தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஊர்வலம் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஊர்வலம் 

தொழிலாளர் சார்பாக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

நாட்டுக்குள் நல்ல வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டால், நம் நாட்டவர் பிற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிவதும் தடுக்கப்படும் - பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வது, பிலிப்பீன்ஸ் அரசு அவர்களுக்கு வழங்கக்கூடிய பெரும் பரிசு என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

மே 1ம் தேதி, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட உலகத் தொழிலாளர் நாளையொட்டி, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆயிரக்கணக்கான தொழிலாளர் மேற்கொண்ட ஓர் ஊர்வலத்திற்கு ஆதரவு தந்த ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

நாட்டுக்குள் நல்ல வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டால், நம் நாட்டவர் பிற நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வதும், அதன் விளைவாக, குடும்பங்கள் பிரிவதும் தடுக்கப்படும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் குடிபெயர்ந்த மக்கள் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ரூபெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.

செய்யும் தொழிலுக்கு ஏற்ற மதிப்பும், ஊதியமும் வேண்டி, பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் விடுத்து வரும் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ளாததால், நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்று மணிலாவின் துணை ஆயர் பிரோடெரிக் பபில்லோ அவர்கள் கூறியுள்ளார்.

தொழிலாளர் உரிமைகள் குறித்து எடுக்கப்பட்ட உலகளாவிய ஓர் ஆய்வில், இவ்வுரிமைகளை மதிக்கத் தவறிய மிக மோசமான 10 நாடுகளில் ஒன்றாக பிலிப்பீன்ஸ் நாடு உள்ளதென கூறப்பட்டுள்ளது. (UCAN)

02 May 2019, 15:13