தேடுதல்

Vatican News
கர்தினால் ஆசுவால்டு, Jamiat Ulama-I-Hind  பொதுச்செயலர் மஹ்மூத் மதானி இணைந்து அறிக்கை கர்தினால் ஆசுவால்டு, Jamiat Ulama-I-Hind பொதுச்செயலர் மஹ்மூத் மதானி இணைந்து அறிக்கை 

இலங்கை தாக்குதலை கண்டனம் செய்து இந்திய அறிக்கை

மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து கண்டனம் தெரிவிப்பது தலையாயக் கடமை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலாச்சார உணர்வுகள் கொண்ட ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்வண்ணம், இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த தாக்குதல்களை, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்ற சொற்களுடன், ஓர் இணை அறிக்கையை, இந்திய ஆயர் பேரவையும், இஸ்லாமிய அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும், Jamiat Ulama-I-Hind என்ற இஸ்லாமிய அவையின் பொதுச்செயலர் மௌலானா மஹ்மூத் மதானி அவர்களும் இணைந்து மே 4, கடந்த சனிக்கிழமை, இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டோர், கடவுளுக்கு, மனிதகுலத்திற்கு, கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்றும், இத்தகைய வழிகளில் அவர்கள் வெளிப்படுத்தும் மத நம்பிக்கை, உண்மையில் எந்த மதத்திற்கும் பெரும் இழுக்கு என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து கண்டனம் தெரிவிப்பது தலையாயக் கடமை என்றும், இத்தகையத் தாக்குதல்கள் நம்மைப் பிரிப்பதற்குப் பதில் இன்னும் உறுதியாக நம்மைப் பிணைக்கவேண்டும் என்றும் இந்த இணை அறிக்கை கூறுகிறது.

இலங்கை நமக்கு மிக நெருங்கிய அயலவர் என்பதால், பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்றை அங்கு அனுப்பி, அம்மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் ஆய்வு செய்து, உதவிகள் செய்ய இந்திய கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயம் தயாராக உள்ளது என்று இவ்வறிக்கை அறிவித்துள்ளது. (CBCI)

08 May 2019, 15:36