் துறவு இல்லத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

16ம் நூற்றாண்டில் உருவான இந்த மனக்கசப்புகளை அகற்றி, கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பை உருவாக்குவதற்கு, அண்மைக் காலத் திருத்தந்தையர் முயற்சித்து வருகின்றனர். உலக லூத்தரன் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர் திருத்தந்தையர். கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைகளுக்கிடையே கலந்துரையாடல் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனியின் Erfurtல் மார்ட்டின் லூத்தர் துறவு இல்லத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரிந்த கிறிஸ்தவ சபை சீர்திருத்தம் இடம்பெற்றபின், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்விடம் சென்ற முதல் ஜெர்மன் திருத்தந்தையாவார். இவர், இவ்விடத்திற்குச் செல்வதற்கு முன்னர், பிரிந்த கிறிஸ்தவ சபை தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவோடு, தனது ஜெர்மனி திருத்தூதுப்பயணத்தைத் தொடர்புபடுத்த விரும்பினார். இவரின் இந்த ஆவலை நிறைவேற்றும் விதமாக, லூத்தர் அவர்கள், படித்து அருள்பணியாளராகி, இறையியல் பேராசிரியரான, Erfurt அகுஸ்தீன் துறவு இல்லத்தில், இந்நிகழ்வு இடம்பெறச் செய்தனர், லூத்தரன் சபையினர். Erfurt இல்லம், விட்டன்பர்க் நகருக்கு அருகிலுள்ளது. லூத்தர் தனது 95 கொள்கைகளை வெளியிட்ட இந்த இடம், பிரிந்த கிறிஸ்தவ சபையின் இதயமாகக் கருதப்படுகிறது. “அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன் (யோவா.17,20)“ என்று, இயேசு தம் தந்தையிடம் செபித்த திருச்சொற்களுடன் தனது உரையைத் தொடங்கிய, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், லூத்தர், கடவுள்மீது கொண்டிருந்த தாகத்தைப் புகழ்ந்தார். இந்த இறைதாகம், அவரது வாழ்வு முழுவதற்கும் உந்து சக்தியாகவும், பேரார்வமாகவும் இருந்தது. என்னில் கடவுளின் இடம் எது?, கடவுளின்முன் நான் எங்கே நிற்கிறேன்? என்ற மார்ட்டின் லூத்தரின் பற்றியெரியும் இந்தக் கேள்வி, இன்று மீண்டும் புது வடிவம் எடுத்த நம் கேள்வியாகவும் மாறியுள்ளது. லூத்தர், ஆன்மீகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார்.

மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம் தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவு, 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டது. அதை முன்னிட்டு, வத்திக்கான் அஞ்சல் துறை, மார்ட்டின் லூத்தர் நினைவு அஞ்சல்தலை ஒன்றை, அந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி வெளியிட்டது. மேலும், லூத்தரின் சீர்திருத்தம் தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சுவீடன் நாட்டிற்கு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். அச்சமயத்தில், உலக லூத்தரன் சபை கூட்டமைப்புடன், Lund நகர் லூத்தரன் பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் திருத்தந்தை கலந்துகொண்டார். அச்செப வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு உரையாற்றினார்.

Lund லூத்தரன் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

கடந்த காலத்தை, அன்போடும், நேர்மையோடும் நாம் பார்த்து, அங்கு நாம் செய்த தவறுகளை ஏற்று, மன்னிப்பு கேட்கவேண்டும். இறைவனே நமது நடுவராக இருக்கிறார். உண்மையான விசுவாசத்தைக் காப்பதற்கு, இரு தரப்பினரும், உண்மையான முயற்சிகளை மேற்கொண்டோம். அதேவேளையில், நமது நிலையிலேயே மூடப்பட்டு, அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பார்க்கத் தவறினோம். திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், "வரலாற்றின் நடுவர்களாக நம்மையே உருவாக்கிக்கொள்ளாமல், உண்மையின் தூதர்களாக மாறுவதற்கு முயலவேண்டும்" என்று கூறினார். திருஅவையின் வாழ்வில், புனித நூல் வகிக்கும் மையமான இடத்தைப் புரிந்துகொள்ள, சீர்திருத்த இயக்கம் உதவியது என்பதை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம். இதே இறைவார்த்தை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம்மை இணைத்து வந்துள்ளது. இறைவார்த்தை தொடர்ந்து நம்மை இன்னும் ஆழமாக இணைக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்போம். இறைவன் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற ஆன்மீக அனுபவத்தை, மார்ட்டின் லூத்தர் நமக்கு முன் சவாலாக வைக்கிறார். மனிதர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முன்னதாகவே, இறைவன் முதல் முயற்சியை எடுக்கிறார் என்பதை அவர் நமக்கு நினைவுறுத்துகிறார். நாம் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் மன்னிக்கிறோமோ, அவ்வளவு தூரம், இறைவனின் இரக்கத்திற்கு நாம் சாட்சிகளாக இருக்கமுடியும். மன்னிப்பு, மறுமலர்ச்சி, ஒப்புரவு ஆகியவை ஒவ்வொரு நாள் அனுபவங்களாக மாறும்போதுதான் நாம் இறைவனின் இரக்கத்திற்கு சாட்சி பகர முடியும்.

இறைவன் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை மனதில் இறுத்தி, லூத்தரன் சபையினராகவும், கத்தோலிக்கராகவும் இணைந்து, நாம் இந்த பேராலயத்தில் செபிக்கிறோம். இறைவனின் இரக்கத்திற்கும் அன்பிற்கும் ஏங்கி நிற்கும் இவ்வுலகிற்கு, இரக்கமே உருவான நம் இறைவனின் வார்த்தையை இணைந்து பறைசாற்ற, தேவையான அருளைத் தர, ஒன்று சேர்ந்து, இறைவனிடம் செபிக்கிறோம்.

பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் நல்லுறவை வளர்க்க, கத்தோலிக்கத் திருஅவையும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இயேசு ஆண்டவரின் செபத்தை கிறிஸ்தவ சபைகள்  நிறைவேற்றும் என நம்புவோம்.

12 June 2019, 13:23