தேடுதல்

வலது கை சூம்பிய ஒருவரை, ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு குணமாக்கிய புதுமை வலது கை சூம்பிய ஒருவரை, ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு குணமாக்கிய புதுமை 

ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 5

இயேசு, ஒய்வு நாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும் மக்கள் மனங்களில் அரியணை ஏற்றினார். கடவுளுக்குரியதை கடவுளுக்குத் தந்த திருப்தி இயேசுவுக்குக் கிடைத்தது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 5

வலது கை சூம்பிய ஒருவரை, ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு குணமாக்கிய புதுமையை, கடந்த சில வாரங்களாக, விவிலியத் தேடலில் சிந்தித்து வந்தோம், இன்று நிறைவு செய்கிறோம். இயேசு அப்புதுமையைச் செய்தபோது, சூழ இருந்த எளிய மக்கள் மகிழ்வில் நிறைந்திருப்பர். ஆனால், அதே வேளை, அத்தொழுகைக்கூடத்தில் எதிர்ப்பும், வெறுப்பும், உருவாயின என்பதையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும், கோபவெறி கொண்டு, இயேசுவை ஒழிக்க திட்டமிட்டனர் என்பதை, நற்செய்தியாளர்கள், மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். (மத்தேயு 12:14, லூக்கா 6:11) பரிசேயர்கள் மேற்கொண்ட கொலைத்திட்டத்தைக் குறித்து, மற்றொரு குறிப்பை, நற்செய்தியாளர் மாற்கு இணைத்துள்ளார். உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் (மாற்கு 3:6) என்று மாற்கு நற்செய்தியில் வாசிக்கிறோம்.

கொள்கை அளவில், இரு வேறு துருவங்களாக இருந்த, பரிசேயர்களும், ஏரோதியரும் இணைந்துவந்தனர். காரணம் என்ன? அவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில், நண்பர்களும், எதிரிகளும், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுவர் என்பதை, நாம், பல நாடுகளில் பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும், போல ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, வேதனையடைந்திருக்கிறோம். இத்தகைய ஒரு காட்சியை நமக்கு நினைவுறுத்துகிறார், நற்செய்தியாளர் மாற்கு. இத்தருணத்தில், மே, 23, இவ்வியாழனன்று, இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளிவரவிருப்பதை சற்று எண்ணிப்பார்ப்போம். மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைவர்களை, மக்கள் தெரிவு செய்திருப்பர் என்ற நம்பிக்கையுடன் நாம் தேடலை மேற்கொண்டுள்ள புதுமைக்குத் திரும்புவோம்.

இயேசுவைக் கொல்வதற்கு முயன்ற பரிசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் ஆகியோரைக் கண்டு, நாம் கோபமடைகிறோம். ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு, மரியாதை செய்வதற்குப் பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவைக் கொல்ல நினைக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற கண்டனக் கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு. தயவுசெய்து, அவசரப்பட்டு, நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது, இரு பக்கங்கள் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர்பக்கம் இருந்தோருக்கும், ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

எதிராளிகளின் பக்கம்தான் என்ன? அவர்களது கோபத்தையோ, அதன் நியாய, அநியாயத்தையோ புரிந்து கொள்வதற்கு முன்னால், அவர்கள் யாரெனப் புரிந்துகொள்ள முயல்வோம். இயேசுவுக்கு எதிராக கூட்டணி அமைத்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர்... இவர்கள் அனைவரைப்பற்றியும் புரிந்துகொள்ள ஒரு விவிலியத் தேடல் போதாது. இப்போதைக்கு, இக்குழுவிலிருந்து, பரிசேயர்களைப்பற்றி மட்டும் புரிந்துகொள்ள முயல்வோம்.

பரிசேயர்கள் என்றதும் நம் மனதில் வில்லன்களைப் போன்ற உருவங்கள் தோன்றலாம். பரிசேயர்களை, ‘வெளிவேடக்காரர்கள்’ என்று, இயேசு சாடியதால், அவர்களை, வில்லன்களைப்போல் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பரிசேயர்கள் அனைவரையும், வெளிவேடக்காரர்கள் என்று முத்திரை குத்திவிட வேண்டாம். அவர்களில் பெரும்பாலானோர், அடிப்படையில் நல்லவர்கள். கடவுளின் கட்டளைகளையும், மோசே தந்த கட்டளைகளையும் மிக நுணுக்கமாக, துல்லியமாகக் கடைபிடித்தவர்கள். மக்களும் அவற்றைக் கடைபிடிக்கவேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள். அவர்களது ஆர்வத்தை, ஒருவகையான வெறி என்றும் கூறலாம்.

அவர்கள் வாழ்வை அதிகம் வழிநடத்தியவை - ஒய்வுநாள் ஒழுங்குகளும், தொழுகைக்கூட நியதிகளும். இறைவன் தந்த கட்டளைகளிலேயே மிக முக்கியமாக அவர்கள் கருதியது, ஒய்வு நாள் கட்டளையே. இதைப்பற்றி, விடுதலைப் பயண நூல் கூறுவது இதுதான்:      

விடுதலைப்பயணம் 20/1, 8-11

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

புனிதமான ஒய்வுநாளைப்பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியும், அந்த கட்டளையை மீறும் பலரைக் கண்டு பரிசேயர்கள் கோபமுற்றனர். ஒய்வுநாள் என்றால் என்ன, அன்று செய்யக்கூடிய, செய்யக்கூடாத வேலைகள் என்ன, என்ற விளக்கங்களை மக்களுக்கு தந்தனர். ஒய்வுநாளைப் பற்றி, பரிசேயர்கள் தந்த விளக்கங்கள் என்ற அலங்காரம், அந்த அடிப்படை கட்டளையையே மறைக்கும்வண்ணம் குவிந்துவிட்டது.

திருநாட்களில், இறைவனின், அல்லது புனிதர்களின் திரு உருவை, தேரில் ஏற்றி,  ஊர்வலமாகக் கொண்டுசெல்வதற்குமுன், அந்தத் தேரை அலங்காரம் செய்வோம். அந்த அலங்காரங்களும், பூக்களும், பல வேளைகளில், நாம் ஏற்றிவைத்த திருஉருவத்தையே மறைத்துவிடும். சில வேளைகளில், இந்த அலங்காரங்களைச் செய்தவர்கள், அல்லது, பூக்களுக்கு நிதி உதவி செய்தவர்களின் பெயர்கள் பெரிதாக எழுதப்பட்டு, தேரின் முன்புறம், வைக்கப்படும். இறைவனை விட, புனிதர்களை விட பூக்களும், அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகிவிடும் ஆபத்து எழுவதில்லையா? அதைப்போலத்தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வு நாள் கட்டளையை விட, அதற்கு சொல்லப்பட்ட விளக்கங்கள், பெரும் மலையாக உயர்ந்துவிட்டதால், பரிசேயர்களும், மக்களும், கடவுள் தந்த ஒய்வு நாள் கட்டளையின் அடிப்படை நோக்கத்தை மறந்து விட்டனர். இதைத்தான் இயேசு கடுமையாக எதிர்த்தார்.

பரிசேயர்களின் வழிமுறைகளை இயேசு கண்டனம் செய்ததற்கு மற்றொரு காரணம், அவர்கள், மக்களை விட, சட்டதிட்டங்களுக்குத் தந்த அளவு கடந்த முக்கியத்துவம். மனிதர்களின் வாழ்வு எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை; சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென சொல்வது தவறு. சட்டங்களைத் தந்த கடவுளுக்கு இணையாக, சிலசமயம், கடவுளுக்கும் மேலாக, சட்டங்களையே கடவுளாக்குவது, மதியற்ற செயல் என்பதை, இயேசு உணர்ந்திருந்தார்; பரிசேயரை உணரவைக்க முயன்றார். முடியவில்லை.

தேவைக்கும் அதிகமாக சட்டங்களுக்கு முதலிடம் தருவதால், நாம் எப்படி சிறைபடுவோம் என்பதைக் கூறும் ஒரு கதை இது...

துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பெரிய குரு, அந்தப் பூனையை ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். பின்னர் பூஜையை நடத்தினார். இப்படியே, அடுத்த சிலநாட்கள், பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜையின் ஆரம்பத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள், மடம் முழுவதும் தேடி, பூனையைக் கண்டுபிடித்து, கொண்டுவந்து, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜையை ஆரம்பித்தனர். பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற எண்ணம் உருவானது.

சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பூனை இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனையை வாங்கிவர சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர். அந்தப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்கவேண்டும், என்ற நிபந்தனையுடன் இத்தேடல் நடைபெற்றது.

பெரும் முயற்சிகள் எடுத்து, வெள்ளைப் பூனையைக் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டுவந்து, மடத்தில், முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் கட்டிய பிறகே, பூஜையைத் துவக்கினர். பூஜைக்குத் தடையாக அலைந்துகொண்டிருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்குத் தேவைப்படும் அளவு முக்கியத்துவம் அடைந்தது. பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழ்நிலை உருவானது.

பூஜைகளை மறக்கச்செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது ஆபத்து என்றும், பூனையை மறந்துவிட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்றும் இயேசு சொன்னார், அதை, செயலிலும் காட்டினார்.

கடவுள் தந்த ஒய்வுநாள், மனிதருக்கு நலம் பயக்கும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை, வேலை என்று அலைய வேண்டாம். அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றைவிட, இன்னும் மேலானவை, வாழ்க்கையில் உள்ளன. மேலான அவ்வுண்மைகளைத் தேடிக் கண்டுபிடிக்க, ஓய்வு தேவை. இறைவனை, குடும்பத்தை, உறவுகளை நினைத்துப் பார்க்க ஒய்வுநாள் தேவை. இதுதான், ஒய்வுநாளைப் பற்றி, இறைவன் சொல்லித்தர விரும்பிய முக்கியப் பாடம். ஆனால், ஒய்வுநாளைப் புனிதமாகக் கருதச்சொன்ன கடவுளையே மறந்துவிட்டு, பரிசேயர்கள், மனிதாபிமானமற்ற வகையில் ஒய்வுநாளை வழிபட ஆரம்பித்தது, இயேசுவை அதிகமாய் பாதித்திருக்க வேண்டும். எனவேதான், அவர், ஒய்வுநாள் விதிகளை மீறினார். அதுவும் தொழுகைக்கூடத்தில், ஒய்வுநாள் விதிகளை மீறி, மனிதர்களுக்கு நலம் அளித்தார். நலம் பெற்ற மனிதர்களும், நலம் தரும் புதுமையைப் பார்த்தவர்களும், கடவுளைப் புகழ்ந்தபோது, இயேசு, ஒய்வு நாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும் மக்கள் மனங்களில் அரியணை ஏற்றினார். கடவுளுக்குரியதை கடவுளுக்குத் தந்த திருப்தி இயேசுவுக்குக் கிடைத்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 15:00