தேடுதல்

குழந்தை இயேசு பசிலிக்கா, கோவா குழந்தை இயேசு பசிலிக்கா, கோவா 

கோவாவில் கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் பாதுகாப்பு

பழைய கோவாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - தலத்திருஅவை கவலை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவின் கோவாவிலுள்ள பழம்சிறப்புமிக்க கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போர்த்துக்கீசிய காலனியாக விளங்கிய கோவாவிலுள்ள ஏறத்தாழ 200 ஆலயங்களில், பெரும்பாலானவை, 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டவை.

16ம் நூற்றாண்டில் இறையடி சேர்ந்த, இயேசு சபை புனிதர் பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத உடல் வைக்கப்பட்டுள்ள, புனித குழந்தை இயேசு (Bom Jesus) பசிலிக்கா உட்பட, பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், பழைய கோவாவில் உள்ளன.

இதற்கிடையே, பழைய கோவாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளார், குழந்தை இயேசு பசிலிக்கா அதிபர், அருள்பணி Patricio Fernandes.

பசிலிக்காவுக்குள் செல்லும் பயணிகள் ஒழுங்குமுறையின்றி செல்கின்றனர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்துகின்றனர் என்றும், பாதுகாப்புக்கு நிற்கும் காவல் துறையினர், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அருள்பணி Fernandes அவர்கள் குறை கூறினார்.  

கோவாவின் புகழ்மிக்க கடற்கரை, கடந்த ஆண்டில் ஏறத்தாழ அறுபது இலட்சம்  சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்தது. இவர்களில் 5,78,000 பேர் வெளிநாட்டவர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2019, 15:19