தேடுதல்

Vatican News
கத்தோலிக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதைக் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கர்தினால் மால்கம் இரஞ்சித் கத்தோலிக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதைக் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கர்தினால் மால்கம் இரஞ்சித்  (AFP or licensors)

மே 14ல் இலங்கையில் கத்தோலிக்கப் பள்ளிகள் திறப்பு

கர்தினால் இரஞ்சித் - கொழும்பு நகரிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், மே 12, இஞ்ஞாயிறிலிருந்து திருப்பலிகள் நிறைவேற்றப்படும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில், இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கத்தோலிக்கப் பள்ளிகள், மே 14, வருகிற செவ்வாயன்று மீண்டும் திறக்கப்படும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.

மே 9, இவ்வியாழனன்று, 12 ஆயர்களுக்கும், அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், கொழும்பு நகரிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், மே 12, இஞ்ஞாயிறிலிருந்து திருப்பலிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

மே 16, வருகிற வியாழன் மாலையில், நீர்கொழும்புவில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் நினைவாக, சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும் என அறிவித்த, கர்தினால் இரஞ்சித் அவர்கள், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், பொதுவில் நடைபெறும் முதல் திருப்பலி இதுவே என்றும் கூறினார். அந்த ஆலயத்தாக்குதலில் மட்டும், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாயினர்.

இலங்கையில் ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 258 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏறத்தாழ 500 பேர் காயமுற்றனர்.

அந்நாட்டின் 2 கோடியே 20 இலட்சம் மக்களில், பெரும்பான்மையினர் புத்த மதத்தினர்.       கத்தோலிக்கர் 6.1 விழுக்காடு மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் 1.3 விழுக்காடு ஆகும்.

இதற்கிடையே, இலங்கையிலுள்ள பத்தாயிரத்திற்கும் அதிகமான அரசு பள்ளிகள், மே 6ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. (Fides)

11 May 2019, 15:26