தேடுதல்

Vatican News
திபேரியக் கடலருகே சீடர்களைச் சந்திக்கும் இயேசு திபேரியக் கடலருகே சீடர்களைச் சந்திக்கும் இயேசு 

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இயேசுவை, தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு, திபேரியக் கடலருகே சந்தித்து, குணமாக்கும் நிகழ்வை, இன்றைய நற்செய்தி சொல்கிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்துவதை, ஆதரித்தும், எதிர்த்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், வட, மற்றும், தென் மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்துவந்த மோதல்கள், 1861ம் ஆண்டு, உள்நாட்டுப் போராக வெடித்தது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர், 1865ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முடிவுக்கு வந்தது.

உள்நாட்டுப் போரில் அடைந்த வெற்றியைக் கொண்டாட, வாஷிங்டன் நகரில், வெள்ளை மாளிகைக்கு முன் மக்கள் கூடினர். அங்கிருந்த இசைக்குழு, வெற்றியைக் குறிக்கும் பாடல்களை இசைத்தவண்ணம் இருந்தது. மாளிகையின் மேல்மாடத்தில் வந்து நின்ற அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள், தென் மாநிலங்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, வட மாநிலங்கள் அடைந்த வெற்றியை பாராட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், லிங்கன் அவர்களோ, போரின் கொடுமைகளைப்பற்றிப் பேசினார்; போரினால் சிதைந்துபோன குடும்பங்களும், தென் மாநிலங்களில் உருவான அழிவுகளும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதைப்பற்றிப் பேசினார்.

தன் உரையின் இறுதியில், "இங்கிருக்கும் இசைக்குழு, நான் கூறும் ஒரு பாடலை இப்போது இசைப்பார்கள்" என்று லிங்கன் அவர்கள் கூறியதும், வட மாநிலங்களில் பிரபலமான, "குடியரசின் போர் கீதம்" என்ற வெற்றிப்பாடலை இசைப்பதற்கு, இசைக்குழுவினர் தயாரானார்கள். அவர்களிடம், லிங்கன் அவர்கள், 'Dixie' அல்லது, "Dixie's Land" என்ற பெயரில், தென் மாநிலங்களில் பிரபலமான ஒரு பாடலை இசைக்கும்படி கூறினார். அந்தப் பாடலின் இசைக்குறிப்பு இசைக்குழுவினரிடம் இல்லாததால், அவர்கள், சில நிமிடங்கள் அமைதியாக நின்றனர். இருப்பினும், அவர்களது நினைவுத்திறனைப் பயன்படுத்தி, அப்பாடலை இசைக்க வைத்தார், அரசுத்தலைவர் லிங்கன்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்று, உள்நாட்டுப் போரில் அனைத்தையும் இழந்து, தோல்வியில் துவண்டிருந்த தென் மாநில மக்களின் காயங்களை, மீண்டும் கீறிவிட்டு வேடிக்கைப் பார்க்காமல், அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும், வழங்கும் முயற்சிகளில், அரசுத்தலைவர் லிங்கன் அவர்கள் ஈடுபட்டது, இன்றைய உலகத் தலைவர்களுடன், அவரை, ஒப்பிட்டுப் ப்பார்க்கத் தூண்டுகிறது.

நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், பல நாடுகளின் தலைவர்கள், காயப்பட்டிருக்கும் மக்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்குப் பதில், அந்த காயங்களை மேலும் ஆழப்படுத்தும் வண்ணம், மக்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் வளர்த்து வருவதை எண்ணி, நாம், வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இவர்கள் வளர்க்கும் பகைமை உணர்வுகளால் உயிரிழப்பது, பெரும்பாலும், அப்பாவி மக்கள் என்பதை, இலங்கையில் நிகழ்ந்த உயிர்ப்புப்பெருவிழா தாக்குதல்கள், மீண்டும் ஒருமுறை நமக்குக் கூறியுள்ளன.

காயப்பட்டவர்களை மேலும் காயப்படுத்தாமல், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரசுத் தலைவர் லிங்கன் அவர்கள் செயல்பட்டது, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பாடுகள் நேரத்தில், இயேசுவைவிட்டு விலகிச்சென்றதாலும், கல்வாரி நிகழ்வுகளாலும், பல வழிகளில் காயப்பட்டிருந்த தன் சீடர்களை, உயிர்ப்புக்குப் பின், இயேசு, தேடிச்சென்று குணமாக்கிய நிகழ்வுகளில் ஒன்று, இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

யோவான் நற்செய்தி, இயேசுவின் வாழ்வை, வெறும் வரலாற்றுப் பதிவாக வழங்காமல், ஓர் இறையியல் பாடமாக வழங்கியுள்ளது என்பதை அறிவோம். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும், யோவான் நற்செய்தியில், பல இறையியல் எண்ணங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்ணோட்டத்துடன், இன்றைய நற்செய்திப் பகுதியை நாம் அணுகுவோம்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஏழு கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார், ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல் என்று... யோவான், தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். ‘திதிம் என்ற தோமா’வை ஆசிரியர் குறிப்பிட்டதும், நமது நினைவில், சென்ற ஞாயிறு சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்நிகழ்வில், சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை, உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை, சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு, இன்று சொல்லப்படுகிறது. இயேசுவை, தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை, இன்றைய நற்செய்தி சொல்கிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்: "அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)

யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, மேல் மாடியில், பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், "நான் மீன் பிடிக்கப் போகிறேன்" என்று பேதுரு கூறியது, ஓர் அழைப்பைப் போல் ஒலித்தது.

மீன் பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத். 4:19; மாற். 1:17; லூக். 5:10) என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச் சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரைப் பின் சென்றவர்கள் சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் பணியை ஓரளவு புரிந்து செயல்பட்டனர், சீடர்கள். ஆனால், கல்வாரியில், இயேசு, சிலுவையில் இறந்தபின், நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள், மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள், இவர்களைப் பிடித்து, உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற பயத்தில், சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர்.

மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் புறப்பட்டனர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு திரும்பிவரப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்தித்தது, ஏமாற்றம். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3).

மீன்பிடித் தொழிலில், ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று, திபேரியக் கடலில், இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும்,  ஒன்றும் கிடைக்காமல் போனது, அவர்கள் மனதில், கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா நற்செய்தி, 5ம் பிரிவில் (5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும், அவர்கள், இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்கமுடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது.

இயேசுவின் மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம் என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றம், மீண்டும், அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே, மீண்டும் ஒருமுறை, திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும் உழைத்துக் காணாத பலனை, விடிந்ததும், இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள் பிடிபட்டதாக, நற்செய்தியாளர் யோவான் கூறுகிறார். (யோவான் 21:11)

கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது. இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு, நமக்கு ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.

கெனசரேத்து ஏரியில் கிடைத்த அளவற்ற மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5:8) என்று வேண்டினார். திபேரியக் கடலில், கிடைத்த அளவற்ற மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து சென்றார், இயேசுவை நோக்கி.

கெனசரேத்து ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்த வேளையில், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும் என்று வேண்டினார்.

திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன், தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை, பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பாவி, தான் என்பதை, நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை, இயேசுவை விட்டு விலகிச்செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் சென்றார்.

பேதுருவும், சீடர்களும், கரையை அடைந்ததும், மற்றோர் ஆனந்த அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள் (யோவான் 21:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். 'கரியினால் தீ மூட்டப்பட்டிருக்கும்' இந்தக் காட்சி, நம் நினைவுகளை, இயேசு தன் பாடுகளைச் சந்தித்த அந்த இரவுக்கு அழைத்துச்செல்கிறது. அங்கு, தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் (யோவான் 18:18) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். அவர்களோடு நின்று குளிர் காய்ந்துகொண்டிருந்த பேதுருவிடம், "நீயும் இம்மனிதனுடைய சீடர்களில் ஒருவன்தானே?" என்ற கேள்வி எழுந்தபோது, தனக்கு இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மறுத்தார். தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு, பேதுருவின் மறுதலிப்புக்கு ஓர் அடையாளமாக இருந்ததுபோல், திபேரிய கடலருகே மூட்டப்பட்ட நெருப்பு, பேதுருவின் மன்னிப்பிற்கு ஓர் அடையாளமாக மாறுகிறது.

பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த இச்சந்திப்பில், மன்னிப்பு என்ற சொல்லோ, எண்ணமோ இடம்பெறவில்லை. அங்கு, அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பரிமாற்றத்தில், மன்னிப்பு, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து, பேதுருவை மூழ்கச் செய்தது.

நம் வாழ்வைச் சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் கருணை நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும் சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால் போதும் என்றும் நினைக்கத் தோன்றும். கெனசரெத்து ஏரியில், பேதுரு, இயேசுவின் அன்பை, முதல்முறை உணர்ந்து, பயந்து, அவரை விட்டு விலகிச்செல்ல விழைந்தபோது, இயேசுவின் வாழ்வுப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.

இயேசுவுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளில், பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம், இதுதான். எந்நிலையில் தான் இருந்தாலும், இயேசுவின் அன்பில், தனக்கு, எப்போதும், புகலிடமும், தஞ்சமும் உண்டு என்பதே, அந்த அழகியப் பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்நிலையில் நாம் இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம் இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும்.

இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து, சலித்துப்போன சீடர்களுக்கு, உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு, காலை உணவைத் தயாரித்து, பரிமாறினார்.

உயிர்த்த இயேசுவைக் காணச்சென்ற வேளையில், ஆலயத்தில், காயப்பட்டு, பரிதவிக்கும் இலங்கை மக்களை, உயிர்த்த இயேசு, தாயன்போடு அரவணைக்க வேண்டும் என்று, உருக்கமாகச் செபிப்போம்.

நல்ல தலைவர்கள் வழியே, இந்திய நாடு மீண்டும் உயிர்பெறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு, உயிர்த்த இயேசு நம்பிக்கையூட்டுமாறு செபிப்போம்.

04 May 2019, 14:27