தேடுதல்

Vatican News
மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம் மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 3

16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து உருவான சீர்திருத்த சபை, குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஐரோப்பாவில், பரவலாக சமயப் போர்களாக, ஒருவர் ஒருவருக்கு எதிராக வன்முறையை விதைத்தது

மேரி தெரேசா – வத்திக்கான்

அகுஸ்தீன் துறவு சபை அருள்பணியாளரும், ஜெர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழக இறையியல் பேராசிரியருமான மார்ட்டின் லூத்தர் அவர்கள், 1517ம் ஆண்டில், கத்தோலிக்கத் திருஅவையின் சில நடவடிக்கைகள், குறிப்பாக, பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு திருஅவை கையாண்ட முறை, இறையியல் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜெர்மனியில், தொமினிக்கன் சபை துறவி Johann Tetzel அவர்கள், பாவமன்னிப்பு பற்றி போதித்தவேளையில், ஒரு நாணயம் உண்டியல் பெட்டியில் விழுகின்றபோது, உடனடியாக ஓர் ஆன்மா, தூய்மைபெறும் நிலையிலிருந்து மேலே செல்லும் என்று  போதித்தார். அதற்கு லூத்தர், கடவுள் மட்டுமே பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குபவர், அப்படியிருக்க, நிதி கொடுக்கும் குற்றவாளிகள், அனைத்து தண்டனைகளிலிருந்து மன்னிப்புப் பெறுவர் மற்றும் மீட்பும் அவர்களுக்கு வழங்கப்படும் என எப்படி போதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இத்தகைய தவறான உறுதிப்பாடுகளை வைத்து, கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவைப் பின்செல்வதில் கவனமின்றி இருக்கக் கூடாது எனவும் லூத்தர் எச்சரித்தார். மேலும், ஒருமுறை லூத்தர் அவர்கள், மறையுரையாற்றுவதற்காக தயாரித்துக்கொண்டிருந்தவேளை, இவரது கவனத்தை ஈர்த்த, நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர் (உரோ.1,17) என்ற திருச்சொற்கள், எல்லாச் சூழல்களிலும் நினைவுக்கு வந்தன. எனவே, கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை இலத்தீனில் எழுதி, 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, அனைத்து புனிதர்கள் பெருவிழாவன்று, விட்டன்பெர்க் அரண்மனை ஆலயக் கதவில் ஒட்டினார். இதுவே "லூத்தரின் 95 கொள்கைகள்" என்ற பிரபல அறிக்கையாகும்.

95 கொள்கைகள்

லூத்தரின் 95 கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்காவின் Duke பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய Hans Joachim Hillerbrand அவர்கள், லூத்தருக்கு, திருஅவையை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது, மாறாக, இறையியல் பேராசிரியராக, திருஅவையின் நடவடிக்கைகளோடு, தான் ஒத்திணங்கவில்லை என்ற எண்ணத்தையே கொண்டிருந்தார் என்று கூறினார். எனினும் லூத்தர் அவர்கள், தனது அறிக்கையின் சில எண்களில் திருத்தந்தைக்குச் சவாலான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். "திருத்தந்தையின் சொத்து, பெரிய செல்வந்தரான Marcus Licinius Crassus (கி.மு.115–6 மே,கி.மு.53) அவர்களின் சொத்தைவிட அதிகமாக இருக்கையில், திருத்தந்தை, தனது சொந்தப் பணத்தை வைத்து தூய பேதுரு பசிலிக்கா கட்டுவதற்குப் பதிலாக, எதற்காக, இந்த ஏழை விசுவாசிகளின் பணத்தைக் கொண்டு கட்டுகிறார்?" என்பதை, எண் 86ல், குறிப்பாக கோட்டிட்டுக் காட்டியிருந்தார். இவரின் 95 கொள்கைகள், 1517ம் ஆண்டில் ஜெர்மனியின் பல்வேறு இடங்களில் அச்சிடப்பட்டன. 1518ம் ஆண்டு சனவரியில், லூத்தரின் நண்பர்கள், இவற்றை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தனர். இதன் நகல்கள், இரு வாரங்களில் ஜெர்மனி எங்கும், இரு மாதங்களில் ஐரோப்பா எங்கும் பரவின. 1519ம் ஆண்டில், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும், இத்தாலி நாடுகளில் பரவி, பெருமளவில் மாணவர்கள், லூத்தர் பேசுவதைக் கேட்பதற்கு, விட்டன்பர்க் சென்றனர்.

கத்தோலிக்கத் திருஅவை, தொடக்கத்தில் மார்ட்டின் லூத்தரின் கொள்கைகள் குறித்து பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அவரின் கருத்துகள், ஐரோப்பாவில் வேகமாகப் பரவத் தொடங்கியதால், ஜெர்மனியின் Worms நகரில் பொதுச்சங்கம்கூடி, லூத்தர், தனது அறிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். லூத்தர் அதற்கு இணங்காததால், அவர், திருஅவையிலிருந்து புறம்பாக்கப்பட்டார். 16ம் நூற்றாண்டில், திருஅவையின் இந்நடவடிக்கைக்கு, லூத்தர் மற்றும் ஏனையோரிடமிருந்து கடும் அச்சுறுத்தல்கள் கிளம்பின. லூத்தர் எழுப்பிய விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக, 1545ம் ஆண்டில், வட இத்தாலியின் த்ரெந்தோ (Trento) நகரில் பொதுச்சங்கம் கூடியது. திருஅவையின் உயர்மட்ட அதிகாரிகள், 18 ஆண்டுகள் அவ்வப்போது கூட்டம் நடத்தி அவை குறித்து விவாதித்தனர். மொத்தத்தில் 25 அமர்வுகள் நடைபெற்றன. நம்பிக்கையால் மட்டுமே ஒருவர், இறைவனுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்ற லூத்தரின் உறுதிப்பாட்டை, பொதுச்சங்கம் மறுத்தது. மனிதர், தங்களின் நற்பணிகள் மற்றும் அருள்சாதனங்கள் வழியாக, மீட்புப்பெற இயலும் எனவும், தூய்மைபெறும் நிலை உண்டு எனவும், செபம் மற்றும் பாவத்திற்குத் தண்டனை குறைப்பு வழியாக, அந்நிலையிலுள்ள காலத்தைக் குறைக்க முடியும் எனவும் த்ரெந்தோ பொதுச்சங்கத்தில் கூறப்பட்டது. திருஅவையில் திருவுருவங்களின் பயன்களை உறுதிசெய்த அதேவேளை, அவற்றின் பயன்கள் சரியாக விளக்கப்பட வேண்டும், சிலை வழிபாட்டிற்கு இட்டுச்செல்லக் கூடாது என்றும் திருஅவை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சீர்திருத்த சபை

16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து உருவான சீர்திருத்த சபை, குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஐரோப்பாவில், பரவலாக சமயப் போர்களாக, ஒருவர் ஒருவருக்கு எதிராக வன்முறையை விதைத்தது. கத்தோலிக்கரும், பிரிந்த சபையினரும், தாங்களே சரியான பாதையில் செல்வதாகவும், மற்றவர், சாத்தானின் வேலைகளைச் செய்கின்றனர் எனவும் குறை கூறினர். இந்த மாற்றங்கள், கத்தோலிக்கத் திருஅவையே கலைகளின் ஒரே பெரிய பாதுகாவலர் என்ற நிலையிலும், எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தின. இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, சமயக் கோட்பாடே ஒரே ஆதாரம் என்றிருந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, அறிவியலிலும் புரட்சி இடம்பெற்றது. அதேநேரம், ஐரோப்பாவின் புதிய இடங்கள் கண்டுபிடிப்பு, காலனி ஆதிக்கம், கிறிஸ்தவத்தைப் பரப்பியது போன்றவையும் புதிய உலகில், தொடர்ந்து இடம்பெற்றன. 16ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பியர்கள், தாங்கள் இத்தனை நூற்றாண்டுகளாகக் கொண்டிருந்த உலகம் பற்றிய கருத்துகள் விரிவடைந்தன.

மார்ட்டின் லூத்தர் அவர்களின் கொள்கைகள் வழியில் சீர்திருத்த கிறிஸ்தவ சபை உருவானது. லூத்தரன் சபை எனப்படும், இச்சபையுடன், அண்மை காலத் திருத்தந்தையர் நல்லுறவுகள் கொண்டிருக்கின்றனர்.  

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் பற்றிய குறுகிய விளக்கவுரை மற்றும் திருப்பாடல்கள் குறித்த அவரின் ஆய்வுகளை வெளியிட்டார். 1520ம் ஆண்டில், ஜெர்மன் நாட்டின் கிறிஸ்தவப் பெருந்தன்மை, திருஅவையின் பபிலோனிய அடிமைநிலை, ஒரு கிறிஸ்தவரின் சுதந்திரம் ஆகிய தலைப்புகளில், லூத்தர் வெளியிட்ட மூன்று நூல்களும் அவரின் சிறந்த படைப்புகளாகும்.

22 May 2019, 13:01