தலாய் லாமா தலாய் லாமா 

மக்களாட்சி நாடுகளில்கூட சமய சுதந்திரம் மீறப்படுகின்றது

உலகில் நிலவும் அந்நியர் மீது வெறுப்பு மற்றும், அருவருப்பான பேச்சுகள் களையப்படுவதற்கு உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சுதந்திர மற்றும் மக்களாட்சி நாடுகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் நாடுகளில்கூட, இக்காலத்தில், கணிசமான அளவில், சமய சுதந்திரம் மீறப்படுகின்றது என்று, பன்னாட்டு இறையியல் கழகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த வார இறுதியில் (ஏப். 26,2019) வெளியிடப்பட்ட பன்னாட்டு இறையியல் கழகத்தின் அறிக்கை, சமநிலை காப்பதாகக் கூறுகின்ற சுதந்திர நாடுகளின் கருத்தியல்கள், சர்வாதிகாரம் நோக்கி மெல்ல மெல்லச் செல்ல வைக்கின்றன என்று குறை கூறியுள்ளது.

அண்மை ஆண்டுகளில் உதித்துள்ள சமுதாய-கலாச்சாரச் சூழலில், மக்களாட்சி நாடுகள்  சர்வாதிகாரத்தை நோக்கி மெல்ல நகன்றுகொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும், மதத்தை ஒருவரும் மற்றவர் மீது திணிக்க முடியாது, ஏனெனில் இச்செயல், கடவுளால் படைக்கப்பட்ட மனித இயல்புக்குத் தகுதியற்றது என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க் கொள்கைத் திரட்டு கூறுகின்றது என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)

ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்

இதற்கிடையே, வெறுப்புணர்வு, ஒவ்வொரு மனிதருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றுரைத்துள்ள, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், உலகில் நிலவும் அந்நியர் மீது வெறுப்பு மற்றும், அருவருப்பான பேச்சுகள் களையப்படுவதற்கு உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாள்களில், கலிஃபோர்னியாவில் யூத மத தொழுகைக்கூடம், புர்கினா ஃபாசோவில் கிறிஸ்தவ கோவில் மற்றும், இலங்கையில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில், உயிர்களைப் பறிக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, இத்திங்களன்று இவ்வாறு பேசினார், கூட்டேரெஸ்.

முஸ்லிம்கள், மசூதிகளிலும், யூதர்கள் தொழுகைக்கூடங்களிலும், கிறிஸ்தவர்கள் ஆலயங்களிலும் கொலை செய்யப்படுகின்றனர், அந்த மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன மற்றும் அவமானப்படுத்தப்படுகின்றன எனவும் கவலை தெரிவித்தார், கூட்டேரெஸ்.

வெறுப்பின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறை மற்றும் சகிப்பற்றதன்மைச் செயல்கள், அனைத்து மதங்களின் நம்பிக்கையாளர் மீது குறிவைக்கப்படுகின்றன, இதற்கு எதிரான நடவடிக்கைகள், உலக அளவில் உடனடியாக இடம்பெற வேண்டும் என, கூட்டேரெஸ் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2019, 15:32