ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ 

மத்திய கிழக்கு, மற்றுமொரு போரைத் தாங்காது

அமெரிக்க ஐக்கிய நாடும், ஈரானும், பிரச்சனைக்கு, இராணுவத்தால் தீர்வும் காணும் எண்ணத்தை, தவிர்க்க வேண்டும் - கர்தினால் சாக்கோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய கிழக்குப் பகுதியில், மற்றுமொரு போர் இடம்பெற்றால், அது அனைவருக்கும் பேரிடராக அமையும் என்று, ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரிடம் எச்சரித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தல்களை மீண்டும் வெளியிட்டுள்ளவேளை, பிரச்சனைக்கு, இராணுவத்தால் தீர்வும் காணும் எண்ணத்தை, இருதரப்பினரும், தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதர் Joey Hood அவர்களைச்  சந்தித்துப் பேசிய கர்தினால் சாக்கோ அவர்கள், கலந்துரையாடல் வழியே அமைதியை நிலைநாட்டுமாறு, இருதரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், ஈரானிற்கும் இடையே பதட்டநிலையை உருவாக்கி அவர்களைப் போரில் ஈடுபடுத்துவதற்கு, அடிப்படைவாத குழுக்களும், ஆயுதங்களைக் கொண்டிருக்கின்ற புரட்சிக்குழுக்களும் விரும்புவது, ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்ற கவலையையும் தெரிவித்தார், கர்தினால் சாக்கோ. (AsiaNews)

இதற்கிடையே, 2015ம் ஆண்டின் பன்னாட்டு அணுஆயுத ஒப்பந்தத்தைக் கைவிட்டு, அணுஆயுதங்களுக்காக, யுரேனியத்தை மீண்டும் தயாரிக்கப் போவதாக, ஈரான் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பதட்டநிலை அதிகரித்துள்ளது.

பாக்தாத் நகரில், அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் பகுதியில் மே 19, இஞ்ஞாயிறன்று ஏவுகணை ஏவப்பட்டதாக, ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் அனைவரையும், ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஐக்கிய நாடு உத்தரவிட்டுள்ளது. (பிபிசி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 15:30