இலங்கை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் இலங்கை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் 

தமிழக ஆயர்கள் - இலங்கையில் படுகொலைகளைக் கண்டித்து.......

இலங்கையில் கொலைக் குற்றத்தை நிகழ்த்திய கொடியவர்களுக்கு, அமைதியாக இறைவேண்டலில் ஈடுபட்டிருப்போர் எப்படி எதிரியாக முடியும்? ஆலயங்களைக் குறி வைப்போர், எம்மதத்தைச் சார்ந்தவராயினும், அவர்கள் நம்பும் இறைவனுக்கு எதிரிகளே!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது, குண்டு வெடிப்பில் தம்முயிரை இழந்தவர்க்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழக கத்தோலிக்க ஆயர்களும், கத்தோலிக்க நம்பிக்கையாளர்களும் தம் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கின்றனர்.

இவ்வாறு, இலங்கையில் நடத்தப்பட்டுள்ள படுகொலைகளைக் கண்டித்து, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள், தமிழக ஆயர்கள் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களை உய்விக்கத் தோன்றிய இயேசுபிரான் மரித்தார், பின் உயிர்த்தார் என்று நம்பும் கிறித்தவர்களின் நம்பிக்கைப் பெருநாளைச் சிதைக்கும் உரிமை எவர்க்கும் இல்லை. மரித்தாலும் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையைச் சிதைக்க முனைந்த சதியாளர்களை உலக சமூகம் என்றுமே மன்னிக்காது என்று, அவ்வறிக்கை கூறுகிறது.

இக்கொலைக் குற்றத்தை நிகழ்த்திய கொடியவர்களுக்கு, அமைதியாக இறைவேண்டலில் ஈடுபட்டிருப்போர் எப்படி எதிரியாக முடியும்? ஆலயங்களைக் குறி வைப்போர், எம்மதத்தைச் சார்ந்தவராயினும், அவர்கள் நம்பும் இறைவனுக்கு எதிரிகளே! என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

கொழும்புவைச் சுற்றி அமைந்துள்ள மூன்று பெரிய ஆலயங்களில் இக்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஏறத்தாழ 300 பேர் இறந்துள்ளனர் மற்றும், நூற்றுக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆலயங்களையும், நகரின் மிகப்பெரிய விடுதிகளையும் குறிவைத்துத் தாக்கியோர்க்கு ஏதேனும் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும். கிறித்தவர்களின் நம்பிக்கைப் பெருநாளாம் உயிர்ப்புப் பெருவிழாவன்று கிறித்தவ ஆலயங்கள் தகர்க்கப்படலுக்குப்பின் ஏதேனும் அரசியல் காரணமிருக்கிறதா என்பதைக் கண்டறியும் கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இலங்கையை ஆளும் சிங்கள பெரும்பான்மைவாத அரசு, இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்களின் மீதும், குறிப்பாக, மதச் சிறுபான்மையினர் மீதும் காட்டிவரும் பகையரசியலை மக்கள் அறிவர். இப்போது குண்டு வெடிக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்துமே தமிழர்க்குரியன மற்றும் தமிழர் வாழும் பகுதியிலுள்ளன. இவர்கள், ஈழப்போரின்போது எவ்வகையான தீவிரவாதப் போக்கிற்கும் துணை நில்லாமல், நடுநிலை வகித்தவர்கள். பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஆலயங்கள் எவையுமே, ஈழப்போரின்போது பிரிவினையத் தூண்டும் மையங்களாகச் செயல்பட்டதே இல்லை.

கிறித்தவ வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்தியோரை, இலங்கை அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். கிறித்தவப் பெருமக்களின் நம்பிக்கைத் திருவிழாவன்று அப்பாவி கிறித்தவர் மீது நடத்தப்பட்ட நாகரீகமற்ற செயல்கள் இனிமேல் நடைபெறாதிருக்க, இலங்கை அரசு உத்தரவாதம் அளிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பு, அமைதி, சமத்துவம் எனும் விழுமியங்களைத் தாங்கி நிற்கும் கிறித்தவம், அரசு முன்னெடுக்கும் அமைதிப்பணிக்கு என்றும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2019, 11:32