சிரியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டம் சிரியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டம் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் - 1

Barrett கலைக்களஞ்சியத்தின்படி, உலகில், ஏறத்தாழ 238 நாடுகளில், 33 ஆயிரத்திற்கு அதிகமான பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உள்ளன. இவ்வெண்ணிக்கை நாற்பதாயிரத்திற்கு அதிகம் என்றும்கூட சொல்லப்படுகின்றது.

மேரி தெரேசா – வத்திக்கான்

இன்று ஆங்லிக்கன், லூத்தரன், பாப்டிஸ்ட், மெத்தோடிஸ்ட், பெந்தகோஸ்து போன்ற உலகளாவிய சபைகள் தவிர, தென்னிந்திய சபை, வட இந்திய சபை போன்று, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உள்ளன.  எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை மிகவும் பெரியது. ஆயினும் அந்நாட்டில் பல பிரிந்த கிறிஸ்தவ சபைகளும் இருக்கின்றன. அண்மைக் காலமாக, ஏறத்தாழ பத்து பதினைந்து வீடுகள் சேர்ந்து ஒரு சபை என, கிறிஸ்தவ சபைகளிலே புற்றீசல்போல், பல சிறு சிறு சபைகளும் உதித்து வருகின்றன. Barrett கலைக்களஞ்சியத்தின்படி, உலகில், ஏறத்தாழ 238 நாடுகளில், 33 ஆயிரத்திற்கு அதிகமான பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உள்ளன. இவ்வெண்ணிக்கை நாற்பதாயிரத்திற்கு அதிகம் என்றும்கூட சொல்லப்படுகின்றது. இந்த சபைகள் எப்படி தோன்றின? இவைகளின் பிறப்பிடம் எது? போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் வரலாற்றில் 16ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இடம்பெற்ற பிரிந்தசபை சீர்திருத்தம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட இறையியல் மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளால், 1054ம் ஆண்டில், பெரும் பிரிவினை ஒன்று இடம்பெற்றது. அதுவே,  கிழக்கு - மேற்கு பிரிவினை என அழைக்கப்படுகிறது. அதன் விளைவாக, மேற்குலகில், கத்தோலிக்கமும், கிழக்குலகில் ஆர்த்தடாக்ஸ் சபைகளும் பிரிந்து செயல்பட ஆரம்பித்தன. 11ம் நூற்றாண்டில் இடம்பெற்ற அந்தப் பெரும் பிரிவினைக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பாவில், உரோம் நகரில் திருத்தந்தையின் தலைமையின்கீழ், கத்தோலிக்கம் மட்டுமே, ஒரே கிறிஸ்தவ திருஅவையாக நிலவி வந்தது. ஆனால் அது, இக்காலத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவை என அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இன்று ஆங்லிக்கன், லூத்தரன், பாப்டிஸ்ட், மெத்தோடிஸ்ட், பெந்தகோஸ்து, இவாஞ்சலிக்கல் போன்ற பல பிரிந்த கிறிஸ்தவ சபைகள்  உள்ளன. 

திருஅவையும் நாடும்

உரோம் நகரில் திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய கத்தோலிக்கத் திருஅவை, 1500ம் ஆண்டில், மேற்கு ஐரோப்பாவில், அரசியல் முறைப்படியும், ஆன்மீக முறைப்படியும் மிகவும் வல்லமை மிக்கதாய் விளங்கியது. இத்தாலியில் குறிப்பிட்ட பகுதி திருத்தந்தையால் ஆளப்பட்டு வந்தது. அப்பகுதி, திருத்தந்தையின் அரசு என அழைக்கப்பட்டது. இது, 8ம் நூற்றாண்டு முதல் 1870ம் ஆண்டு வரை திருத்தந்தையின் இறைமையாண்மையுடைய அரசாக விளங்கியது. அந்த அரசு, மேற்குலகில் கிறிஸ்தவம் ஒன்றைணைந்து செயல்படவும், அது பரவவும் முக்கிய காரணியாக அமைந்திருந்தது உரோம் ஆயரான திருத்தந்தையின் செல்வாக்கிலும் அதிகாரத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம். திருத்தந்தை புனித முதலாம் சிங்கராயர் (லியோ), அவருக்குப்பின் திருத்தந்தை முதலாம் பெரிய கிரகரி ஆகியோர், உரோம் ஆயரின் தலைமைத்துவத்தை அதிகம் வலியுறுத்தினார்கள். திருத்தந்தை கிரகரி அவர்களுக்குப்பின் தலைமைப்பணியில் இருந்தவர்கள், இதனை வலியுறுத்தினாலும், 11ம் நூற்றாண்டின் இவ்விரு திருத்தந்தையர்களே, திருஅவை மற்றும் அனைத்து கிறிஸ்தவர்கள் மீது முழு அதிகாரத்தை வலியுறுத்தியவர்கள்.

இந்நிலையில், ஒரு நிறுவனமாக பார்க்கப்பட்ட திருஅவைக்குள்ளே, அதிகாரப் போட்டிகளும் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக, 1300களின் இறுதிக் காலம் மற்றும் 1400களில், ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று திருத்தந்தையர் ஆட்சி செய்தனர். திருத்தந்தையரும், கர்தினால்களும், ஆன்மீகத் தலைவர்கள் என்பதைவிட, அரசர்கள் போன்று வாழ்ந்தனர். ஆயுதப் படைகளையும், அரசியல்முறைப்படி பகைவர்களையும் நட்புகளையும் கொண்டிருந்தனர். சில சமயங்களில் திருத்தந்தையர் போர்களும் தொடுத்தனர். திருஅவையின் பணிகள், கடமைகள் வர்த்தகமாக்கப்பட்டன (Simony).  குடும்ப உறவுகளின் அடிப்படையில் சலுகைகள் காட்டப்பட்டன (nepotism). இவையெல்லாம் அளவுகடந்து சென்றன. திருத்தந்தையர் உலகம் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்தியதால், விசுவாசிகளின் ஆன்மீகக் காரியங்களில் அக்கறை எடுக்க அவர்களுக்கு அதிக நேரம் இல்லாமல் இருந்தது. திருஅவையில் இடம்பெற்ற ஊழல் அம்பலமானது.

திருஅவையின் அதிகாரமும், செல்வமும்

திருஅவையின் அதிகாரமும், செல்வமும் அதிகரிக்க அதிகரிக்க, அது ஓர் ஆன்மீக சக்தி என்ற நிலையை முற்றிலும் இழந்தது. அருள்பணியாளர்கள், பாவமன்னிப்புகளை விற்பனை செய்தனர். மேலும், திருஅவையில் இடம்பெற்ற ஊழல்கள், திருஅவையின் ஆன்மீக அதிகாரத்தை மதிப்பிழக்கச் செய்தன. ஆயினும் இந்தச் செயல்கள், ஒரு விதிவிலக்காகவே நோக்கப்பட்டன. அதேநேரம், பலர், திருஅவையை ஆன்மீக ஆறுதல் தரும் சக்தியாகவே நோக்கினர். இருந்தபோதிலும், அருள்பணியாளர்க்கு எதிரான போக்கும் கத்தோலிக்கர் மத்தியில் நிலவியது. அரசியலில் அதிகாரம் கொண்டோர், இந்த ஒரு சூழலைப் பயன்படுத்தி, திருஅவையின் அதிகாரத்தைக் குறைத்து, ஒரு பதட்டநிலையை உருவாக்க முயற்சித்தனர். மத்தியகாலத் திருஅவையில், புனித பிரான்சிஸ் அசிசி, வால்டெஸ், John Wyclif, Jan Hus போன்றோர், 1517ம் ஆண்டுக்கு முந்தைய நூற்றாண்டுகளில், திருஅவையின் வாழ்வில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். மிகவும் மனிதநல வல்லுனராகிய ரோட்டர்டாமின் எராஸ்முஸ் அவர்கள், திருஅவையில் நிலவிய மூடநம்பிக்கைகளைத் தாக்கினார். கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்தார். ஆயினும், 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, அனைத்துப் புனிதர்கள் விழாவுக்கு முந்திய நாளில், அகுஸ்தீன் துறவு சபையின் இறையியல் பேராசிரியர் மார்ட்டின் லூத்தர் அவர்கள், ஜெர்மனியின் விட்டன்பர்க் அரண்மனை ஆலயக் கதவில் 95 சீர்திருத்தக் கருத்துக்களை ஒட்டும் வரை, திருஅவையின் வாழ்வைச் சீர்படுத்த எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2019, 14:30