இலங்கை செய்தியாளர்கள் கூட்டத்தில், கிறிஸ்தவ ஆயர்களும், இஸ்லாமியத் தலைவரும் இலங்கை செய்தியாளர்கள் கூட்டத்தில், கிறிஸ்தவ ஆயர்களும், இஸ்லாமியத் தலைவரும் 

கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு விழையும் இஸ்லாமியர்

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களுக்காக, இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் மன்னிப்பை விழைந்து, மே 14, இச்செவ்வாயன்று, இஸ்லாமிய கிறிஸ்தவ செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள், மதமோ, நம்பிக்கையோ அற்றவர்கள் என்றும், அதனால், அவர்களது இறந்த உடல்கள், இஸ்லாமிய கல்லறைகளில் அடக்கம் செய்யப்படவில்லை என்றும், அனைத்து இலங்கை ஜமியத்துல் உலாமா (All Ceylon Jamiyyathul Ulama) அமைப்பின் தலைவர், முலாவி பரூத் பரூக் (Moulavi Farood Farook)  அவர்கள் கூறியுள்ளார் என்று ஆசிய செய்தி அறிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களுக்காக, இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் மன்னிப்பை விழைந்து, மே 14, இச்செவ்வாயன்று, இஸ்லாமிய கிறிஸ்தவ செய்தியாளர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்ற வேளையில், இஸ்லாமியத் தலைவர், பரூக் அவர்கள் இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற தாக்குதல்களுக்கும், இஸ்லாமிய மத உணர்வை உண்மையாகக் கொண்டவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை, தலைவர் பரூக் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

2014ம் ஆண்டு, இஸ்லாமிய அரசு என்ற பெயரில், ISIS என்ற அமைப்பு உருவான வேளையில், அந்த அமைப்பிற்கும், இலங்கை இஸ்லாமியர்களுக்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, வெளிப்படையாக அறிவித்துள்ளோம் என்று, பரூக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மெதடிஸ்ட் சபையின் ஆயர் ஆசிரி பெரேரா (Asiri Perera) அவர்கள் பேசுகையில், இஸ்லாமியர் அனைவருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வழங்கும் ஒரே செய்தி மன்னிப்பு என்றும், இந்த மன்னிப்பையே சிலுவையில் தொங்கிய இயேசுவும் வழங்கினார் என்றும் கூறினார்.

இலங்கை வாழ் இஸ்லாமியரைக் காப்பது, கிறிஸ்தவர்களின் கடமை என்றும், எவ்வித வன்முறையையும் அவர்கள் மீது காட்டுவது தவறு என்றும், கிறிஸ்தவ சபையின் ஆயர், திலோராஜ் கனகசபை (Diloraj Kanagasabai) அவர்கள், இக்கூட்டத்தில் விண்ணப்பித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2019, 15:20