Orionine அருள்பணியாளர்கள் துறவு சபையின் இளம் துறவி மிக்கேல் லோஸ் Orionine அருள்பணியாளர்கள் துறவு சபையின் இளம் துறவி மிக்கேல் லோஸ் 

உயிருக்குப் போராடும் இளையோர், அருள்பணியாளராக...

புற்றுநோய் காரணமாக, போலந்து நாட்டில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் இளைய துறவி, மே 24ம் தேதி, வார்ஸா மருத்துவமனையில், அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறுதி நிலை புற்றுநோய் காரணமாக, போலந்து நாட்டில், தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் இளைய துறவி, மே 24, கடந்த வெள்ளியன்று, வார்ஸா மருத்துவமனையில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

Orionine அருள்பணியாளர்கள் என்றழைக்கப்படும் துறவு சபையின் உறுப்பினரான மிக்கேல் லோஸ் (Michal Los) என்ற இளந்துறவிக்கு, தியாக்கோன் மற்றும் அருள்பணியாளர் என்ற இரு நிலைகளையும், ஒரே வேளையில் வழங்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான அனுமதி வழங்கியதையடுத்து, லோஸ் அவர்களுக்கு திருப்பொழிவு நிகழ்ந்தது.

மே 23, வியாழனன்று Orionine அருள்பணியாளர்கள் சபையில், தன் இறுதி வார்த்தைப்பாட்டினை, மருத்துவ மனை படுக்கையில் இருந்தவண்ணம் எடுத்த இளையவர் லோஸ் அவர்களை, அடுத்த நாள், வெள்ளியன்று, Warsaw-Praga மறைமாவட்டத்தின் ஆயர் Marek Solarczyk அவர்கள் தியாக்கோனாகவும், அருள்பணியாளராகவும் திருப்பொழிவு செய்தார்.

மே 25, சனிக்கிழமையன்று, அருள்பணி மிக்கேல் லோஸ் அவர்கள், தன் குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவினருக்கும், மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இளம் அருள்பணியாளர் லோஸ் அவர்கள் மருத்துவமனை படுக்கையில் ஆற்றிய முதல் திருப்பலியின்போது, தனக்காகச் செபிக்கும் அனைவருக்கும் இறுதியில் நன்றி கூறி, ஒரு புதிய அருள்பணியாளராக, அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கும் காணொளி, முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2019, 15:18