மார்ட்டின் லூத்தர் மார்ட்டின் லூத்தர்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 2

இடி மின்னலில் அச்சத்தால் நடுங்கி, "புனித அன்னம்மாளே எனக்கு உதவி செய்தருளும், நான் துறவியாவேன்!" என கூக்குரலிட்டார் மார்ட்டின் லூத்தர். அந்த இயற்கை நிகழ்வு, இறப்பு மற்றும் இறைவனின் இறுதி தீர்ப்பு பற்றி பயமுறுத்தியது.

மேரி தெரேசா – வத்திக்கான்

மத்திய காலத்தில் கத்தோலிக்கத் திருஅவையில் பரவலாக இடம்பெற்ற ஊழல்கள், அது ஓர் ஆன்மீக சக்தி என்ற நிலையை இழக்கச் செய்தன. அதனால் கத்தோலிக்கர் மத்தியில், அருள்பணியாளர்களுக்கு எதிரான போக்கும் நிலவியது. அதேநேரம், அரசர்கள், இந்த ஒரு சூழலைப் பயன்படுத்தி, எல்லா நிலைகளிலும் திருஅவை கொண்டிருந்த அதிகாரங்களைக் குறைத்து, ஒரு பதட்டநிலையை உருவாக்க முயற்சித்தனர். இதனால், அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய, மெய்யியல் அறிஞர் John Wyclif உட்பட சில அறிஞர்கள், 1517ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில், திருஅவையின் வாழ்வில் சீர்திருத்தத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். மனிதநல வல்லுனராகிய ரோட்டர்டாமின் எராஸ்முஸ் அவர்கள், திருஅவையில் நிலவிய மூடநம்பிக்கைகளைத் தாக்கினார். அவை எல்லாம் பலன்தரவில்லை. ஆனால், 1517ம் ஆண்டில், அகுஸ்தீன் துறவு சபை அருள்பணியாளர் மார்ட்டின் லூத்தர் அவர்கள், திருஅவையைச் சீர்திருத்த எடுத்த முயற்சி, ஏனையோரிடமிருந்து மாறுபட்டதாய் இருந்தது. மார்ட்டின் லூத்தர் (1483-1546) அவர்கள், திருஅவையில் நிலவிய ஊழலுக்கு ஆணிவேராக இருந்த இறையியல் சார்ந்த பிரச்சனையை முன்வைத்து, சீர்திருத்தத்தைக் கொணர முயற்சித்தார். இவர், மீட்பு மற்றும் திருவருள் பற்றிய திருஅவையின் இறையியல் கோட்பாட்டிற்கும், நடைமுறை செயல்பாடுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார்.

மார்ட்டின் லூத்தர்

மார்ட்டின் லூத்தர் அவர்கள், புனித உரோமைப் பேரரசின் காலத்தில், ஜெர்மனியின் Eisleben என்ற ஊரில், 1483ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி பிறந்தார். அக்காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்கமே ஒரே மதமாக இருந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய இவர், வழக்கறிஞராக வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால், சட்டக் கல்வியில் ஆர்வமின்றி, அரிஸ்டாட்டில், ஓக்ஹாம் வில்லியம், கபிரியேல் பியெல் போன்ற மெய்யியல் அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இறையியல் மற்றும் மெய்யியல் படிப்பில் ஆர்வம் காட்டினார் லூத்தர். 1505ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று, விடுமுறைக்குப் பின்னர், வீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்திற்கு, குதிரையில் திரும்பிக்கொண்டிருந்தவேளையில் ஏற்பட்ட இடி மின்னல், இவரது வாழ்வை திசை திருப்பியது. அந்த இடி மின்னலில் அச்சத்தால் நடுங்கி, "புனித அன்னம்மாளே எனக்கு உதவி செய்தருளும், நான் துறவியாவேன்!" என கூக்குரலிட்டார். அந்த இயற்கை நிகழ்வு, இறப்பு மற்றும் இறைவனின் இறுதி தீர்ப்பு பற்றி பயமுறுத்தியது. அதற்குப் பின்னர், இவர், தனது நூல்களை விற்றுவிட்டு, 1505ம் ஆண்டு ஜூலை 17ம் நாளன்று, Erfurt நகரில், அகுஸ்தீன் துறவு சபையில் சேர்ந்தார். இத்துறவு சபையின் பயிற்சி காலத்திலேயே, கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார் இவர்.

புனித அகுஸ்தீன் துறவு சபையில், உண்ணா நோன்பு, நீண்ட நேரம் செபம், திருப்பயணம் மேற்கொள்தல் மற்றும் அடிக்கடி ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுதல் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்தார், மார்ட்டின் லூத்தர். அச்சமயத்தில் ஆன்மீக வாழ்வில் இருள்சூழ்ந்த நிலையை உணர்ந்தார். அவரின் நிலைகண்ட அவரது துறவு இல்லத் தலைவர் Johann von Staupitz அவர்கள், மார்ட்டின் லூத்தர், கிறிஸ்துவின் பலன்களைப் பெறும்பொருட்டு, தனது பாவங்கள் பற்றியே தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்று கூறினார். பாவத்திற்காக உண்மையாகவே மனம்வருந்துதல், தானாக விதித்துக்கொள்ளும் தண்டனைகளில் அல்ல, மாறாக, மனமாற்றத்தில் உள்ளது எனப் போதித்தார் லூத்தர். அகுஸ்தீன் சபையில், 1507ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் அவர். 1508ம் ஆண்டு, விட்டன்பெர்க் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், தனது 25வது வயதில், இறையியல் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார் இவர். 1512ம் ஆண்டில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூத்தர். இறையியல் துறையில் தலைவராகவும் நியமிக்கப்பட்ட இவர், அதிலிருந்து, விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். 1515ம் ஆண்டில், தனது துறவு சபையில், Saxony மற்றும் Thuringia மாநில தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

பேராலயம் கட்டுவதற்கு நிதி

உரோம் நகரில், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டுவதற்கு நிதி சேர்ப்பதற்காக, 1515ம் ஆண்டில், Johann Tetzel என்ற தொமினிக்கன் சபை துறவி, ஜெர்மனியில் பணியைத் தொடங்கினார். நிதி திரட்டும் பணி எவ்வாறு நடந்ததென்றால், பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டுமெனில் நிதி வழங்க வேண்டும் என்ற வகையில் இடம்பெற்றது. Tetzel அவர்கள், 1503ம் ஆண்டு முதல், 1510ம் ஆண்டுவரை இந்தப் பணியை மிகத் திறமையாக ஆற்றினார் என்பதால், திருத்தந்தை பத்தாம் லியோ அவர்கள் மற்றும், ஜெர்மனியின் Mainz பேராயர் Albrecht von Brandenburg அனுமதியின் பேரில், இவர், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டுவதற்கு நிதி சேர்க்கும் பாப்பிறை குழுவில் ஒருவராக, ஜெர்மனியில் போதிக்கத் தொடங்கினார். நிதி வழங்கினால், பாவத்திற்குரிய தண்டனை இவ்வுலகிலும், எஞ்சிய தண்டனை, இறந்தபின் தூய்மைபெறும் நிலையிலும் அகற்றப்படும் எனப் போதித்து வந்தார். இதனை எதிர்த்து, 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, மார்ட்டின் லூத்தர் அவர்கள், தனது ஆயர் Albrecht von Brandenburg அவர்களுக்கு எழுதிய மடலில், தனது 95 கொள்கைகள் என்ற பிரபலமான அறிக்கையையும் இணைத்து அனுப்பினார். மார்ட்டின் லூத்தர் அவர்கள், பாவமன்னிப்புகளைப் பணத்திற்கு விற்பனை செய்வதைக் கண்டித்து எழுதியதே, கத்தோலிக்கத்திலிருந்து, பிரிந்த கிறிஸ்தவ சபை உருவாக முதல் காரணமாக அமைந்தது.

மார்ட்டின் லூத்தரன் அவர்களால் உருவான சீர்திருத்த சபை மற்றும் இக்காலத்திய திருத்தந்தையர், அச்சபையோடு கொண்டிருக்கும் நல்லுறவுகள் பற்றிய நிகழ்ச்சி தொடரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2019, 14:34