Vatican News
உலகில் முதல் கிறிஸ்தவ ஆலயம், அர்மேனியா உலகில் முதல் கிறிஸ்தவ ஆலயம், அர்மேனியா 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 5

ஏறத்தாழ 350 பிரிந்த சபைகள் இணைந்து, WCC எனப்படும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் 150 நாடுகளில் ஏறத்தாழ 59 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

மேரி தெரேசா – வத்திக்கான்

பிரிந்த கிறிஸ்தவ சபையில் மற்றுமொரு முக்கியமான சபை, கால்வனிச சபையாகும். ப்ரெஞ்ச் நாட்டு வழக்கறிஞரான ஜான் கால்வின் என்பவரால் இச்சபை தொடங்கப்பட்டது. ஜான் கால்வின் அவர்கள், தலைசிறந்த இறையியல் வல்லுனர். ‘நேர்மையாளர் நம்பிக்கையால் மீட்படைகின்றார்’ என்ற, மார்ட்டின் லூத்தர் அவர்களின் கோட்பாட்டை ஏற்றார். எனினும், கிறிஸ்தவ குழுமத்தில், சட்டத்திற்கு அதிக இடம் கொடுக்கப்படுவதாக உணர்ந்தார் கால்வின். இதனால் இவர், பிரிந்த கிறிஸ்தவ சபையில் இணைந்தார். பிரான்ஸ் நாட்டில் பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கு எதிர்ப்பு எழுந்தபோது, கால்வின் அவர்கள், சுவிட்சர்லாந்தின் பேசில் நகருக்குத் தப்பிச் சென்றார். அங்கு 1536ம் ஆண்டு, கால்வின் "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" (The Institutes of the Christian Religion) என்னும் நூலை வெளியிட்டார். ஜெனீவா நகரில் கிறித்தவ சபையைச் சீர்திருத்தி அமைக்குமாறு, வில்லியம் ஃபாரெல் என்பவர், கால்வினைக் கேட்டுக்கொண்டார். ஜெனீவா மக்கள், அவ்விருவருடைய கருத்துக்களை ஏற்கவில்லை. எனவே இவ்விருவரும் ஜெனீவாவைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ட்டின் பூசெர் என்பவர் கால்வினை ஸ்ட்ராஸ்புர்க் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கால்வின் அவர்கள், ஸ்ட்ராஸ்புர்க் நகரில், புலம்பெயர்ந்து வாழ்ந்த, ப்ரெஞ்சு மக்கள் இருந்த ஒரு சபைக்கு மேய்ப்பர் ஆனார். கால்வின் தனது சீர்திருத்த கருத்துக்களை விளக்கி பல நூல்களை வெளியிட்டார். "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" என்னும் நூல் தவிர, அவர் ஏறக்குறைய விவிலியம் முழுவதற்கும் விரிவுரை எழுதினார். மேலும், இறையியல் நூல்களை உருவாக்கினார் மற்றும், நம்பிக்கை அறிக்கைகளையும் எழுதினார், கால்வின்.

கால்வின் போதித்த முக்கிய கருத்துக்களுள் ஒன்று "முன்குறிப்புக் கொள்கை" (predestination) என்பதாகும். உலகில் பிறக்கும் மனிதருள் யார் யார் மீட்புப் பெறுவர், யார் யார் அழிவுக்கு உள்ளாவர் என்பதை, கடவுள் முன்கூட்டியே தீர்மானித்துள்ளார் என்பதே "முன்குறிப்புக் கொள்கை" ஆகும். கடவுள் எல்லாம் வல்லவர் என்பதிலிருந்து கால்வின் இக்கொள்கையைப் பெற்றார். மேலும், தனது கொள்கை, நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அகுஸ்தீன் என்பவரின் படிப்பினையைப் பின்பற்றியது என்றும், கால்வின் விளக்கம் அளித்தார். கால்வினியம் எனும் இறையியல் பிரிவுக்கு வித்திட்டவர் இவர். அவருடைய கொள்கையின் அடிப்படையில் எழுந்த பிரிந்த கிறிஸ்தவ சபைகள் "சீர்திருத்த சபைகள்" (Reformed churches) என்று அழைக்கப்படுகின்றன. மேலும், ஜெனீவாவில் தங்கியிருந்த ஜான் நாக்ஸ் (John Knox 1513-1572) என்பவர், ஜான் கால்வின் என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்காட்லாந்தில், பிரிஸ்பிட்டேரியன் (Presbyterian)  கிறிஸ்தவ சபையை தோற்றுவித்தார். இது, ஸ்காட்லாந்தை இங்கிலாந்துடன் இணைப்பதற்கு உதவியாக இருந்தது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், Huldrych Zwingli என்பவர், திருஅவையும், அரசும் இணைந்து இறைவனுக்குத் தொண்டாற்றும் ஓர் அமைப்பை உருவாக்கினார். நேர்மையாளர் நம்பிக்கையால் மீட்படைகின்றார் என்ற கோட்பாட்டில், லூத்தருடன் ஒத்திணங்கிச் சென்றாலும், திருநற்கருணையை பொறுத்தவரை, மாறுபட்ட புரிதலைக் கொண்டிருந்தார் Zwingli. மேலும், மற்றுமொரு சீர்திருத்தக் குழு, திருமுழுக்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படக் கூடாது, மாறாக, இயேசுவில் தங்கள் விசுவாசத்தை அறிவிக்கும் வயது வந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது. 16ம் நூற்றாண்டில், Anabaptists என அழைக்கப்பட்ட இந்தக் குழுவினர், கடும் சித்ரவதைகளுக்கு மத்தியிலும் செயல்பட்டு வந்தனர். Socinian என்பவர்கள், தொன்மை கால மூவொரு கடவுள் கோட்பாட்டை எதிர்த்தவர்கள். இந்தக் குழுவினர் போலந்து நாட்டில் அதிகமாகப் பரவினர்.

WCC மன்றம்

மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து, சீர்திருத்த கிறிஸ்தவ சபையை ஆரம்பித்த பின்னர், மேலும் பல கிறிஸ்தவ சபைகள் உருவாகின. லூத்தர் அவர்களைப் பின்பற்றி தொடங்கிய சபைகள், சீர்திருத்த சபைகள் என தங்களை அழைத்துக் கொண்டதால், பிற்காலத்தில், லூத்தர் அவர்கள் தொடங்கிய சபை, லூத்தரன் சபை என அழைக்கப்படலாயிற்று. இன்று உலகில், கீழை வழிபாட்டுமுறை அசீரியன் சபை, கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபை, மலபார் மார் தோமா சிரியன் சபை, பழைய கத்தோலிக்க சபை, ஆங்லிக்கன் சபை, லூத்தரன், Mennonite, மெத்தோடியஸ், மொராவியன், Presbyterian, சீர்திருத்த சபைகள் போன்ற பிரிந்த கிறிஸ்தவ சபைகள், பாப்பிடிஸ்ட், பெந்தக்கோஸ்து போன்ற இவாஞ்சலிக்கல் சபைகள் உட்பட பல பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 350 சபைகள் இணைந்து, WCC எனப்படும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில், 150 நாடுகளில், ஏறத்தாழ 59 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 4,93,000 போதகர்கள் ஆன்மீகப் பணியாற்றுகின்றனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தலைமை இல்லத்தைக் கொண்டிருக்கும் இந்த மன்றம், 19ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, இது அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவது பாதிக்கப்பட்டது. 1948ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் புத்துயிர் பெற்று, உரோமன் கத்தோலிக்கத் திருஅவையோடு இணைந்து பல சமுதாயநலப் பணிகளை ஆற்றி வருகின்றன, WCC மன்றத்தைச் சேர்ந்த சபைகள்.     

05 June 2019, 14:02