தேடுதல்

புது டில்லி, திரு இருதயப் பேராலயத்திற்கு முன், மனிதச் சங்கிலி போராட்டம் புது டில்லி, திரு இருதயப் பேராலயத்திற்கு முன், மனிதச் சங்கிலி போராட்டம் 

மத தீவிரவாதத்தை முறியடிக்க, பாலங்கள் உருவாகவேண்டும்

இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மனித குலத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள்; மற்றும், பிரிவினைக் கொள்கைகளை வளர்ப்போரின் வளர்ச்சி, அதிர்ச்சியளிக்கிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதத்தின் அடிப்படையில் உருவாகும் தீவிரவாதத்தை முறியடிக்க, மதங்களுக்கிடையே நட்பும், நம்பிக்கையும், பாலங்களும் உருவாகவேண்டும் என்ற மையக்கருத்துடன், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், சீக்கியர்கள், மற்றும் இந்துக்கள் இணைந்து, புது டில்லியில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

"வெறுப்புக்கு எதிராக இணைந்து" என்ற பெயரில் பணியாற்றும் அமைப்பைச் சேர்ந்த பல்வேறு மதத்தினர், உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்து, ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று, புது டில்லியில், திரு இருதயப் பேராலயத்திற்கு முன், சாலையில், மனிதச் சங்கிலி போராட்டத்தை மேற்கொண்டனர்.

'தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது', 'நாம் அனைவரும் இலங்கை மக்கள், நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள்', 'கிறிஸ்தவர்களுடன் நாங்கள் நிற்கிறோம்' என்ற பல்வேறு வாசகங்களைத் தாங்கியவண்ணம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மனித குலத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள்; பிரிவினைக் கொள்கைகளை வளர்ப்போரின் வளர்ச்சி, அதிர்ச்சியளிக்கிறது என்று 'மனித உரிமைகள் மீது விழிப்புணர்வு மன்றம்' என்ற அமைப்பின் இயக்குனர், லெனின் ரகுவன்ஷி அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்களை கண்டனம் செய்து, பாகிஸ்தான், மியான்மார், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயர் பேரவைகள், துறவு சபைகள், கிறிஸ்தவ அமைப்புக்கள், மற்றும் பல்சமய அமைப்புக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. (AsiaNews/ UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2019, 15:06