எருசலேமில் இயேசுவை வரவேற்க ஆர்வமாய் கூடிய கூட்டம் எருசலேமில் இயேசுவை வரவேற்க ஆர்வமாய் கூடிய கூட்டம் 

குருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இன்று, மக்கள் நடுவே, தானாக உருவாகும் எழுச்சிகளைப் போல், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு கூட்டமும், ஊர்வலமும், எருசலேம் நகரில் நடந்தன. அந்நிகழ்வுகளை, நாம், குருத்தோலை ஞாயிறன்று நினைவுகூருகிறோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

குருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உலகின் மிகப்பெரும் குடியரசு என்றழைக்கப்படும் இந்தியாவில், மக்கள், நாட்டின் நலனுக்காக, தங்களிடம் உள்ள ஒரே ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆம், ஏப்ரல், 11ம் தேதி, கடந்த வியாழன் முதல், மே, 19ம் தேதி முடிய, நடைபெறும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில், பல்வேறு எதிர்பார்ப்புக்கள், ஐயங்கள், அச்சங்கள் நிலவியபோதிலும், மக்கள், நம்பிக்கையுடன் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, கூட்டங்களும், ஊர்வலங்களுமாய், நாடே, நாடக மேடையாக மாறியிருந்தது. பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் ஒருவரது பெருமையை, சக்தியைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் நாடகங்களே. பணம் கொடுத்து சேர்க்கப்படும் இந்தக் கூலிக் கூட்டங்களுக்கு, முற்றிலும் மாறாக, தானாகவே வந்துசேரும் கூட்டங்களும் அவ்வப்போது உருவாகின்றன.

சென்ற ஆண்டு, மார்ச் 11, 12 ஆகிய இரு நாட்களில், 50,000த்திற்கும் அதிகமான விவசாயிகள், மகாராஷ்டிரா மாநிலத்தின், நாசிக் நகரிலிருந்து நடைப்பயணமாகப் புறப்பட்டு, மும்பை நகரில் நுழைந்தனர். இவர்களின் எழுச்சியைக் கண்டு, மகாராஷ்டிர அரசு, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவு செய்வதாக வாக்களித்தது.

சென்ற ஆண்டு, மார்ச் 24ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில், 5 இலட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவியர் ஓர் ஊர்வலத்தை மேற்கொண்டனர். அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும் துப்பாக்கிப் பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், இவர்கள், இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, 2017ம் ஆண்டு, சனவரி மாதம், சென்னை மெரீனா கடற்கரையில், தமிழகத்தின் இளம் பெண்களும், இளைஞர்களும் இணைந்து, மேற்கொண்ட ஒரு போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்தது. அரசியல் நாற்றம் அறவே இன்றி நடத்தப்பட்ட இந்த அறப்போராட்டம், நம்பிக்கையை விதைத்தது.

இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கட்டுப்படுத்த, ‘ஜன் லோக்பால்’ (Jan Lokpal) மசோதா, சட்டமாக்கப்பட வேண்டுமென்று, வயதில் முதிர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரே (Anna Hazare) அவர்கள், 2011ம் ஆண்டு, தன் 72வது வயதில், புது டில்லியில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், பல இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த போராட்டத்திற்கு, மக்கள் வழங்கிய. ஆதரவு, மத்திய அரசை ஆட்டிப்படைத்தது.

மக்கள் நடுவே, தானாக உருவான இவ்வெழுச்சிகளைப் போல், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு கூட்டமும், ஊர்வலமும், எருசலேம் நகரில் நடந்தன. அந்நிகழ்வுகளை, நாம், குருத்தோலை ஞாயிறன்று நினைவுகூருகிறோம்.

குருத்தோலை ஞாயிறு என்றதும், ஒரு வரலாற்றுப் பதிவு நம் நினைவில் தோன்றுகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: “The Palm Sunday Tornado 1920” – “குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920”. அவ்வாண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 37 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது. குருத்தோலை ஞாயிறு, சூறாவளி, இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; தன் பாதையில் உள்ள அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு, எருசலேமில், பலவற்றை, தலைகீழாகப் புரட்டிப்போட்டது என்பதை உணரலாம்.

இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, அவரைச் சுற்றி தானாகவே உருவான கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது. இயேசு, தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வுக்கு, சவால்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அந்த சவால்களின் சிகரமாக, எருசலேம் நகரில், இயேசு, பெற்ற வரவேற்பு அமைந்தது. அதைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் அரணாக விளங்கிய எருசலேம் கோவிலில் இயேசு நுழைந்து, அங்கு குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும், தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்புப் பெருவிழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்றழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாள்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருக்குலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறானத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர், இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவார நிகழ்வுகள் வழியே, நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு.

ஒவ்வோர் ஆண்டும், குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. 1984ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை, உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 50,000, அல்லது, 60,000 இருக்கும் என்று திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம் நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம் நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர். அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர் நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன:

"ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும் இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர் ஆரவாரமாக வரவேற்றனர்.

அன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப் பின், புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்கள், அற்புதமானதோர் அடையாளச் செயலைச் செய்தார். 1983ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மீட்பின் புனித ஆண்டுக்கென புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை, இளையோர் கரங்களில் திருத்தந்தை ஒப்படைத்தார். கிறிஸ்துவின் அளவற்ற அன்பைப் பறைசாற்றும் அந்த அற்புத அடையாளத்தை, இளையோர் உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை இளையோரிடம் குறிப்பாக விண்ணப்பித்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால், பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச்செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து சென்றுள்ள சிலுவை, 2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளிலும் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது.

இறுதியாக சில சிந்தனைகள்: இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் புனித வியாழனன்று, இந்தியாவின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமையை, தமிழக மக்கள் பெற்றிருப்பதை, இறைவன் வழங்கியுள்ள ஓர் அடையாளமாகக் கருதுவோம். ஏனெனில் அந்த இறுதி இரவுணவின்போது, தலைவர் எனில், உண்மையானப் பணியாளராக இருக்கவேண்டும் என்ற உண்மையை, தன் சீடர்களின் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிக்க, இயேசு, அவர்களுடைய காலடிகளைக் கழுவினார். அந்தப் புனிதமான நாளில், உண்மையானத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை, தமிழக மக்கள் பெறவேண்டும் என்ற வேண்டுதலை, இயேசுவிடம் எழுப்புவோம்.

அடுத்து, ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று, தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புத்தாண்டிலும், நல்லவை நிகழும் என்ற கனவுகள், நமக்குள் எழுவது இயல்பு. இந்தப் புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் தேர்தலும் நடைபெறுவதால், நல்லவை நிகழும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் பங்கேற்போம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் விட்டுச்சென்ற நன்மை தரும் கனவுகளை, இப்புத்தாண்டு நாளன்று நினைவுகூருவோம்:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...

இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்

இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)

பாரதிதாசனின் கனவு வரிகளை, ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று எண்ணிப்பார்க்க ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14ம் தேதி, "இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாள்" கடைபிடிக்கப்படுகின்றது. 2017ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு செலவிட்ட மொத்தத் தொகை - 1,75,390 கோடி டாலர்கள். அதாவது, 1,20,32,141 கோடி ரூபாய். 2017ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்டத் தொகையை உலகில் உள்ள மனிதர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 230 டாலர்கள், அதாவது, 15,922 ரூபாய் கிடைக்கும். இத்தகைய நிதி உதவி, பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால், அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாது. இல்லையா?

குருத்து ஞாயிறு, இளையோர் உலக நாள், தமிழ் புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாள்", தற்போது இந்தியாவில் நிகழும் தேர்தல், ஆகிய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது,  நம் உள்ளங்களில் எழும் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்போம்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.

சிறப்பாக, தங்கள் எதிர்காலம் வளமாக அமையவேண்டும் என்ற கனவோடு, தகுதியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். அத்துடன், ஒவ்வொரு குருத்து ஞாயிறன்றும் கத்தோலிக்கத் திருஅவை உலக இளையோர் நாளைக்  கொண்டாடி வருவதாலும், போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும் முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதாலும், அவர்களை இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2019, 15:00