தேடுதல்

Vatican News
ஹாங்காங் கத்தோலிக்கர்களுடன் கர்தினால் John Tong Hon ஹாங்காங் கத்தோலிக்கர்களுடன் கர்தினால் John Tong Hon  

ஹாங்காங்கில், உயிர்ப்புப் பெருவிழாவில், 2,800 திருமுழுக்குகள்

உயிர்ப்பு ஞாயிறன்று, ஹாங்காங் தலத்திருஅவையில் 2,800க்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்று, கத்தோலிக்கத் திருஅவையில் இணைக்கப்பெறுவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று, ஹாங்காங் தலத்திருஅவையில் 2,800க்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்று, கத்தோலிக்கத் திருஅவையில் இணைக்கப்பெறுவர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் வயதுக்கு வந்தவர்கள் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

மார்ச் 24ம் தேதி, ஞாயிறு முதல், கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில், ஹாங்காங் அப்போஸ்தலிக்க நிர்வாகியான கர்தினால் John Tong Hon அவர்களும், ஹாங்காங் முன்னாள் ஆயரான கர்தினால் Joseph Zen Ze-kiun அவர்களும், திருமுழுக்கு பெற விழைவோரைச் சந்தித்து, அவர்கள் திருமுழுக்கு பெறுவதற்குரிய தகுதியை ஆய்வு செய்தனர்.

திருமுழுக்கு பெற விழைவோரில் பலர், ஏற்கனவே ஹாங்காங் பங்குத்தளங்களில் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்றும், இவர்களது வருகையால் தலத்திருஅவை இன்னும் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும் என்றும் பாப்பிறை மறைபரப்புப் பணியாளர்களான PIME சபையின் தலைவர், அருள்பணி Giorgio Pasini அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

உயிர்ப்பு ஞாயிறன்று திருமுழுக்கு பெறுவோரில் பலர், அலுவலகங்களில் பணியாற்றுவோர் என்றும், இவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள், அல்லது, வலைத்தளங்கள் வழியே, கத்தோலிக்கத் திருமறையைக் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டு, திருஅவையை நாடி வந்துள்ளனர் என்று, அருள்பணி Pasini அவர்கள் எடுத்துரைத்தார். (AsiaNews)

10 April 2019, 16:35