தேடுதல்

கென்யா நாட்டு ஆயர்கள் கென்யா நாட்டு ஆயர்கள் 

எல்லைப்புறப் போர்களை நிறுத்த ஆயுதக் களைவு அவசியம்

ஆப்ரிக்க கண்டத்தில், குடிமக்களிடம் இருக்கின்ற 3 கோடியே 60 இலட்சம் சிறிய ஆயுதங்களில், கென்யா, உகாண்டா, தென் சூடான் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் மக்களிடம் 80 இலட்சம் ஆயுதங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நாடுகளின் எல்லைப்புறங்களில் ஆயுதக் கும்பல்களால் இடம்பெறும் போர்களால் மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்வும், அதிகத் துன்பங்களை ஏற்படுத்தும்வேளை, மக்களின் நல்வாழ்வுக்கு, ஆயுதங்கள் களையப்படுவது மிகவும் முக்கியம் என்று, ஆப்ரிக்க ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்யா, உகாண்டா, தென் சூடான் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் ஆயர்கள், நைரோபில் நடத்திய, ஆறாவது, ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில் இவ்வாறு கூறியுள்ளனர்.

போர் ஆயுதங்களைக் கொண்டு, குற்றக்கும்பல்கள் நடத்திவரும் தாக்குதல்கள், மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்வையும் பாதிக்கின்றன என்றும், நாடுகளின் எல்லைகளில் இடம்பெறும் போர்களை நிறுத்த, ஆயுதக் களைவு இன்றியமையாதது என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

மேய்ப்பர்களாகிய நாங்கள், இனிமேலும் மௌனம் காக்கவும், செயலில் இறங்காமலும், அச்சத்துடனும் இருக்க மாட்டோம் என்று உரைத்துள்ள ஆயர்கள், உள்ளூர் குழுக்கள், சமுதாய அமைப்புகள், மதம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசுகள் ஆகிய அனைத்தின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணத்துடன், ஒருவரையொருவர் நம்பும் ஒரு சூழலில் மட்டுமே, அமைதியான முறையில் ஆயுதக்களைவு இடம்பெறும் எனவும் கூறியுள்ளனர்.

மனித வாழ்வை மதித்து, அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் இந்த அர்ப்பணம் இடம்பெற வேண்டுமென்றும் கூறியுள்ள ஆயர்கள், கென்யா, உகாண்டா, தென் சூடான் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் அரசுகள், எல்லைப்புறங்களில் இடம்பெறும் போர்களை நிறுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளையும் பாராட்டியுள்ளனர்.

இம்முயற்சியில், மதம் சார்ந்த நிறுவனங்களை, அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், ஆயர்கள் பரிந்துரைத்துள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2019, 15:19