தேடுதல்

Vatican News
இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன  (AFP or licensors)

இலங்கையில் மே 5, ஞாயிறு திருப்பலிகள் இரத்து

இலங்கையில், புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க ஆலயம் மற்றும் ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், இஞ்ஞாயிறன்றும் ஆலயங்களில் திருப்பலிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் வன்முறைகள் நிகழும் ஆபத்து உள்ளது என வெளிநாட்டிலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதையொட்டி, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் மே 5, இஞ்ஞாயிறன்றும் திருப்பலிகளை நிறுத்தி வைத்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இஞ்ஞாயிறன்று திருப்பலிகள் நடைபெறும் என, இரு நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க ஆலயம் மற்றும், ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், இஞ்ஞாயிறன்று மீண்டும் ஆலயங்களில் திருப்பலிகளை இரத்து செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்து செய்திகள் கிடைக்கும்வரை, கத்தோலிக்க ஆலயங்களும், கத்தோலிக்கப் பள்ளிகளும்கூட மூடப்பட்டிருக்கும் எனவும், கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மே 6, வருகிற திங்களன்று, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, நாட்டிலுள்ள 10,194 பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளது. 

ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாடுகளில் கலந்துகொண்ட மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்களில், குறைந்தது நாற்பது வெளிநாட்டவர், ஐம்பது சிறார் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. 

காவல்துறை, சந்தேகத்தின்பேரில் 150க்கும் அதிகமானவர்களைக் கைதுசெய்துள்ளது. எனினும், இத்தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டவர்கள் யார் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. (AsiaNews/ Agencies)

03 May 2019, 14:24