தேடுதல்

பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு நகரில் துவங்கியுள்ள இளையோர் நாள் நிகழ்வு குறித்த அறிக்கை பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு நகரில் துவங்கியுள்ள இளையோர் நாள் நிகழ்வு குறித்த அறிக்கை 

இரக்கத்தில் நிறைந்தது இறைவனின் நினைவுத்திறன்

1521ம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் வேரூன்றியதன் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் 2021ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதற்கு தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் நினைவுத்திறன், நம் கணனியில் காணப்படும் பதிவுத் தகடுபோல, நம் வாழ்வின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யும் நினைவுத்திறன் அல்ல; மாறாக, அது இரக்கத்தில் நிறைந்த நினைவுத்திறன் என்று, பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர் ஒருவர் இளையோரிடம் கூறினார்.

ஏப்ரல் 24, இப்புதனன்று, பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு (Cebu) நகரில் தேசிய இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்கத் திருப்பலியை நிறைவேற்றிய செபு பேராயர் ஹோஸே பால்மா அவர்கள், தன் மறையுரையில், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளுமாறு இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

இறைவன் மீது இளையோர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் வெளிப்பாடாக மற்றவர்களுக்கு பணியாற்ற அவர்கள் முன்வரவேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் இளையோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Leopoldo Jaucian அவர்கள், இளையோர் நாள் துவக்க விழாவில் அழைப்பு விடுத்தார்.

உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் காரணமாக, செபு நகரில் துவங்கிய இந்த இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு காவல் துறையினர் மிகுந்த பாதுகாப்பை அளித்தனர் என்று UCA செய்தி கூறுகிறது.

1521ம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் வேரூன்றியதன் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் 2021ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதற்கு ஒரு தயாரிப்பாக, இப்புதனன்று துவக்கப்பட்ட இளையோர் நாள் நிகழ்வுகள், ஒரு வார காலம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2019, 15:02