தேடுதல்

Vatican News
L'Arche அறக்கட்டளையின் நிறுவனரான Jean Vanier L'Arche அறக்கட்டளையின் நிறுவனரான Jean Vanier 

மே 7ம் தேதி இறையடி சேர்ந்த மனித நேயப் பணியாளர், Jean Vanier

பொதுநிலையினர் திருப்பீட அவையின் உறுப்பினராகப் பணியாற்றிய L'Arche அறக்கட்டளையின் நிறுவனரான Jean Vanier அவர்களுக்கு, 2015ம் ஆண்டு, Templeton விருது வழங்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பரிவுள்ள மனிதர்களாக மாறவேண்டும் என்பது ஒன்றே, நற்செய்தி நமக்கு வழங்கும் முக்கிய செய்தி என்று, கூறிவந்த மனித நேயப் பணியாளர், Jean Vanier அவர்கள், மே 7, இச்செவ்வாயன்று இரவு, தன் 90வது வயதில் இறையடி சேர்ந்தார்.

1928ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி, ஜெனீவாவில் பிறந்த Jean Vanier அவர்கள், கனடா நாட்டின் கடற்படையில் இணைந்து, இரண்டாம் உலகப்போரில், கடற்படை அதிகாரியாகப் பணியாற்றினார்.

இயேசுவைப் பின்தொடரும் ஆவலால் உந்தப்பட்டு, 1950ம் ஆண்டு, கடற்படையிலிருந்து விலகி, மெய்யியல், இறையியல் ஆகியவற்றைப் படித்து, டொரான்டோ நகரில் புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மாற்றுத்திறன் கொண்டோர் நடுவே உழைத்துவந்த அருள்பணியாளர் ஒருவருடன் இணைந்து உழைத்ததையடுத்து, 1964ம் ஆண்டு, அவர்களுக்கென, பேழை என்று பொருள்படும் L'Arche என்ற அறக்கட்டளையை உருவாக்கினார்.

இன்று உலகின் 35 நாடுகளில் 147 குழுமங்களாக பணியாற்றிவரும் L'Arche அறக்கட்டளையின் நிறுவனரான Jean Vanier அவர்கள், 2014ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார்.

1971ம் ஆண்டு, Jean Vanier அவர்கள், நம்பிக்கையும் ஒளியும் என்று பொருள்படும் "Foi et Lumiere" என்ற மற்றோர் இயக்கத்தையும் துவக்கினார் என்பதும், பொதுநிலையினர் திருப்பீட அவையின் உறுப்பினராகப் பணியாற்றிய அவருக்கு, 2015ம் ஆண்டு, Templeton விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

08 May 2019, 15:36