தேடுதல்

இலங்கையில், தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டும் திறக்கப்பட்ட புனித அந்தோனியார் கோவிலில் செபிக்கும் பக்தர்கள் இலங்கையில், தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டும் திறக்கப்பட்ட புனித அந்தோனியார் கோவிலில் செபிக்கும் பக்தர்கள் 

முஸ்லிம்களுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை செயல்படாது

இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறையில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவப் புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு எதிராய், கத்தோலிக்கத் திருஅவை செயல்படும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.

இலங்கையில், ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தும், ஏறத்தாழ 500 பேர் காயமடைந்தும் உள்ளவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை ஒருபோதும் செயல்படாது என்று அறிவித்துள்ளார், கர்தினால் இரஞ்சித்.

முஸ்லிம்கள், எந்தவிதத் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு  கத்தோலிக்கரை  அனுமதிக்கமாட்டோம் எனவும் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.

குடிபெயர்ந்தோருக்குப் பாதுகாப்பு

மேலும், இலங்கையில், முஸ்லிம்களுக்கும், அந்நாட்டில் அடைக்கலம் தேடியுள்ள வெளிநாட்டு புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு, உலகளாவிய பிரான்சிஸ்கன் அமைப்பு உட்பட, பன்னாட்டு மனித உரிமை குழுக்கள் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளன.

அந்நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறையில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவப் புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் எனவும், அந்த அமைப்புகள் கூறியுள்ளன. (UCAN)

இதற்கிடையே, இலங்கை முழுவதும் இத்திங்கள் இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தவேளை, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீயும் வைத்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா - கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அமீர் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2019, 15:34