தேடுதல்

Vatican News
தலசாரி பங்குத்தளத்தில் உறுதிப்பூசுதல் பெற்ற இளையோர் தலசாரி பங்குத்தளத்தில் உறுதிப்பூசுதல் பெற்ற இளையோர் 

தலசாரி பங்கில், 285 இளையோரின் உறுதிப்பூசுதல்

வசாயி உயர் மறைமாவட்டத்தின், 285 இளையோருக்கு பேராயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்கினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் வசாயி (Vasai) உயர் மறைமாவட்டத்தின், தலசாரி (Talasari) பங்குத்தளத்தில், 285 இளையோருக்கு பேராயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், மே 14, இச்செவ்வாயன்று உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்கினார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இப்பகுதியில் கத்தோலிக்கத் திருஅவை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதன் அடையாளமாக விளங்கும் இவ்விளையோரின் எண்ணிக்கை, மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று, பேராயர் மச்சாடோ அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

மே மாதம் முழுவதும் உயர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் உறுதிப்பூசுதல் வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்த பேராயர் மச்சாடோ அவர்கள், தலசாரி மறைபரப்புப் பணித்தளத்தில் உறுதிப்பூசுதல் பெற்ற பல இளையோர், மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

வேலைத்தேடி, இடம்விட்டு இடம் குடிபெயரும் இக்குடும்பங்களில் வாழும் இளையோர், பல்வேறு இன்னல்களுக்கு இடையே, உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைப் பெறும் வகுப்புக்களில் பங்கேற்கின்றனர் என்று, இந்தப் பயிற்சியை ஒருங்கிணைக்கும் இயேசு சபை அருள்பணியாளர் யோஹான் அல்போன்சா அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

மதச் சுதந்திரத்தை மதிக்கும் வசாயி உயர் மறைமாவட்டத்தில், கிறிஸ்தவ மறையைத் தழுவ விரும்பும் எவரையும் உடனே ஏற்றுக்கொள்ளாமல், அவரது விருப்பத்தையும், நோக்கத்தையும் ஆய்வு செய்தபின்னரே, அவருக்கு கிறிஸ்தவ மறை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது என்று பேராயர் மச்சாடோ அவர்கள் தெளிவுபடுத்தினார்.

கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும் அறிவிக்கும்போது, ஈர்க்கப்பட்டு வருவோரிடம் அவரைப்பற்றி கூறுவதே எங்கள் பணி என்று பேராயர் மச்சாடோ அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

16 May 2019, 15:25