தேடுதல்

வீட்டின் கூரையைப் பிரித்து தங்கள் நண்பனை இறக்கியவர்களின் நம்பிக்கையை இயேசு கண்டார் வீட்டின் கூரையைப் பிரித்து தங்கள் நண்பனை இறக்கியவர்களின் நம்பிக்கையை இயேசு கண்டார் 

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 6

‘இயேசு, அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு’ என்ற சொற்களை வாசிக்கும்போது, வார்த்தை வடிவில் வெளிப்படும் நம்பிக்கையைவிட, செயல் வடிவில் வெளிப்படும் நம்பிக்கை சக்தி மிகுந்தது என்பதை உணரலாம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 6

முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் புதுமை, ஒத்தமை நற்செய்திகளான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மத். 9:1-8; மாற். 2:1-12; லூக். 5:17-26) இம்மூன்று பதிவுகளிலும், ஒரு சில மாற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நற்செய்தியாளர் மாற்கு, லூக்கா இருவரும், இப்புதுமை, ஒரு வீட்டில் நிகழ்ந்ததென்றும், அவ்வீட்டின் கூரை பிரிக்கப்பட்டு, நோயுற்றவர், இயேசுவுக்கு முன் இறக்கப்பட்டார் என்றும், குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நற்செய்தியாளர் மத்தேயு, வீடு, கூரை, போன்ற விவரங்கள் எதையும் குறிப்பிடாமல், "அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்" (மத்தேயு 9:2) என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளி இயேசுவுக்குமுன் கொண்டுவரப்பட்டதும், இயேசு புதுமை செய்ததையும், அதன் எதிரொலியாக அங்கு ஏற்பட்ட சலசலப்பு, எதிர்ப்பு ஆகியவற்றைக் குறித்தும், மூன்று நற்செய்தியாளர்களும் ஏறத்தாழ ஒருமித்த சொற்களில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள இப்பகுதியின் அறிமுக சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

இயேசு, அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, (மத்தேயு 9:2; மாற்கு 2:5) என்ற சொற்கள் மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும், அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு (லூக்கா 5:20) என்ற சொற்கள், லூக்கா நற்செய்தியிலும் பதிவாகியுள்ளன.

அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு இயேசு குணமாக்கினார் என்ற சொற்களை வாசிக்கும்போது, இயேசு ஆற்றிய வேறு பல புதுமைகள் நினைவுக்குக் வருகின்றன. தன் மகள் சார்பாக, இயேசுவிடம் மன்றாடிய கானானியப் பெண் (மத்தேயு 15: 21-28), தன் மகன் சார்பாக இயேசுவைச் சந்திக்கச் சென்ற அரசுத்தலைவர் (யோவான் 4: 46-54), பணியாளர் சார்பாக இயேசுவிடம் ஆள் அனுப்பிய நூற்றுவர் தலைவர் (லூக்கா 7: 1-10) போன்றோர் நம் நினைவுக்கு வருகின்றனர். இப்புதுமைகளில், நோயுற்றவரை இயேசுவிடம் அழைத்து வராதச் சூழலிலும், நோயுற்றவர் சார்பாக விண்ணப்பித்தவரின் நம்பிக்கை காரணமாக, இயேசு புதுமைகள் செய்வதை உணர்கிறோம். இதையொத்தச் சூழல், முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் இப்புதுமையில் நிலவுகிறது.

'அவர்களுடைய நம்பிக்கை' என்ற சொற்களை இருவேறு வழிகளில் பொருள் கொள்ளலாம். பல்வேறு பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டி, வீட்டின் கூரையைப் பிரித்து, இயேசுவுக்கு முன் தங்கள் நண்பனைப் படுக்கையோடு இறக்கிய நண்பர்களுடைய நம்பிக்கை என்ற கோணத்தில் நாம் பொருள் கொள்ளலாம். அல்லது, அந்த நான்கு நண்பர்களோடு, படுக்கையில் கிடந்தவரும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்ற கோணத்தில் நாம் பொருள் கொள்ளலாம். தன் நண்பர்கள் மேற்கொண்ட துணிகரமான முயற்சிகளைக் கண்ட நோயாளியும், நம்பிக்கையில் வளர்ந்திருக்கவேண்டும். எனவே, 'அவர்களுடைய நம்பிக்கை' என்ற சொற்களில், ஐந்து பேரின் நம்பிக்கையும் குறிப்பிடப்படுகிறது.

‘இயேசு, அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு’ என்ற சொற்களை வாசிக்கும்போது, வார்த்தை வடிவில் வெளிப்படும் நம்பிக்கையைவிட, செயல் வடிவில் வெளிப்படும் நம்பிக்கை சக்தி மிகுந்தது என்பதை உணரலாம். அவர்களுடைய நம்பிக்கையை, இயேசு, கண்ணால் கண்டார் என்பதை மூன்று நற்செய்தியாளர்களும் தெளிவாகக் கூறியுள்ளனர்.

இயேசுவை அணுகிய பலர், தங்கள் நம்பிக்கையை சொற்களில் வெளிப்படுத்த, அவற்றை இயேசு கேட்டிருக்கிறார். அவர்களில் ஒருவர், தீய ஆவி பிடித்த தன் மகனை இயேசுவின் சீடர்களிடம் கொணர்ந்த அச்சிறுவனின் தந்தை. ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் கூறப்பட்டுள்ள இப்புதுமையை, நாம் பின்வரும் தேடல்களில் சிந்திக்க இருக்கிறோம். எனினும், இப்போதைக்கு, அச்சிறுவனின் தந்தை தன் நம்பிக்கை குறைவைக் குறித்து சொல்லும் சொற்கள், நம் உள்ளத்தைத் தொடுகின்றன. சிறுவனின் தந்தைக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், மாற்கு நற்செய்தியில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

மாற்கு 9: 21-24

இயேசு அவனுடைய தந்தையைப் பார்த்து, "இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?" என்று கேட்டார். அதற்கு அவர், "குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது... உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்" என்றார். இயேசு அவரை நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கதறினார்.

இயேசுவிடம் வந்த பலர் தங்கள் நம்பிக்கையை சொற்களில் வெளிப்படுத்தியதைக் கேட்டு, இயேசு அவர்கள் வேண்டிக் கேட்டப் புதுமைகளைச் செய்துள்ளார். இந்த நிகழ்விலோ, முடக்குவாதமுற்றவரை சுமந்து வந்தவர்கள் இயேசுவிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதபோதும், அவர்களது செயல்கள், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை பறைசாற்றின. எனவே, இயேசு அந்தப் புதுமையை நிகழ்த்தினார்.

நமது நம்பிக்கை, வெறும் சொற்களாக, முழக்கங்களாக இருப்பதில் பொருளில்லை. அது செயல்வடிவம் பெறவேண்டும். இதை திருத்தூதர் யாக்கோபு தன் திருமுகத்தில் மிகத் தெளிவாக, அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்:

யாக்கோபு 2: 14-20

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆனால், "ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன" என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?

நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, வெறும் சொல்வடிவில் இருப்பதில் பயனில்லை, அந்த நம்பிக்கை செயல்வடிவில் வெளிப்படவேண்டும் என்பதைக் கூறும் ஒரு கதையுடன் இன்றைய நம் தேடலை நிறைவு செய்வோம்:

புகழ்பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி, சாகசங்கள் செய்துகொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று, மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு, அந்தக் கயிற்றின் மீது நடப்பது.

அதையும் அவர் அற்புதமாக செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடிவந்து, அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது, நானே நேரில் அவற்றைக் கண்டுவிட்டேன். இனி, உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுப் பேசினார்.

"மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி. செய்வீர்களா?" என்று கேட்டார், அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப்போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைகளுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள், வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரின் திறமையில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக சொற்களால் கூறிவந்தவர், அவரது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் தரச்சொல்லி, அந்தக் கலைஞர் அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்துவிட்டார்.

தங்கள் நண்பனை இயேசு குணமாக்குவார் என்ற நம்பிக்கையால் தூண்டப்பட்ட நான்கு நண்பர்களும், தங்கள் நம்பிக்கைக்கு செயல்வடிவம் தந்தனர். அந்த நம்பிக்கையைக் கண்ட இயேசு, நோயுற்றவரைக் குணமாக்கினார். அவரைக் குணமாக்க இயேசு பயன்படுத்திய சொற்கள், அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கின. இப்பிரச்சனையை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2019, 14:09