தேடுதல்

Vatican News
"நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்" (திருவெளிப்பாடு 21:1) "நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்" (திருவெளிப்பாடு 21:1) 

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

பூமிக்கோளத்தைக் காக்கும் உன்னதக் குறிக்கோள், உலகின் பல நாடுகளில் வாழும் இளையோரை இணைத்திருப்பது, நமக்கு நம்பிக்கை தருகிறது. இளையோர், மனிதகுடும்பத்தையும் காக்க இணைந்துவரவேண்டும், என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

"புதியது" என்ற சொல், விளம்பரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மந்திரச்சொல். உணவு, உடை, சோப்பு, ஷாம்பு என்று துவங்கி, கைப்பேசி, கணணி, கார், என, அனைத்தையும், இந்த மந்திரச்சொல் விற்பனை செய்கிறது. 'புதியன'வற்றைத் தேடிச்செல்லும் நமக்கு, இன்றைய ஞாயிறு வாசகங்கள், வேறுவகையான 'புதியன'வற்றைப் பற்றி பாடங்களைப் புகட்டவருகின்றன.

"நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்" (திருவெளிப்பாடு 21:1) என்று, 2வது வாசகத்தில் யோவானும், "புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவான் 13:34) என்று, நற்செய்தியில் இயேசுவும் கூறும் சொற்களை, நாம் இன்றைய வழிபாட்டில் கேட்கிறோம். விளம்பர, வர்த்தக உலகம் வரையறுக்கும் 'புதியது' என்ன என்பதையும், இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வரையறுக்கும் 'புதியது' என்ன என்பதையும், இணைத்துச் சிந்திப்பது, வாழ்க்கைக்குத் தேவையான சில தெளிவுகளைத் தரும்.

விளம்பரங்களில் அறிமுகமாகும் 'புதியது', நாளையோ, அடுத்த வாரமோ, 'பழையது' ஆகிவிடும் என்பதை அறிவோம். இருப்பினும், அந்தச் சொல்லின் மந்திரச் சக்திக்கு நாம் பல நேரங்களில் பலியாகிறோம் என்பதை மறுக்க இயலாது. மேலும், அறிமுகமான 'புதியதை', அடுத்தவர் பெறுவதற்கு முன், நாம் பெற்றுவிடவேண்டும் என்ற போட்டியையும், இந்த மந்திரச்சொல் தூண்டிவிடுகிறது.

விளம்பரங்களின் தூண்டுதல்களால் இன்று உலகில் நிகழ்ந்துள்ளது என்ன? நம் இல்லங்களில், பொருள்கள் குவிந்துவருகின்றன; தூக்கியெறியும் கலாச்சாரம் வளர்ந்துவருகிறது. தேவைக்கதிகமாகக் குவித்துவைப்பதையும், பூமிக்கோளத்தைப்பற்றிய அக்கறை ஏதுமின்றி, குப்பை மலைகளை உருவாக்குவதையும் வாடிக்கையாக்கிவிட்ட இன்றையச் சூழலில், 2ம் வாசகத்தில் கூறப்பட்டுள்ள 'புதியதொரு விண்ணகத்தையும், மண்ணகத்தையும்' புரிந்துகொள்ள முயல்வோம்.

இன்று நாம் கேட்கும் 2ம் வாசகத்தின் அறிமுக வரிகள், இன்றைய. உலகை அச்சுறுத்திவரும் சுற்றுச்சூழல் சீரழிவைக் குறித்து சில எண்ணங்களை நமக்குள் தூண்டுகின்றன:

திருவெளிப்பாடு 21: 1

பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமல் போயிற்று.

இந்த அறிமுக வரிகளில், "கடலும் இல்லாமல் போயிற்று" என்று கூறியிருப்பது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. பல பழங்கால மக்களினங்கள் நடுவே, கடலைப் பற்றிய அச்சங்கள் நிலவியதைப்போலவே, யூதர்கள் நடுவிலும், பொதுவாக, கடலைக் குறித்து எதிர்மறை எண்ணங்கள் பரவியிருந்தன. யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலில், கடவுளுக்கு எதிரான விலங்கு வாழ்வது கடலில் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. (காண்க. தி.வெ. 13:1) எனவே, "கடலும் இல்லாமல் போயிற்று" என்று அவர் கூறியிருப்பது, தீய சக்தியின் மீது இறைவன் கொள்ளும் வெற்றியைக் குறிப்பிடுகிறது.

இன்னும் சில விவிலிய விரிவுரையாளர்கள், 'கடல் இல்லாத புதிய மண்ணகத்திற்கு' மற்றுமோர் அழகான விளக்கம் அளித்துள்ளனர். நாம் வாழும் உலகில், கண்டங்களைப் பிரிப்பது, கடல். அந்தக் கடல் இல்லாமல் போனால், கண்டங்கள் அனைத்தும் இணைந்து, மண்ணகமெல்லாம், ஒரே நிலப்பரப்பாக, ஒரே மக்களாக மாறும் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் யோவான் கற்பனை செய்துள்ளார் என்று, விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு, உருவாகும் புதிய மண்ணகத்திலும், விண்ணகத்திலும், நிகழும் அற்புதங்களை யோவான் குறிப்பிட்டுள்ளார்.

திருவெளிப்பாடு 21: 3-4

இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது.

இன்றைய 2ம் வாசகத்தின் அறிமுக வரிகளில், முன்பு இருந்த (அதாவது, நாம் இன்று வாழும்) விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன என்று யோவான் கூறும் சொற்கள், இன்றைய உலகம், சிறிது, சிறிதாக, மறைந்து, அழிந்துவரும் அவலத்தை நினைவுறுத்துகின்றன. இந்த அழிவைத் தடுத்து நிறுத்த, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் இளையோர் முன்வந்துள்ளனர்.

2018ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர். எனவே, எங்கள் எதிர்காலத்திற்காகப் போராட வந்துள்ளேன்" என்று, இளம்பெண் துன்பர்க் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு, ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல், நடந்துகொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு சவால்விடும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம். இளம்பெண் கிரேட்டா அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இவ்வாண்டு, மார்ச் 15ம் தேதி, 112 நாடுகளில் 14 இலட்சம் மாணவ, மாணவியர் வகுப்புக்களைப் புறக்கணித்து, ஊர்வலங்கள் மேற்கொண்டனர். அடுத்த நிகழ்வு, இம்மாதம் 24ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கோளத்தைக் காக்கும் உன்னதக் குறிக்கோள், உலகின் பல நாடுகளில் வாழும் இளையோரை இணைத்திருப்பது, நமக்கு நம்பிக்கை தருகிறது. உலகின் பல நாடுகளில் இன்று, பல்வேறு வடிவங்களில் அடிப்படைவாதம் வளர்ந்துவருகின்றது. உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்த, வெள்ளையின மேன்மையை (White supremacy) வலியுறுத்தும் அடிப்படைவாதக் குழுக்கள், ஐரோப்பாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வளர்ந்துவருகின்றன. ‘இஸ்லாமிய அரசு’, மற்றும், இந்து அடிப்படைவாதக் குழுக்களைச் சார்ந்தோர், மதத்தை பயன்படுத்தி, மதியற்ற வன்முறையை வளர்க்கின்றனர். ஆபத்தான இச்சூழலில், பூமிக்கோளத்தைக் காக்க இணைந்திருக்கும் இளையோர், மனிதகுடும்பத்தையும் காக்க இணைந்துவரவேண்டும், என்று மன்றாடுவோம்.

மனித குடும்பத்தைக் காக்கக்கூடிய ஆணிவேர், பிறரன்பு. கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேரும் அதுவே. அன்பைத் தவிர, வேறு எதுவும், முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை, திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது (காண்க. திருத்தூதர் பணிகள் 4:32). கிறிஸ்தவர்களை ஒன்றணைத்த அப்பம் பகிர்தல் என்ற அற்புத நிகழ்வை, முதன் முதலாக, கிறிஸ்து, இறுதி இரவுணவில் உருவாக்கியபோது, தன் சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற முக்கியமான அன்புக் கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:

யோவான் நற்செய்தி : 13: 34-35

இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.

தான் ஒரு 'புதிய' ஒரு கட்டளையைத் தருவதாக, இயேசு, தன் சீடர்களிடம் கூறினார். அவர் கூறியதில் இருந்த 'புதியது' எது? நாம் செலுத்தும் அன்பு, மீண்டும் நமக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்காமல் பிறர் மீது நாம் காட்டும் அன்பே உயர்வானது. இதைத்தான் இயேசு, 'புதிய' கட்டளையாகத் தந்தார்: “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும், என்னிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்வதற்குப் பதில், “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.” என்ற 'புதிய' கட்டளை வழியே உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச்சென்றார். இத்தகைய அன்பே, சீடர்களின் அடையாளம் என்ற 'புதிய' இலக்கணத்தையும் வகுத்தார் இயேசு.

19ம் நூற்றாண்டில் (1832 – 1883) வாழ்ந்த Paul Gustave Dore என்ற பிரெஞ்சு ஓவியர், ஐரோப்பாவின் வேறொரு நாட்டில் பயணம் செய்த வேளையில், அவரது கடவுச் சீட்டு (Passport) காணாமல் போனது. அவர் ஐரோப்பாவின் ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டிற்குள் நுழைய விழைந்தபோது, எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம், தான் கடவுச்சீட்டை தொலைத்துவிட்டதாகக் கூறினார். அங்கிருந்த அதிகாரிகள், அவரை நம்பவோ, நாட்டுக்குள் அனுமதிக்கவோ மறுத்துவிட்டனர். அவர்களில் ஒருவர், "நீங்கள் உண்மையிலேயே புகழ்பெற்ற ஓவியர் Doreதான் என்றால், அங்கே நிற்கும் தொழிலாளர்களை வரைந்து காட்டுங்கள்" என்று கூறி, அருகே நின்ற ஒரு குழுவை சுட்டிக்காட்டினார். Dore அவர்கள் உடனே ஒரு காகிதத்தை எடுத்து, மிக விரைவாக, மிக அழகாக, அந்தக் காட்சியை வரைந்து முடித்தார். அதைக் கண்ட அதிகாரிகள், அவர் உண்மையிலேயே Dore என்று நம்புவதாகக் கூறி, அவரை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தனர்.

Dore அவர்கள், தான் யார் என்ற அடையாளத்தை, சொற்களை விட, செயல் வழியே நிலைநாட்டினார். கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடையாளமும், அவர்கள் செலுத்தும் அன்புச்செயல்களில் வெளிப்படவேண்டும் என்று, இயேசு, இன்றைய நற்செய்தி வழியே நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இயேசு தம் சீடர்களிடம், “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.

பெறுவதைவிட, தருவதே, அன்பின் இலக்கணம் என்பதை வலியுறுத்தும், ஆயிரமாயிரம் கதைகளில், என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...

உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என, சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சொன்னான்.

அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அதுவும், விலையுயர்ந்த ஓர் அன்பளிப்பாக அளிப்பது, இயேசுவின் சீடர்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்டும். இத்தகைய அன்பு வளரும் இடங்களில், உண்மையான கிறிஸ்தவமும், நம்பிக்கையும், செழித்து வளரும். புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும், புதியதொரு மனிதக் குடும்பத்தையும், அன்பின் வழியே உருவாக்கும் வரத்தை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவாராக!

18 May 2019, 15:24