"அம்மா..., நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" (யோவான் 8:10-11) "அம்மா..., நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" (யோவான் 8:10-11) 

தவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தவக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக் கூற, 'காணாமல் போன மகன்' உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.

தான் சித்திரித்த அந்தத் தந்தையிடம் விளங்கிய அன்பை, இயேசு, தன் வாழ்வில் வெளிப்படுத்திய ஓர் அற்புத நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். (யோவான் 8:1-11), தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள், நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. "இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்" (யோவான் 8:1-2) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.

அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

மற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும். பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். இவ்வளவு ‘முன்னேற்றம்’ அடைந்துள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு, இது ஒரு வாய்ப்பு. மற்றபடி, அந்த பெண்ணோ, சட்டங்களோ அவர்களுக்கு முக்கியமில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவதாக அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் 20: 10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்களோ விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.”  (யோவான் 8: 7)

ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்”  இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போகவேண்டியதாயிற்று.

இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். (யோவான் 8:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் காட்சியைப்பற்றி கூறும் புனித அகுஸ்தீன், "இறுதியில் அங்கு இரண்டு மட்டுமே இருந்தன. இரக்கமும், இரக்கப்படவேண்டிய ஒன்றும்" என்று கூறியுள்ளார். புனித அகுஸ்தீன் பயன்படுத்திய "Misericordia et misera" என்ற இவ்விரு சொற்களையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது மடலின் தலைப்பாக வழங்கியுள்ளார்.

இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில், "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" (யோவான் 8:10) என்று இயேசு கேட்கிறார். இச்சொற்களில், கனிவும், மரியாதையும் வெளிப்படுகின்றன.

அப்பெண்ணை இயேசுவிடம் கொணர்ந்த மதத் தலைவர்கள், 'அவள், இவள்...' என்று மரியாதைக் குறைவான மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இயேசு இறுதியாக, அப்பெண்ணிடம் பேசும்போது, "அம்மா" என்று அவரை அழைக்கிறார். இயேசு பயன்படுத்திய "அம்மா" என்ற இச்சொல், நமக்கு கானா திருமண விருந்தை நினைவுக்குக் கொணர்கிறது. அங்கும், திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதென அன்னை மரியா கூறியதும், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என்று இயேசு கேட்டபோது, அவர் பயன்படுத்திய 'அம்மா' என்ற சொல், தாய் என்ற உறவைக் குறிப்படும் சொல் அல்ல, அது, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் ஒரு சொல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.

பொதுவாக, ஒருவர் மற்றொருவருக்கு மன்னிப்பு வழங்கும் வேளையில், மன்னிப்பளிப்பவர் உயர்ந்த நிலையிலும், மன்னிப்பு பெறுபவர், தாழ்வான நிலையிலும் இருப்பதைப்போல் உணர வாய்ப்புண்டு. ஒரு சிலர் மன்னிப்பு வழங்கும்போது, தங்களை அரியணைகளில் அமர்த்திக்கொண்டு, மன்னிப்பு பெறுபவரை கால்மணை போல நடத்துவதும், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பு, தான் போடும் பிச்சை என்று உணரவைப்பதும், நாம் அவ்வப்போது காணும் காட்சிகள்.

நாம் இன்று தியானிக்கும் இந்நிகழ்வில், இயேசு அப்பெண்ணை 'அம்மா' என்றழைத்தபோது, அச்சொல்லில் கனிவு மட்டும் வெளிப்படவில்லை, அதைவிடக் கூடுதலாக, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பெண்ணை மீண்டும் ஒரு பெண்மணியாக உயர்த்தி, அவர், அக்கோவிலிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேச் செல்லுமாறு இயேசு உதவி செய்தார்.

சென்ற வாரம் நாம் சிந்தித்த 'காணாமல்போன மகன்' உவமையில், தந்தையின் இல்லத்தில் ஒரு பணியாளனாக இருந்தால் போதும் என்ற தாழ்வான மனநிலையில் திரும்பி வந்த மகனுக்கு, 'முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி...' (லூக்கா 15:22) என்று மரியாதைகள் பல வழங்கப்பட்டன. மகனுக்கு உரிய மதிப்பு வழங்கிய அந்தத் தந்தையைப் பற்றி பெருமையுடன் பேசிய இயேசு, இன்று, அந்த தந்தையாக மாறி, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அனைத்தையும் மீண்டும் தந்தார்.

இரக்கத்தின் இலக்கணத்தை வரையறுக்கும் இந்நிகழ்வு, திருஅவையின் ஆரம்ப காலத்தில், பல சங்கடங்களை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்பகுதி, யோவான் நற்செய்தியிலிருந்து, சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருஅவையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சங்கடம் தான் என்ன?

'விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட' (யோவான் 8:4) ஒரு பெண்ணை, இயேசு மன்னித்து அனுப்பும் இந்நிகழ்வு, மக்களை, பாவம் செய்வதற்கு அனுமதி வழங்கும் ஒரு கதையாக மாறிவிடும் என்ற அச்சமே, இப்பகுதியை நற்செய்தியிலிருந்து அகற்றிவிடத் தூண்டியது என்று விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயேசு வழங்கிய இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்ற அச்சம் தோன்றலாம். இது தேவையற்ற, காரணமற்ற அச்சம்.

கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும், எந்நிலையிலும், அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வதுதான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.

திரும்பி வந்த அந்த காணாமல் போன மகனை நினைத்துப் பாருங்கள். அவனுக்குக் கிடைத்த அந்த வரவேற்பிற்குப் பின், தன்னை வாரி அணைத்து, விருந்து கொடுத்து ஏற்றுக் கொண்ட அந்த தந்தையின் மனதை இனி அந்த மகனால் துன்பப்படுத்த முடியுமா? முடியும். ஆனால், மாட்டான். அன்பைச் சுவைத்தவன், இனி அந்த அன்புக்கு பதிலாக, நல்வழி செல்வதையே தினமும் நினைத்திருப்பான்.

இயேசுவும் அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லியிருக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிபந்தனையேதுமின்றி நம்மீது அன்பு கொண்டுள்ள கடவுளோடு வாழும் துணிவைப் பெற, தவக்காலத்தின் சிகர நிகழ்வுகள் நமக்கு உதவி செய்யட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2019, 16:41