தேடுதல்

Vatican News
கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்  (AFP or licensors)

இலங்கை வன்முறை, நம்மைப் பிரிக்கும் ஆயுதமாக மாறக்கூடாது

இஸ்லாமியர் அனைவரும் நம் உடன்பிறந்தோர், அவர்கள் அனைவரும் இலங்கை சமுதாயத்தின் ஓர் அங்கம் - கர்தினால் மால்கம் இரஞ்சித்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெறுப்பு நம்மை வெல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்றும், உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த வன்முறை, நம் நாட்டைப் பிரிப்பதற்கு ஓர் ஆயுதமாக மாறக்கூடாது என்றும், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் மக்களிடம் விண்ணப்பித்துள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

இலங்கையில் உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த தாக்குதல்களையடுத்து, இஸ்லாமியரின் இல்லங்களும் கடைகளும் தாக்கப்பட்டதையடுத்து, கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

இஸ்லாமியர் அனைவரும் நம் உடன்பிறந்தோர், அவர்கள் அனைவரும் நம் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நீர்கொழும்புவில் வாழும் இஸ்லாமியர்களை, அவர்களது தொழுகைக்கூடத்தில் சந்தித்தார் என்று, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த பள்ளிகளில், அரசுப் பள்ளிகள், மே 6, இத்திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டன என்றும், ஆனால், கத்தோலிக்கப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இலங்கையிலிருந்து 600 வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர் என்றும், இவர்களில் 200 பேர், இஸ்லாமிய போதகர்கள் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

வெளியேற்றப்பட்ட மத போதகர்கள், தங்கள் 'விசா'வில் குறிக்கப்பட்டிருந்த காலத்தைத் தாண்டி, இலங்கையில் தங்கியிருந்தனர் என்று, உள்நாட்டு அமைச்சர் Vajira Abeywardena அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். (Fides / AsiaNews)

08 May 2019, 15:41