Cerca

Vatican News
"நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல." - யோவான் 14: 27 "நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல." - யோவான் 14: 27  

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. இந்தக் கல்லறை அமைதிக்கு மாற்றாக, இயேசு காட்டும் அமைதி, வாழ்வை வலியுறுத்தும் அமைதி.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

விமானம் ஒன்று ஏறத்தாழ 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென குலுங்கியது; ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தின் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாகவும், ஓர் இறக்கை, சிறிது உடைந்துவிட்டதாகவும், பயணிகள் மத்தியில், வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர், கண்களை மூடிக்கொண்டு, இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர், தங்களுக்குத் தெரிந்த செபங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலை, பல நிமிடங்கள் நீடித்ததால், விமானப் பணியாளர்கள் நடுவிலும் கலக்கம் தோன்றியது. ஏறத்தாழ, விமானத்தில் இருந்த அனைவரையுமே, அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர! ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி தனியே பயணம் செய்தார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர், அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி, ஒரு தெய்வீகப் புன்னகையுடன், "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார்.

இது, உண்மை நிகழ்வா என்பது தெளிவில்லை; ஆனால், இது ஓர் உவமையாக, நம் சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில், தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை, அச்சிறுமியின் அமைதிக்கு காரணமானது. நம் வாழ்வில், இடம்பெறும், குழப்பம், கலக்கம், இவற்றின் நடுவே, எது நமக்கு அமைதியைத் தரமுடியும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நமக்கொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழப்பமும், கலக்கமும் நிலவிய இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களுக்குத் தந்த பிரியாவிடை செய்தியின் ஒரு பகுதி, இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.

யோவான் நற்செய்தி 14: 27

"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்."  

உலகம் தரும் அமைதி, இறைவன் தரும் அமைதி என்ற இரு வேறு துருவங்களைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகம் தரும் அமைதி என்று சொல்லும்போது, நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது, போரும், வன்முறையும் இல்லாத ஒரு நிலை. கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த Herodotus என்ற கிரேக்கச் சிந்தனையாளர், அமைதி நிறைந்த நாட்டிற்கும், போர் சூழ்ந்த நாட்டிற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாட்டை இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்: "அமைதி நேரங்களில், மகன்கள் தங்கள் தந்தையரை அடக்கம் செய்வர். போர்க்காலங்களில், தந்தையர் தங்கள் மகன்களை அடக்கம் செய்வர்."

Herodotus அவர்களின் கூற்று, மனிதரிடையே வேரூன்ற முடியாமல் தவிக்கும் அமைதியைப்பற்றி சிந்திக்க, நம்மைத் தூண்டுகின்றது. இலங்கை, உள்நாட்டுப் போரினால் காயப்பட்டு கிடந்தபோது, ஒரு தாய் கூறிய வார்த்தைகள், நம் உள்ளங்களில் முள்ளாகத் தைக்கின்றன: “இயற்கை நியதியின்படி, ஒவ்வொரு மரத்திலும் வேர்கள் பூமிக்கடியில் இருக்கும். மரத்தின் பலன்களான மலர், காய், கனி ஆகியவை, பூமிக்கு மேல் இருக்கும். எங்கள் நாட்டிலோ நாங்கள் பெற்று வளர்த்த கனிகளான எங்கள் பிள்ளைகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர். வேர்களாகிய நாங்களோ, பூமிக்குமேல், உயிரற்ற, நடைபிணங்களாகத் திரிகிறோம்” என்று அந்தத் தாய் கூறிய வார்த்தைகள், இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு இன்று பொருந்தும்.

வேர்கள் பூமிக்கு மேலும், கிளைகள், பூமிக்குள்ளும் இருக்கும்படி மரங்களை யாராவது நட்டுவைத்தால், அவரை மதி இழந்தவர் என்று எளிதில் கூறலாம். ஆனால், உலகில் இன்று இதுதானே நடைமுறை வழக்காக உள்ளது. ஆக்கப்பூர்வமானப் பணிகளில் ஈடுபட்டு, கனிகளை வழங்கவேண்டிய இளையோர், ஒவ்வொரு நாட்டிலும், அழிவுதரும் போர்க்களங்களில் பணியாற்றுவதை, நாம் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்?

தலைகீழாக நடப்பட்ட மரங்களைப்போல், மனித சமுதாயத்தை தலைகீழாக மாற்றிவரும் அரசுகள், தாங்கள் செய்வது மதியற்றச் செயல் என்பதை உணர்ந்தும், ஒரு சில கோடீஸ்வரர்களின் சொத்துக்களையும், வர்த்தகத்தையும் காப்பதற்காக, இளையோரைப் பணயம் வைத்து, போர்புரிகின்றன. இராணுவத்திற்கும், போர்க் கருவிகளுக்கும் செலவழிக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள தொகையை நியாயப்படுத்தும் போக்கும் நமது அரசுகளிடையே அதிகமாகி வருகிறது.

Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது, உலக அமைதியை வளர்க்கும் வழிகளை ஆய்வு செய்யும் ஒரு மையம். ஒவ்வோர் ஆண்டும், உலகின் அரசுகள், இராணுவத்திற்குச் செலவிடும் தொகைகளின் பட்டியலை, இம்மையம் வெளியிட்டு வருகிறது. இம்மையம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையின்படி, உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து, 2018ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 1822 பில்லியன் டாலர்கள். அதாவது, 1,27,016 கோடி ரூயாய்கள்.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், படைக்கருவிகளுக்கும், இராணுவப் பராமரிப்புக்கும் செலவிடப்படும் தொகையில், நூற்றில் ஒரு பங்கை, மக்கள் முன்னேற்றத்திற்கென, ஒவ்வோர் அரசும் செலவிட்டால், உலகின் வறுமையும், பட்டினியும் அறவே ஒழிக்கப்படும் என்று, ஐ.நா.அவை கூறிவருவது, செவித்திறனற்றோருக்கு ஊதப்படும் சங்காக ஒலித்துக்கொண்டே உள்ளது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. இந்தக் கல்லறை அமைதிக்கு மாற்றாக, இயேசு காட்டும் அமைதி, வாழ்வை வலியுறுத்தும் அமைதி. இவ்வகை அமைதியைக் காண, தலாய் லாமா அவர்கள் தரும் ஆலோசனை இது: "நம் உள் மனதில் அமைதியைப் பெறாமல், வெளி உலகில் அமைதியைப் பெறமுடியாது".

உலக அமைதிக்கென அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று கண்டனம் செய்வதுடன், நம் பணி முடிந்துவிட்டதென திருப்தி காண்பது, நமக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால், உலகில் அமைதி உருவாக, அது நமக்குள் முதலில் உருவாகவேண்டும் என்ற சவாலை, இயேசுவும், தலாய் லாமாவும் நமக்குமுன் வைக்கின்றனர்.

"Waging Peace", அதாவது, "அமைதிக்காகப் போரிடுதல்" என்ற தலைப்பில், அருள்பணி Ron Rolheiser அவர்கள் எழுதியுள்ள மறையுரையில், உலக அரசுகளைக் கண்டனம் செய்வதற்குப் பதில், நம் வாழ்வு முறையை ஆய்வுசெய்ய அழைப்பு விடுக்கிறார். இதோ அவரது கருத்துக்களில் சில:

"நம் குடும்பங்களில், திருமணங்களில் உறவுகள் முறிந்து, வன்முறைகள் நிலவும்போது, உலக அரசுகள் நடுவே, வன்முறையற்ற உறவுகள் நிலவவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் வாழ்வில் ஏற்பட்ட பழையக் காயங்களை மன்னித்து, முன்னோக்கிச் செல்ல, நமக்கு மனமில்லாதபோது, நாடுகளிடையே உருவான வரலாற்றுக் காயங்களை மறந்து, அரசுத் தலைவர்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் குடும்பங்களில், சுற்றங்களில், நாம் வாழும் சூழல்களில், உண்மையானத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு அறிந்தபோதிலும், நம் உடல்தோற்றம், முகஅழகு என்ற வெளிப்பூச்சுக்களுக்கு நாம் அதிகம் செலவழிக்கிறோம். இந்நிலையில், அரசுகள், உலக அரங்கில் தங்கள் வெளித் தோற்றத்தைப் பாதுகாக்க, இராணுவத்திலும், படைக் கருவிகளிலும் செலவு செய்வதை நாம் கேள்வி கேட்கக்கூடாது.

எனவே, "அமைதிக்காகப் போரிடுதல்" என்பது, அரசுகள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பனவற்றிலிருந்து ஆரம்பமாவதில்லை. நாம் வளர்த்துக் கொள்ளும் பேராசை, மன்னிக்க மறுக்கும் மனநிலை, அணியவிரும்பும் முகமூடிகள் ஆகியவற்றைக் களைவதிலிருந்து ஆரம்பமாகவேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள அரசுகள், நிறுவனங்கள், அமைப்பு முறைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதைவிட, நம்மில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே முக்கியம்."

"அமைதிக்காகப் போரிடுதல்" என்பதைச் சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவருக்குள்ளும், நம் உறவுகளுக்குள்ளும் உருவாகும் மோதல்களுக்கு எவ்விதம் தீர்வு காண்கிறோம் என்பதை ஒரு முக்கிய அளவுகோலாக, நாம் சிந்தித்துப் பார்க்கலாம். துவக்க காலத் திருஅவையில் உருவான ஓர் உரசலுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. திருத்தாதர் பணிகள் 15 :  1-2, 22-29

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தவருக்கு விருத்தசேதனம் தேவையா இல்லையா என்ற முக்கியமான கேள்வி, எருசலேமில் நிகழ்ந்த முதல் சங்கத்தில், எழுந்தபோது, அதற்கு, அவர்கள் எவ்விதம் தீர்வு கண்டனர் என்பதை உணர்கிறோம். எருசலேம் சங்கம் முதல், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் முடிய, கத்தோலிக்கத் திருஅவை, பல்வேறு பிரச்சனைகளுக்கு, எவ்வாறு தீர்வுகள் கண்டது என்ற வரலாறு, நமக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.

பொதுவாக, திருஅவையில் எழுந்த பல கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க, தூய ஆவியாரின் வழிநடத்தலையும், இறைவாக்கையும் நம்பி, தீர்வுகள் காணப்பட்டன. செபம், உண்ணா நோன்பு, மனம் திறந்த உரையாடல், உண்மைக்குச் செவிமடுத்தல் என்ற உயர்ந்த வழிகள் பின்பற்றப்பட்டன.

இன்று, நாம் வாழும் காலத்தில், அரசியல், வணிகம், விளையாட்டு, கல்வி, கலை என்ற பல தளங்களில், சிறு பொறிகளைப்போல் உருவாகும் உரசல்களை, மேலும் ஊதி பெரிதாக்கும் முயற்சிகளே அதிகம் நிகழ்வதைக் கண்டு மனம் வருந்துகிறோம்.

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றங்கள், முதலில் உன்னில் நிகழட்டும்" "Be the change that you wish to see in the world" என்று, மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. நம்மிடம் ஆரம்பமாகும் மாற்றங்களுக்கு அடித்தளமாக இருக்கவேண்டிய சக்தி என்ன என்பதை விளக்க, அருள்பணி Ron Rolheiser அவர்கள் ஒரு சிறு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்:

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, நார்வே நாட்டைச் சேர்ந்த லூத்தரன் சபை போதகர் ஒருவரை, நாத்சி படையினர் கைது செய்து, விசாரணை அதிகாரிக்கு முன் நிறுத்தினர். விசாரணை துவங்குவதற்குமுன், அவ்வதிகாரி, தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்து, "போதகரே, இந்த விசாரணையின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்தவே, நான் இதை மேசைமீது வைத்தேன்" என்று கூறினார். உடனே, போதகர், தான் வைத்திருந்த விவிலியத்தை, அந்தத் துப்பாக்கிக்கு அருகே வைத்தார். "ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று அதிகாரி கேட்டதும், போதகர், அவரிடம், "நீங்கள் உங்களிடம் இருந்த ஆயுதத்தை எனக்கு முன் வைத்தீர்கள். நானும் அதேபோல் செய்தேன்" என்று அமைதியாகப் பதிலளித்தார்.

உலகில் அமைதி நிலவ, அரசுகள் போர்கருவிகளை நம்புகின்றன. ஆனால் அந்த அமைதி நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும் என்பதை உணரும் நாம், நம்மிடம் உள்ள சிறந்த கருவியான விவிலியத்தை, நற்செய்தியை முன்னிறுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

நமக்குள் எப்போது அமைதி உருவாகும்? நம்முள் பிளவுபட்டிருக்கும் பல பகுதிகள் ஒன்றிணைந்து வரும்போது அமைதி உருவாகும். நமது உள் உலகம், வெளி உலகம் என்ற விமானங்கள் நிலைதடுமாறி, தாறுமாறாகப் பறந்தாலும், அந்த விமானங்களை இயக்குபவர், தந்தையாம் இறைவன் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொண்டால், தடுமாற்றங்கள் மத்தியிலும் உண்மை அமைதியை நாம் உணர முடியும்.

உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, அதற்காக தன் உயிரையும் இழந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், அமைதியைப் பற்றி சொன்ன வார்த்தைகளுடன் இன்றைய நம் சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:

"இனவெறி, போர் என்ற இருளுக்குள் மனித சமுதாயம் புதைந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அமைதியும், உடன்பிறந்த உணர்வும் உதயமாகும் காலைப்பொழுது புலரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். எவ்வித படைக்கருவியையும் பயன்படுத்தாமல் சொல்லப்படும் உண்மையும், நிபந்தனையற்ற அன்புமே இறுதியில் நிலைக்கும் என்பதை நான் நம்புகிறேன்."

25 May 2019, 13:52