தேடுதல்

Vatican News
இலங்கை காரித்தாஸ் அமைப்பின் செயலர், அருள்பணி மகேந்திர குணத்திலக்கே இலங்கை காரித்தாஸ் அமைப்பின் செயலர், அருள்பணி மகேந்திர குணத்திலக்கே 

மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் இலங்கை காரித்தாஸ்

இலங்கை மக்கள், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ளவும், குறிப்பாக, இஸ்லாமிய சகோதரர், சகோதரிகள் மீது நம்பிக்கை கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே, ஆழமான மனக்காயங்களை குணமாக்கும் - அருள்பணி குணத்திலக்கே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், வழிபாட்டு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த நாள்களில், மக்களின் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கையை வளர்க்க, இலங்கை காரித்தாஸ் அமைப்பு, பெரிதும் முயன்று வந்தது என்று, அவ்வமைப்பின் செயலர், அருள்பணி மகேந்திர குணத்திலக்கே அவர்கள் கூறினார்.

மே 23ம் தேதி முதல், 28ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற அகில உலக காரித்தாஸ் அமைப்பின் பொது அமர்வில் கலந்துகொள்ள வந்திருந்த அருள்பணி குணத்திலக்கே அவர்கள், ஆசியச் செய்திக்கு அளித்த பேட்டியில், மக்களின் நம்பிக்கையையும், வாழ்வையும் கட்டியெழுப்புவதில், காரித்தாஸ் கவனம் செலுத்தி வருகிறது என்று எடுத்துரைத்தார்.

அதிர்ச்சியும், வேதனையும் நிறைந்த அத்தாக்குதலைத் தொடர்ந்து, மக்களுக்கு கடவுளின் மீது பல கேள்விகள் எழுந்தாலும், அதே வேளையில், தங்களுக்கு செபிக்குமாறு அவர்கள் வேண்டிக்கொண்டது மனதைத் தொடுவதாக இருந்ததென்று, அருள்பணி குணத்திலக்கே அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மக்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில், மேய்ப்புப்பணி, ஆன்மீகம், மனவியல், பொருளாதாரம் என்ற அனைத்து தளங்களிலும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகளே விரைவான பலன் தரும் என்று அருள்பணி குணத்திலக்கே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மக்கள், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ளவும், குறிப்பாக, இஸ்லாமிய சகோதரர், சகோதரிகள் மீது நம்பிக்கை கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே, ஆழமான மனக்காயங்களை குணமாக்கும் என்று அருள்பணி குணத்திலக்கே அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

முதல் கட்ட அவசர நிதியாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், 50,000 ரூபாய், காரித்தாஸ் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டதென்றும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்கின்றன என்றும் அருள்பணி குணத்திலக்கே அவர்கள் தெரிவித்தார். (AsiaNews)

29 May 2019, 15:36