தேடுதல்

Vatican News
"உமது கையை நீட்டும்!" என்று இயேசு அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. (லூக்கா 6:10) "உமது கையை நீட்டும்!" என்று இயேசு அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. (லூக்கா 6:10) 

ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 4

கை சூம்பிய மனிதரிடம், 'கையை நீட்டும்' என்று இயேசு கூறியதைக் கேட்டு அவர் செயல்பட்டதால், முற்றிலும் குணமடைந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 4

உடல் நலம் குன்றியவருக்கு இயேசு நலம் வழங்கிய 21 புதுமைகள், நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளன. அவற்றில் சில, ஓய்வு நாளில், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்தன என்பதையும், நற்செய்தியாளர்கள் குறிப்பிடத் தவறவில்லை. ஓய்வு நாள் சட்டத்தை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக்கூடத்தில் மீறுவது, அதைவிட பெரும் பிரச்சனை. அத்தகைய புதுமைகளில் ஒன்று, வலது கை சூம்பிய ஒருவருக்கு, இயேசு, ஓய்வுநாளில், தொழுகைக்கூடத்தில் ஆற்றிய புதுமை. இப்புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது.

இயேசு ஏன் ஓய்வு நாளில், தொழுகைக்கூடத்தில் இவ்வாறு செய்தார் என்று சிந்திக்கும்போது, இவற்றை, ஒரு தீர்மானத்தோடு அவர் செய்தார் என்பது விளங்கும். புதுமைகளால் தனிப்பட்ட ஓருவரோ, சிலரோ மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது தேவையுள்ளவர் வீடுதேடிச் சென்று புதுமைகள் செய்திருக்கலாம். அத்தகையப் புதுமைகளும் நற்செய்திகளில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஓய்வு நாளன்று, தொழுகைக்கூடத்தில், இயேசு ஆற்றிய புதுமைகள் வழியே, யூதர்களுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும், ஒய்வு நாள் குறித்த பாடங்களைச் சொல்லித்தருவது, இயேசுவின் தலையாயக் குறிக்கோளாகத் தெரிகிறது.

கை சூம்பியவரைக் குணமாக்கியப் புதுமையில், “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” (மாற்கு 2:4; லூக்கா 6:9) என்ற கேள்வியுடன், இயேசு, தன் பாடங்களைத் துவக்குகிறார். மத்தேயு நற்செய்தியில், ஓய்வுநாள் குறித்த விவாதத்தை, சூழ இருந்தோர் துவக்கியதாக கூறப்பட்டுள்ளது. "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" (மத்தேயு 12:10) என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், இயேசு அவர்களிடம் வேறொரு கேள்வியை எழுப்பி, பதிலையும் தருகிறார். அவர் அவர்களிடம், "உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கிவிடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார் (மத்தேயு 12:11-12) என மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர் என்ற பாடத்தை மிகத் தெளிவாகச் சொல்லித்தந்த இயேசு, தன் பாடத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக, கை சூம்பிய மனிதரைக் குணமாக்கினார். பிறகு இயேசு சுற்றிலும் திரும்பி, அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. (லூக்கா 6:10) என்ற சொற்களில், இப்புதுமை பதிவு செய்யப்பட்டுள்ளது. கைசூம்பியவர் எவ்வாறு நலமடைந்தார் என்று சிந்திக்கும்போது, ஒரு சில எண்ணங்கள் எழுகின்றன.

கை சூம்பிய மனிதருக்கு, இயேசு வழங்கிய முதல் கட்டளை: "எழுந்து நடுவே நில்லும்!" (லூக்கா 6:8); இரண்டாவது கட்டளை: "உமது கையை நீட்டும்!" (லூக்கா 6:10). இயேசு வழங்கிய இவ்விரு கட்டளைகளும், அவருக்குள் பெரும் போராட்டங்களை உருவாக்கியிருக்கும்.

தன் அங்கக் குறைபாட்டை ஒரு காட்சிப்பொருளாக்கும்வண்ணம், இயேசு, தன்னை எழுந்து நிற்கச் சொன்னபோது, தனக்குள் எழுந்த போராட்டங்களை வென்று, தொழுகைக் கூடத்தின் நடுவே வந்து நின்றார், அம்மனிதர். அதைத் தொடர்ந்து, இயேசுவுக்கும், பரிசேயருக்கும் இடையே ஓய்வுநாள் குறித்து விவாதம் எழுந்த வேளையில், கை சூம்பிய மனிதர், தன்னால், அந்தத் தொழுகைக்கூடத்தில், ஒரு கலவரம் எழுந்துவிடுமோ என்று கலங்கியிருக்கக்கூடும். இருப்பினும், அவர், இயேசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அங்கு நின்றார்.

ஒய்வு நாள் குறித்த விவாதம் சரியான முறையில் தீர்க்கப்படாதச் சூழலில், இயேசு "உமது கையை நீட்டும்!" என்று அவருக்குத் தந்த இரண்டாவது கட்டளை, கை சூம்பியவர் உள்ளத்தில் மேலும் சில போராட்டங்களை உருவாக்கியிருக்கும். இயேசு, அவரது சூம்பியக் கரத்தைத் தொட்டு குணமாக்கியபின், "உமது கையை நீட்டும்!" என்று கூறியிருந்தால், அவர், அக்கட்டளையை எளிதாக நிறைவேற்றியிருப்பார். ஆனால், தன் கரத்தை குணமாக்குவதற்கு முன்னரே, இயேசு 'கையை நீட்டும்' என்று அவரிடம் கூறியது, அவரது நம்பிக்கைக்கு வழங்கப்பட்ட ஒரு சவாலாக அமைந்திருக்கவேண்டும். நம்பிக்கையுடன் அவர், இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த வேளையில், அவர் நலமடைந்தார்.

இயேசு ஆற்றியப் புதுமைகளில், இதையொத்த நிகழ்வுகளை நாம் நான்கு நற்செய்திகளிலும் காண்கிறோம். கானா திருமண விருந்தில், இயேசு ஆற்றிய முதல் புதுமையில், தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கரங்களை நீட்டி ஆசீர் ஏதும் வழங்காமல், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார் (யோவான் 2:8-9) என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார். இயேசு வழங்கிய கட்டளையைக் கேட்டு, பணியாளர்கள் செயல்பட்ட வேளையில், அந்த தண்ணீர் ஏற்கனவே திராட்சை இரசமாக மாறியிருந்தது என்பதைக் காண்கிறோம்.

பெத்சதா குளத்தருகே 38 ஆண்டுகளாக உடல்நலமற்று படுத்திருந்தவரை தொட்டு குணமாக்காமல், இயேசு அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார் (யோவான் 5:8-9) என்று கூறப்பட்டுள்ளது.

பிறவியிலேயே பார்வையற்றிருந்த மனிதரை இயேசு குணமாக்கிய வேளையில், அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார்... அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார் (யோவான் 9:6-7) என்று வாசிக்கிறோம்.

பிரிக்கப்பட்டக் கூரை வழியே இறக்கப்பட்ட முடக்குவாதமுற்றவை தன் கரங்களால் தொட்டு குணமாக்குவதற்குப் பதில், இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார் (மாற்கு 2:11) என்று வாசிக்கிறோம்.

இவ்வாறு, இயேசு ஆற்றிய பல புதுமைகளில், நலம் நாடி அவரிடம் வந்தவர்கள், அவரது சொற்களைக் கேட்டு செயல்பட்ட வேளையில் நலமடைந்ததைக் காண்கிறோம். கை சூம்பிய மனிதரிடம், 'கையை நீட்டும்' என்று இயேசு கூறியதைக் கேட்டு அவர் செயல்பட்டதால், முற்றிலும் குணமடைந்தார். அவர் நலமடைந்த நிகழ்வு, சூழ இருந்த மக்களிடம் பெரும் மகிழ்வை உருவாக்கியிருக்கும். ஆனால், அதே வேளை, அத்தொழுகைக்கூடத்தில் எதிர்ப்பும், வெறுப்பும், உருவாயின என்பதையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பை, ஒத்தமை நற்செய்தி மூன்றிலும் நாம் வெவ்வேறு வடிவங்களில் வாசிக்கிறோம்: பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் (மத்தேயு 12:14) என்று மத்தேயு நற்செய்தியிலும், அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர் (லூக்கா 6:11) என்று லூக்கா நற்செய்தியிலும், உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் (மாற்கு 3:6) என்று மாற்கு நற்செய்தியிலும், வாசிக்கிறோம்.

 மதத்தையும், குறிப்பாக, மதம் சார்ந்த மரபுகளையும் காப்பதற்கு, மனிதர்கள் நடுவே எழுந்துள்ள மோதல்கள் எண்ணிலடங்கா என்பதை வரலாறு நமக்கு அடிக்கடி நினைவுறுத்தி வருகிறது. "மதத்தைத் தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும், மனித உயிர்கள் பெருமளவு கொல்லப்படவில்லை" என்பது, நம் நடுவே பல ஆண்டுகளாகக் கூறப்படும் ஒரு கூற்று.

கணிதம், இயற்பியல், மற்றும் இறையியலில் அறிஞராகத் திகழ்ந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த Blaise Pascal அவர்கள் கூறிய சொற்கள் சிந்திக்கத் தூண்டுபவை: "மனிதர்கள், தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் செயலாற்றும் நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில், அவர்கள், தீமையை, முழுமையாக, மனமுவந்து செய்வதில்லை."

யூத மதத்தின் உயிர் நாடியாக விளங்கிய ஒய்வு நாள் மரபை இயேசு மீறினார் என்ற காரணத்தால், யூத மதத் தலைவர்கள் நடுவே, இயேசுவை எவ்வாறு அழிப்பது என்ற ஆலோசனைகள் நிகழ்ந்தன.

ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற கண்டனக் கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு. தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது, இரு பக்கங்கள் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர்பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும். அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் பக்கமிருந்து, ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.

14 May 2019, 14:44