தேடுதல்

Vatican News
நீர்கொழும்புவில் அடக்கச் சடங்கு நீர்கொழும்புவில் அடக்கச் சடங்கு 

வேதனையை மூலதனமாக்கி அரசியல் இலாபம் வேண்டாம்

"உயிரை வழங்கும் இறைவனுக்கு மட்டுமே உயிரை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. வெறிமிகுந்த கொள்கைகளை அடைவதற்கு, மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" - கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களை, அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலத் தேவைகளுக்குப் பயன்படுத்தவேண்டாமென்று இலங்கை ஆயர் பேரவையின் தலைவர், ஆயர், ஜூலியன் வின்ஸ்டன் செபாஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையின் துயர நிகழ்வுகளையொட்டி, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த ஆயர் பெர்னாண்டோ அவர்கள், இலங்கை அரசு, தேவையான அளவு பாதுகாப்பினை உறுதி செய்யாமல் இருந்தது மிகுந்த வேதனையாக உள்ளது என்று கூறினார்.

இந்தப் பெரும் துயரங்கள் நடுவே, கிறிஸ்தவ மக்கள், அருள்பணியாளர்கள், மற்றும்  துறவியர் காட்டிய பொறுமை, இறைவன் தங்களுக்கு வழங்கிய அருள் என்று ஆயர் பெர்னாண்டோ அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினார்.

இத்தகைய துயரமான சூழலிலும், அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி, பழைய பகைமையை மீண்டும் கிளறிவிடுமாறு பேசிவருவது வேதனையளிக்கிறது என்று ஆயர் பெர்னாண்டோ அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மக்களின் வேதனையை மூலதனமாக்கி தங்கள் அரசியல் இலாபத்தைத் தேடும் சுயநலப் போக்கை, அரசியல் தலைவர்கள் உடனே நிறுத்தவேண்டும் என்று, இலங்கை ஆயர் பேரவைத் தலைவர் விண்ணப்பித்தார்.

24 April 2019, 15:22